(BBC) இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை சிறையை உடைத்து பொதுமக்கள் வெளியில் இழுத்துவந்தனர்.
பாலியல் குற்றம் தொடர்பான விவாதம் சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறது.
திமாபூரில் பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர் குழுக்கள் புதன் கிழமையன்று போராட்டத்தில் இறங்கின. இந்தப் போராட்டத்தில் சுமார் 4000 பேர் திரண்டிருந்த நிலையில் காவல்துறையினர் அவர்களைக் கலைக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் காவலர்களை மீறி சிறைக்குள் சென்று ஃபரித்கான் என்ற அந்த நபரை பிடித்து தெருவுக்கு இழுத்து வந்தனர். அந்த நபர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டார். தெருத்தெருவாக இழுத்துவரப்பட்ட அந்த நபர் திமாப்பூரில் தூக்கில் தொங்கவிடப்பட்டார்.
இந்தக் கும்பலைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.
'சிறையின் இரண்டு கதவுகளை உடைத்து அந்த நபரை பிடித்த கும்பல் நகரின் பிரதான பகுதியான மணிக் கூண்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றது' என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
அந்த நபர் வங்க மொழி பேசக்கூடிய முஸ்லிம் என்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை தெரிவிக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்ததாக ஃபரீத் கான் கடந்த பிப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கும் அருகிலிருக்கும் வங்க தேசத்திலிருந்து வரும் வங்க மொழி பேசக்கூடியவர்களுக்கும் இடையில் மோதல் நடப்பது வழக்கமாகியிருக்கிறது.
மக்களே குற்றவாளிகளைத் தண்டிப்பது இந்தியாவில் அவ்வப்போது நடப்பதுதான் என்றாலும் இவ்வளவு பெரிய அளவில் நடப்பது மிக அரிதான நிகழ்வாகும்.
நகரின் பல இடங்களில் தீ வைப்புச் சம்பவங்களும் நடந்ததால் திமாபூரில் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிபிசியின் அவணப் படமான இந்தியாஸ் டாட்டர் படத்தை தடை செய்ய இந்திய அரசு முடிவுசெய்த பிறகுஇ பாலியல் வல்லுறவு குறித்த விவாதங்கள் மீண்டும் பொதுமக்களின் கவனத்திற்கு வந்திருக்கின்றன.
