Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 16, 2015

Unknown

புதிய தேர்தல் முறைமையும் திறந்த வெளி கேள்விகளும் - ஜுனைட் நளீமி

தேர்தல் முறைமை தொடர்பான திறந்த கலந்தோரையாடல் ஒன்றினை முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமாகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் அவர்கள் தனது பூர்வீக நகரான ஏறாவூரில் ஏற்பாடு செய்திருந்தார். 

பொதுவான அழைப்பிதழ் என்றாலும் கலந்து கொள்ள வேண்டும் ஆர்வ மேலீட்டால் சென்றிருந்தேன். சமகாலத்தில் சிறுபான்மை சமூகம் எதிர் கொள்ளும் அரசியல் ரீதியான முக்கிய சவாலான புதிய தேர்தல் முறைமை பற்றிய தலைப்பு கருத்தாடலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


திறந்த வெளியாக இருந்த போதும் கௌரவ தவிசாளரதும் இறுதி இலக்கு அவரது வார்த்தைப்பிரயோகத்தில் சொல்வதானால் Polarization (துருவ மயப்படுத்த) பிரதேச அரசியல் நலன் சார்ந்ததாக முடிவுரை பெற்று செல்ல முற்பட்டதனால் தங்களிடம் சில கேள்விகளை கேற்க முடியாமல் போனது வாஸ்த்தவம். என்ற போதும் உரையாடல் தொடர்கிறது. திறந்த வெளி, இலங்கை சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இக்கருத்துக்களில் உங்களின் பதில்களையும் எதிர்பார்க்கின்றது.

குறிப்பாக இலங்கையில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த கருத்து இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 2006 ஆண்டு ஏப்ரல் 4 ம் திகதி தேர்தல் சீர்திருத்தம் மீதான பாராளுமன்ற தெரிவிக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்த்தனவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஆறாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். அதற்குப்பின்னால் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களும் அரசியல் நிகழ்வுகளும் இத்திருத்த சட்ட மூலம் தொடர்பில் கவனத்தை கூடுதலாக செலுத்தி இருக்கவில்லை. என்ற போதும் பௌத்த கடும்போக்குவாத கட்சிகள் தொடர்ந்தும் இம்மாற்ற அமுலாக்கல் குறித்து செயற்பட்டு வந்ததன் உச்ச கட்டமே இன்று 20வது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்ததாகும். அதாவது தேர்தல் முறைமை மாற்றமாகும் என்பதனை மறுக்க முடியாது. 

சிறுபானமையினர் பேரம் பேசும் சக்தியாகவோ அல்லது ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாகவோ இருந்து விடக்கூடாது என்பதற்கான முன்னெடுப்பாகவே இம்முறை மாற்றம் குறித்து அடிப்படைவாத சமூகம் பேசு பொருளாக கொண்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது பொது வேற்பாலருக்கான அணியினர் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்றாக இதுவும் பேசப்பட்டது என்பதனை நீங்கள் அறிவிர்கள். அத்தகைய சூழ்நிலையில் நீங்களும் மௌனித்து இருந்தது எதுவென்று புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. 

தேசியக்கட்சியின் முக்கிய பொருப்பினில் இருந்தது மாத்திரம் அல்லாது ஆட்சி மாற்றத்தில் பங்காளிக்கட்சியாக பின்னாளில் மாறிய போதும் இது குறித்த தங்களதும் கட்சியினதும் நிலைப்பாடுகளை எவ்வாறு முன்வைத்தீர்கள் அத்துடன் எந்தளவு சமூக மயப்படுத்தினீர்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. 

இது ஒரு புறமிருக்க ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பல்கட்சி கலந்துரையாடல்கள் பாராளுமன்றிலும் வெளியிலும் பல்வேறு தரப்புக்களால் முன்வைக்கப்பட்டதுடன் தாங்கள் சார்ந்த கட்சியும் பங்கேற்றிருந்ததை நீங்கள் மறுக்க முடியாது. அத்தகைய கலந்துரையாடல்கள் குறித்து சமூகத்திற்கு ஏன் அவ்வப்போதே தகவல் பரிமாற்றம் செய்து ஒரு சமூகம் சார்ந்த கலந்துரையாடலுடன் கூடிய ஒரு முன்மொழிவை அல்லது நகலை சமர்ப்பிக்க முடியாது போனது. அல்லது இது தொடர்பில் சமூக தளத்தில் கருத்தாடலை ஆரம்பித்து வைத்து தங்களது சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களை பகிர முடியாமல் போனது என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.

தேர்தல் முறை மாறுகின்ற போது சிறுபான்மைக்கட்சிகள் பெரும்பான்மைக்கட்சிகளால் விழுங்கப்பட்டு செரிமானம் அடைந்து போகலாம் என்ற அச்சப்பாட்டை நீங்கள்; திறந்த வெளியிலே குறிப்பிட்டபோதும், புதிய தேர்தல் முன்மொழிவுகள் ஒற்றைத்தொகுதி அடங்கிய கலப்பு முறையாக அமையுமானால் கிடைக்கப்பெறும் ஒரு சில ஆசனங்களை வைத்து எத்தகைய பேரம் பேசலை முஸ்லிம் அரசியல் முன்கொண்டு செல்ல முடியும் என்பதனை நீங்கள் விளக்க வேண்டியும் உள்ளது.

இதுவொரு புறமிருக்க ஜாதிக ஹெல உறுமய தலைமையிலான தேர்தல் திருத்தம் குறித்த குழுவினரது சிபாரிசுகள் சில போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேறும் பட்சத்தில் வடகிழக்குக்கு வெளியில் வாழும் சிதறுண்ட முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த முஸ்லிம் தேசிய கட்சிகளின் கொள்கை எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதனை நீங்கள் விலக்கியே ஆகவேண்டும் என்ற நிலையும் காணப்படுகின்றது. ஏனெனில் தமிழ்த்தேசிய அரசியல் மிக சாணக்கியம் உள்ளதாக செயற்படுவதனால் வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள் அவர்கள் தமது அரசியல் ஆசனங்களை பெற்றுக்கொள்வதில் தலையிடாக்கொள்கையினை கொண்டிருப்பதனை காணமுடிகின்றது. 

ஆனால் எல்லா தொகுதிகளிலும்; காலை வைத்துக்கொண்டு கிடைப்பதனை கிடைக்காமல் செய்யும் அரசியல் முதிர்ச்சியின்மை குறித்து முஸ்லிம் கட்சிகள் செய்யும் வரலாற்றுத்தவறு குறித்த தங்கள் வாசிப்புதான் என்ன என்பதனையும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஊவா தேர்தலில் இத்தகைய அரசியல் கபடத்தனம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு இல்லாமல் செய்து விட்டதை உதாரணமாக சமூகம் இன்னும் மறக்க வில்லை என நினைக்கின்றேன். 

சில போது மூதூர் தொகுதியும், அம்பாறையில் மூன்று தொகுதிகளும், புத்தளம், கொழும்பு, பேருவளை தொகுதிகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான சிந்தனையை தூக்கி பிடித்துக்கொண்டு கனவுலகில் சஞ்சரிக்கும்; நிலையில் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்படுகின்ற போது ஏற்கனவே 148 ஆக உள்ள தொகுதிகள் 145ஆக மாற்றம் பெருமானால் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளுடன் பெரும்பான்மை சமூகத்தின் நிலப்பரப்பும் வாக்காளர் கனதியும் திணிக்கப்படுமானால் முஸ்லிம் கட்சிகளது கணிப்பு குறித்து உங்களது கருத்துக்களும் நோக்கத்தக்கது.

இன்னு மொரு விடயம் குறித்து பேசியே ஆகவேண்டும். தேர்தல் முறைமை மாற்றுவதானால் எல்லை மீள் நிர்ணயம் செய்தே ஆகவேண்டும் என்பது ஏற்புடையது. இதற்கான மாதிரி வரைபுகள் தயார் நிலையிலேயே தற்போதய அரசின் பௌத்த அடிப்படைவாத கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இத்தகைய சூழ் நிலைகளில் தாங்கள் சார்ந்த தேசிய கட்சியும் ஏனைய முஸ்லிம் கட்சிகளது வகிபாகம் குறித்து நீங்கள் பேசியே ஆகவேண்டும். எத்தகைய முன் மொழிவுகளை சமூகத்தலத்தினூடாக அரசுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் என்ற வினாவும் விடை காணப்பட வேண்டியதே. 

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள எல்லை மீள் வரைபு மாதிரியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகள் பல ஒன்றாக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் குறைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நடைமுறைக்கு வருமானால் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி நிதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. இது குறித்து தாங்கள் சார்ந்த தேசிய கட்சி உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் எத்தகைய முயற்சிகளை முன் கொண்டு சென்றுள்ளன என்பதுவும் சமூகத்தளத்தில் கேள்விக்குறியாகவே உள்ளது.

இன்னுமொரு விடயம் அரசியலில் பேரம் பேசுதலும் தேசியப்பட்டியளுக்கான கனிப்பீடுகளுக்கும் அப்பால் சிருபான்மைக்கட்சியான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மலையக கட்சிகள், இடது சாரிக் கட்சிகளுடனான மனந்திறந்த இணக்கப்பாட்டு அரசியலினூடாக ஏன் சிறுபான்மையினரது அபிலாசைகளை வெல்ல முடியாதென்ற கேள்விக்கும் குறுநில அரசியல் சிந்தனைகளுக்கப்பால் தேசிய ரீதியிலான தங்கள் பதில்களும் திறந்த கலந்துரையாடலுக்கான விடயமாக அமையுமென நினைக்கின்றேன்.

இத்தகைய பல்வேறு விடயங்கள் காலம் கடந்து மேடை வந்தாலும் விவாதிக்கப்பட வேண்டியதே. இத்தகைய கேள்விகளுக்கப்பால் நீங்கலாவது இத்தகைய கருத்தாடலை துவக்கி வைத்ததில் நன்றிகள் உண்டு. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இத்தகைய தேர்தல் முறைமை குறித்த அச்சப்பாட்டினை நான் எழுதிய போது இவற்றையெல்லாம் இப்போது பேச வேண்டாம் என குறிப்பிட்டவர்கள் மௌனித்து நிற்பதும் கவலைக்குரியதே. களையெடுக்கு அவசரத்தில் பயிரையே அழித்துவிடும் நிலையில் முஸ்லிம் கட்சிகளும் சமூக உணர்ச்சிகளும் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது. 

இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் வெருமனே தவிசாளர் மீதான எதிர்வினைகள் மாத்திரம் அல்ல. இன்று சிறு பான்மை முஸ்லிம் கட்சிகள் என்று பெட்டிக்கடை போட்டுகொண்டு திரியும் அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் முன்வைக்கப்பட்டுள்ள சமூகம் சார்ந்த கணைகளே. பெரும்பான்மை கட்சிகளில் நனைந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் இது குறித்து ஆக்க பூர்வமான கலந்துரையாடல்களை சமூகத்தளத்தில் கொண்டு செல்வது சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால அரசியல் குறித்த நல்ல தீர்மானத்தை எட்ட உதவியாக அமையும்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :