சம்மாந்துறை நகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் சம்மாந்துறை நகரை, அழகுற வடிவமைப்பது தொடர்பாக அனைத்துத் திணைக்களத் தலைவர்களுடனும் கலந்துரையாடி, தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டன.
நகர அபிவிருத்தி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்பச் செயலாளர் எம்.எல்.எம்.என்.முபீன், ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைப் பிரதேச அமைப்பாளர் ஹஸனலி, நகர அபிவிருத்தி அதிகார சபை மேலதிகப் பணிப்பாளர் நாயகம் பிறிகேடியர். சமந்த ஜெயசுந்தர, திட்ட முகாமைத்துவப் பணிப்பாளர் மஹிந்த விதானாராட்சி, பிரதிப் பணிப்பாளர் எச்.டபிள்யூ.சோமரத்ன, காணி மீட்பு, அபிவிருத்திக் கூட்டுத் தாபன பிரதிப் பொது முகாமையாளர் எஸ்.அமரசிங்க, பிரதம பணிப்பாளர் எல்.றோய் பினாண்டோ, கிழக்கு மாகாண நீர்பாசன தினைக்கள பிரதம பொறியிலாளர்களான எம்.ஜஃபர், எஸ்.சிவபாத சுந்தரம், கிழக்கு மாகாண போக்கு வரத்துச் சபை பொது முகாமையாளர் எம்.எம்.சித்தீக் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறைப் பிரதேசத்தின் வாய்க்கால், வடிகான்களைத் திட்டமிட்டு அமைத்தல், பாதை வளைவுகளைப் பொருத்தமாகத் திட்டமிடலும்,பாதைகளைச் சீராகச் செப்பனிடலும், மின்சாரப் பிரச்சினைகளைச் சீர் செய்தலும், குடிநீர் வசதிகளைத் தாராளமாக ஏற்படுத்தலும், போக்கு வரத்து வசதிகளை விஷ்தரித்தலும், இ.போ.ச பஸ் டிப்போ அமைத்தலும், ஜனாதிபதி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணிகளைத் துரிதப்படுத்தலும் போன்ற பல்வேறு அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதன் மூலம் சம்மாந்துறை நகரை எழில் கொஞ்சும் நகராக மாற்றியமைக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.