Featured Home (TOP)

Recent Comments

Monday, April 6, 2015

Unknown

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் வின் வாழ்த்துச் செய்தி


தேவ அதிரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஊடகவியலாளர்
ஒன்றியத்திற்கு எமது வாழ்த்துக்கள்

தமது முன்னைய இனவாதக் கருத்துக்களை விலக்கிக்கொண்டு தமிழ் - முஸ்லிம்
சமூகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து 'கிழக்கு மாகாண
ஊடகவியலாளர் ஒன்றியம்' என்ற பெயரில் புதிய ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றினை
அமைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவ அதிரன் அவர்கள்
முன்வந்துள்ளமையானது, தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கிழக்கு
ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு
விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று (05.04.2015) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 'வொய்ஸ்
ஒப் மீடீயா' அலுவலகத்தில் 'கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்' என்ற
பெயரில் புதிய ஊடகவியலாளர் அமைப்பொன்று உருவாகியிருப்பதை முன்னிட்டு
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள
அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது:

சில காலத்திற்கு முன்னர் மட்டக்களப்பு பொதுநூலக மண்டபத்தில் 'ஐக்கிய
ஊடகவியலாளர் சங்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளர் அமைப்பொன்றை உருவாக்கும்
நோக்குடன் தேவ அதிரனால் கூட்டப்பட்ட கூட்டத்தில், முஸ்லிம்
ஊடகவியலாளர்களையும் உள்வாங்கி அச்சங்கத்தை அமைப்போம் என சில தமிழ்
ஊடகவியலாளர்கள் முற்போக்குக் கருத்துக்களை முன்வைத்த வேளையில், அதனை
இனவாத சிந்தனையுடன் நிராகரித்து தனித்தமிழ் ஊடகவியலாளர்களை மாத்திரம்
உள்வாங்கி அச்சங்கம் அமைக்கப்பட்டதை இச்சமயத்தில் நினைவுபடுத்திப்
பார்க்கின்றேன்.

அவ்வாறே முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பிரதேச, மாவட்ட, மாகாண ரீதியில் பல
ஊடகவியலாளர் அமைப்புக்களை கடந்த காலங்களில் முஸ்லிம் இனவாதச்
சிந்தனையுடன் உருவாக்கி வந்துள்ளனர்.

எனினும், சமீபத்தில் 'கிழக்கு ஊடக சங்கம்' என்ற பெயரில் எனது தலைமையில்
அமைக்கப்பட்டுள்ள ஊடக அமைப்பானது, இன - மத - பிரதேசவாத
வேறுபாடுகளுக்கப்பால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகத்துறை சார்ந்த
அனைவரையும் ஒன்றிணைத்துச் செயற்படும் குறிக்கோளுக்கு இம்மாவட்டத்தில்
செயற்படும் ஊடகத்துறையினர் வரவேற்பளித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 13 தமிழ் - முஸ்லிம் ஊடகத்துறையினர்
எமது சங்கத்தில் புதிதாக அங்கத்துவம் பெற விண்ணப்பித்துள்ளது அவர்களின்
இந்த ஆதரவை எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது குறுகிய இனவாத சிந்தனையிலிருந்து தற்போது
விழிப்படைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவ அதிரன் அவர்கள்,
இம்மாவட்டத்தில் மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் - முஸ்லிம்
ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து 'கிழக்கு மாகாண ஊடகவியலாளர்
ஒன்றியம்' என்ற பெயரில் ஒரு புதிய ஊடகவியலாளர் அமைப்பினை நேற்றைய தினம்
ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இதனை எமது 'கிழக்கு ஊடக
சங்கம்' வெகுவாக வரவேற்கின்றது.

எனினும் நேற்றைய தினமே ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியத்திற்காக, தெரிவு
செய்யப்பட்டு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி மூலமாக அழைக்கப்பட்டிருந்த
ஊடகவியலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அங்கத்தவர் சேர்வு
விண்ணப்பப்படிவங்களில் 2013ம் ஆண்டு காலப்பகுதியிலான திகதிகள்
குறிக்கப்பட்டு அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது குறித்து
ஊடகவியலாளர் தமது அதிருப்தியையும், சந்தேகத்தையும் எனது கவனத்திற்குக்
கொண்டு வந்துள்ளனர்.

ஏன் இவ்வாறு 2 வருட காலம் முன் திகதியிட்டு அங்கத்தவர்கள்
உள்வாங்கப்பட்டனர்? என்பதற்கான காரணத்தை அமைப்பின் தலைவராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவ அதிரன் அவர்கள் ஊடக
அறிக்கையொன்றின் மூலம் தெளிவுபடுத்தினால் நேற்றைய தினம் இணைந்த
அங்கத்தவர்கள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வமைப்பில் இணைய ஆர்வம்கொண்டுள்ள
சக ஊடகவியலாளர்கள் மத்தியில் உலாவி வரும் பலவாறான சந்தேகங்கள் மற்றும்
கருத்து வேறுபாடுகள் நிவர்த்தியடைய ஏதுவாக இருக்கும் என்பது எனது
தாழ்மையான அபிப்பிராயமாகும். -இவ்வாறு புவி. றஹ்மதுழ்ழாஹ் தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :