புதிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். அத்துடன் அவ்வாறு தேர்தல் நடத்தி தெரிவாகின்ற உறுப்பினர்களின் ஊடாகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் அரசாங்கம் பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமானால் அது முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடிகளை மேற்கொண்ட சில அரசியல் பிரமுகர்கள் தமது கறுப்பு பணங்களை பாதுகாத்து கொள்ளவும் சட்டத்தின் பிடியில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்து விடும் எனவும் சுட்டிக்காட்டியது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு ரில்வின் சில்வா தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தற்போதுள்ள பாராளுமன்றத்தின் ஊடாக தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே புதிய அரசானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு தேர்தல் முறைமை மாற்றப்பட்டாலும் எதிர்வரும் பொது தேர்தலானது பழைய முறைப்படியே நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
இதேவேளை புதிய அரசானது பொது தேர்தலைகாலம் தாமதித்தால் முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடிகளை மேற்கொண்ட சில அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட சில தரப்பினர் ஊழல் மோசடிகள் மூலம் சேகரித்த கோடிக்கணக்கான கறுப்பு பணத்தையும் தமது சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் கைப்பற்றிய சொத்துக்களை தக்க வைத்து கொள்ள வாய்ப்பாக அமைந்து விடும். இதனை கவனத்தில் கொண்டே சில கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்வரும் பொது தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தேர்தல் முறைமையை மாற்றுவது என இரண்டையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமைகள் குழப்பி கொண்டுள்ளன. தேர்தல் முறைமையை மாற்றுவதில் எமது கட்சி எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காது. ஆனால் அதற்கு முன்னர் நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
அதற்கு அடுத்தபடியாக நிறைவேற்று ஜனாதிபதி முறையுடன் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொடர்பான ஒழுக்க நெறியையும் உருவாக்க வேண்டும். இன்றைய கால கட்டங்களில் அரசியல் பாதையில் பயணிப்பவர்கள் தமது ஊழல் செயற்பாடுகளினால் சம்பாதித்த கறுப்பு பணத்தையே செலவழிக்கின்றனரே தவிர தாம் உழைத்த பணத்தை செலவழிக்கவில்லை. எனவே இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும். தொடர்ந்தும் ஒரு பலமான கட்சிக்கு வாக்களிக்கும் முறை இல்லாதொழிக்கப்பட்டு சம அந்தஸ்து பெறும் வகையில் அனைத்து கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.
புதிய அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தேர்தல் முறைமை மாற்றப்பட்டாலும் எதிர்வரும் பொது தேர்தலானது பழைய முறைப்படியே நடத்தப்படவேண்டும். தேர்தல் முறையானது மக்களின் பிரச்சினைகளை இலகுவான முறையில் கலந்துரையாடி தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தல் வேண்டும். குறிப்பிட்ட இந்த விடயங்களில் எமது கட்சி உறுதியாக உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலை எடுத்தோமானால் மக்களிடமும் சில கட்சிகளிடமும் இரண்டு விடயங்கள் கேள்வியாக இருந்தன.அதில் ஒன்று நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறையை நீக்குவதா? அல்லது நாட்டில் காணப்படுகின்ற தேர்தல் முறையை நீக்குவதா ? என்பதாகும்.
இந்த குறிப்பிட்ட இரண்டு விடயங்களை கருத்திற்கொண்டே முன்னைய ஜனாதிபதியினால் மேற்கொண்ட மோசமான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து புதிய அரசின் கீழ் புதியதொரு ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்தினர். இவ்வாறான நிலையில் புதிய அரசினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் ஒரு மந்தமான போக்கின் அடிப்படையிலேயே செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. மறுபுறம் இவர்கள் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
எனவே அரசானது தமது 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் நல்லாட்சியின் முக்கிய அங்கங்களே இவை என்பதை அரசானது புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அரசு தொடர்பில் எமது கட்சிக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. மக்களுக்கான உயர்ந்த மட்ட சேவையினை வழங்கும் தேசிய அரசாங்கத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம். மாறாக முன்னைய அரசாங்கத்தில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டி சுகபோகம் அனுபவித்த சில அரசியல்வாதிகள் தமது செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் சட்டத்தில் இருந்து தம்மை பாதுகாக்கும் நோக்கின் அடிப்படையில் தேசிய அரசு அமையப் பெறுமானால் அது புதிய அரசினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனை எமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாட்டை விட்டு வெ யியேற்றுவது தொடர்பில் எமது கட்சியின் பங்களிப்பு இருப்பதாக சில தரப்பினரால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது அர்த்தமற்றதாகும். இவரின் பிரச்சினையானது நாட்டின் குடியுரிமை சார்ந்த பிரச்சினையே தவிர எமக்கு எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பில் நாம் கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சிக்கின்றார். ஆனால் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர். எனவே மீண்டும் அரசியலில் ஈடுபட அவருக்கு தார்மீக உரிமை இல்லை.
Source Virakesary
