Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 8, 2015

Unknown

ஆகாயமும் கடலும் வைத்திருப்பவள்

(எம்.எல்.எம்.அன்ஸார்)

பூக்கள் எனக்கு தண்ணீர் வார்த்து
குளிப்பாட்டிவிட வேண்டும்.
தலை துவட்டி ஈரம் காய்த்து விடுவதற்கு
நிலவை இறங்கி வரச்சொல்.
நட்சத்திரங்களை ஆய்ந்து கூந்தலில் குத்தி விடு.
பெருமைக்குரியவள் நான்
*

இறுகக் கட்டிப்பிடி சதைகள் நசிந்து நொறுங்க
உன் முத்தங்கள் அடிக்கடி வந்து மொய்ப்பதற்கு
ஆவலோடு என்னை பூக்க வைத்து காத்துக்கிடக்கிறேன்.
சுவாசக் காற்றால் ஆடைகள் தைத்து அணிவித்து விடு.
எந்த வேளையும் சிரிப்பைத் தீத்தி
என்னை கொழுக்கப் பண்ணு .
உன் காதலை குவளை குவளையாகப் பருகும்
தாகமுடையவள்
*
என் சுமைகளின் பாதியை அள்ளிக் கொண்டுபோய் கொட்டுவதற்கு
உன் கைகளுக்கும் உத்தரவிடு.
என்னை கறியாக்கிச் சாப்பிடும் அடுப்பு நெருப்பை
பனியாய்க் குழைத்துப் பூசி
ஆறுதல் தந்து அற்புதம் காட்டு.
ஜன்னல் விழித்து திரைச் சீலை ஒதுங்கி நிற்கும்
பட்டப் பகலிலும் கூட
ஒரு நோன்புப்  பெருநாளைப் போல என்னைக் கொண்டாடு
*
மின்னலைப் பிளந்து கடலைத் தேக்கி
ஏழு வானங்களை நீந்திக் கடக்க
இயலுமென்பதை தாங்கிக் கொள்.
இந்தக் குரலின் சண்டித் தனத்தை
வீரம் என்று பாராட்டி விளங்கப்படுத்து.
என் மொழியைத் தோண்டி புதையல்களை மட்டும் எடு
*
தூரங்களும் குழிகளும் பற்றிய பயம் கொள்ளாத
என் நடைகளுக்கு இணக்கம் தந்துதவு.
புறங்கழுவிய ஊத்தைத் தண்ணீரை
என்மீது கொட்ட
வாளியோடு காத்து  நிற்பவர்களின் தோள் மீது
பிசாசின் குணத்தில் பாய்ந்தேறி
கோபம் தீர்க்கும் திமிர் பிடித்தவள்
*
மற்றப்படி
மணக்கும் பூக்களால் படைக்கப்பட்டவள்.
என்னை மூடியொதுக்க திட்டமிடுகின்ற இருள்களை சாம்பலாக்க
காட்டுத் தீயை கைகளில் பாதுகாக்கும்
தேவையும் உள்ளது.
ஆகாயமும் கடலும் சொந்தமாக வைத்திருக்கிறேன்.
உன்னையும்

(இன்று மகளிர் தினம். இதையொட்டி இக்கவிதை பிரசுரிக்கப்படுகிறது)















Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :