(பழீல் அப்துல் கபூர்)
'தலைமைத்துவப் பொறுப்பிலுள்ளவர்களும் மனிதர்களே என்றவகையில் தவறுகள் ஏற்பட முடியும். ஆனால், அந்தத்தவறுகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து அவற்றைத் திருத்திக் கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமைத்துவமே சமூகத்திற்குப் பிரயோசனமான, பாதுகாப்பான தலைமைத்துவமாகும்.' எனபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
'தலைமைத்துவப் பொறுப்பிலுள்ளவர்களும் மனிதர்களே என்றவகையில் தவறுகள் ஏற்பட முடியும். ஆனால், அந்தத்தவறுகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து அவற்றைத் திருத்திக் கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமைத்துவமே சமூகத்திற்குப் பிரயோசனமான, பாதுகாப்பான தலைமைத்துவமாகும்.' எனபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த 26.02.2015 அன்று பண்டாரகம அல்-கஸ்ஸாலிவிதியாலயத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவத் தலைவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு ஒரு முக்கிய அம்சமாக அமைந்த இவ்விழாவில் உரையாற்றும்போது அவர் மேலும்தெரிவித்ததாவது,
'மாணவத் தலைவர் என்ற பதவி, உங்கள் பாடசாலை வாழ்க்கையில் நீங்கள் அடைந்து கொள்ளக் கூடிய ஒரு முக்கிய தலைமைத்துவப் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பில் இருந்து கொண்டு எவ்வாறு நீங்கள் உங்களது ஆளுமைகளையும், தலைமைத்துவப் பண்புகளையும், வளர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள் என்பதில்தான் சமூகத்திற்கான உங்களது எதிர்காலப் பங்களிப்புத் தங்கியிருக்கிறது.
ஒருவர் பெற்றுக் கொள்கின்ற கல்வி முதலில் அவருக்கு பிரயோசனம் அளிக்க வேண்டும். அடுத்ததாக, அவர் சார்ந்த சமூகத்திற்கும் அவரது நாட்டுக்கும் பிரயோசனம் அளிக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் கல்வி முழுமையான அர்த்தம் பெறுகிறது.
கல்வி மூலமான அடைவு என்பது வெறும் பரீட்சைப் பெறுபேறுகள் மாத்திரமே என்கின்ற ஒரு மிகத் தவறான மனோ நிலை நம்சமூகத்தில் இருக்கிறது. இந்நாட்டில் ஆரம்பம் முதல் உயர் தரம் வரை இலவசமாகக் கல்வி வழங்கப்படுகின்ற ஒரு அம்சம் உண்மையில் ஒரு வரப்பிரசாதமே. ஆனால், அந்தக் கல்விமுறை ஊடாக ஏன் இன்னும் முழுமையான பிரயோசனம் நம் நாட்டுக்கு கிடைக்க வில்லை. அதற்கு பிரதான காரணம், பரீட்டைசப் பெறுபேறுகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு கல்வி நோக்கப்படுவதுவேயாகும்.
மேலைத்தேய நாடுகளிலிருந்து நாம் முன்னுதாரங்களை எடுத்துக் கொண்டால் நமது கல்வி முறை எவ்வாறு முன்னேற்றப்பட வேண்டும் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
விடயங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்ற கல்விமுறைக்கு பதிலாக கற்கின்ற விடயங்களை பிரயோகம் செய்கின்ற, ஆய்வுக்கு உட்படுத்துகின்ற கல்வி முறை அவசியப்படுகிறது. அது போலவே பாட விதானங்களுகளுக்கு அப்பால் மாணவர்களின் பொது அறிவு, சமூகப்பொறுப்பு, கள அனுபவம், ஆளுமை விருத்தி, தலைமைத்துவத் திறன் என்பன வளர்க்கப்படவேண்டும். அந்த வகையில் மாணவத் தலைவர் என்கின்ற பதவிமிக முக்கியத்துவம் பெறுகின்றது.
மாணவர்களாக இருக்கின்ற நீங்கள் சமூகத்திற்குப் பிரயோசனமான ஆளுமை மிக்கத் தலைவர்களாக உருவாகவேண்டும். இதனை இலக்காகக் கொண்டு உங்களை நீங்கள் இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு விடயங்களை உங்களுக்கு ஆலோசனையாகச் சொல்ல விரும்புகின்றேன்.
முதலாவது, அதிகம் செவியேற்பவர்களாக இருக்க வேண்டும். விடயங்களுக்கு அதிகம் காது கொடுத்துக் கேட்பவர்களே நல்ல தலைவர்களாக இருக்கமுடியும். இரண்டாவதாக, நாம் விடும் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்காமல் அதனை ஏற்றுக் கொள்கின்ற மனோ நிலையை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், தலைமைத்துவப் பொறுப்பிலுள்ளவர்களும் மனிதர்கள் என்ற வகையில் சில வேளைகளில் தவறுகள் ஏற்பட முடியும். ஆனால் அந்தத் தவறுகளை மூடி மறைக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து அவற்றைத் திருத்திக் கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமைத்துவமே சமூகத்திற்குப் பிரயோசனமான பாதுகாப்பான தலைமைத்துவமாகும்".
