(ஏ.எல்.டீன்பைரூஸ்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனக்கு கிடைத்த அத்தனை வசதி,வாய்ப்புகளையும் உதறித்தள்ளிவிட்டு எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சமூகத்தின் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விடயத்தில் அவர் எடுத்த தீர்மானத்தின் காரணமாகவே இன்று கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
முதலமைச்சர் என்பவர் ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்ல மாறாக தமிழ், முஸ்லிம் ,சிங்களம் என எல்லா இன மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய ஒருவராக அவர் இருக்க வேண்டுமே அன்றி வெறும் இனவாத செயல்பாடுகளை மாத்திரம் முன்னெடுக்க கூடிய ஒருவராக இருந்து விடக் கூடாது என்றார்.
30 வருடகால கொடிய யுத்தத்தின் பின்னர் இன்று கிழக்கு மண்ணில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் அச்சமில்லா இருப்பு, எதிர்பார்ப்பு என்பவற்றை எந்த குறைபாடுகளும் இன்றி நிறைவேற்றிக் கொடுக்க எம்மால் ஆன சகல முயற்சிகளையும் நானும் என்னோடு கைகோர்த்துள்ள கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் உறுதி பூண்டுள்ளனர் என்பதனை தெரிவித்துக் கொள்வதாகவும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.