Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 28, 2015

Unknown

காத்தான்குடி நூதனசாலை தொடர்பாக தவிசாளரின் அறிக்கையும் எனது ஆலோசனையும்


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களினால் காத்தான்குடியில் நிறுவப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் விவகாரம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் இன்று(27.04.2015) வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



அவரது இந்த அறிக்கை தொடர்பாக 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்துள்ள ஆலோசனையாவது:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினரைப் பார்வையிடுமாறு நீங்கள்தான் கடிதம் மூலம் கேட்டிருந்தீர்கள். அதன்படி அவர்கள் பார்வையிடுவதற்காக நமதூருக்கு வரத் தயாரான போது நீங்கள்தான் அவசரமாக இந்தியாவுக்குச் செல்வதாகவும், நாடு திரும்பியதும் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் தருவதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.

இருப்பினும் நீங்கள் நாடு திரும்பிய பின்னர் அ.இ.ஜ.உ. சபையினர் நூதன சாலையைப் பார்வையிட உரிய ஏற்பாடுகள் செய்யாமல் அவசர அவசரமாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்தீர்கள்.

உங்களை அரசியல் ரீதியாக வழி நடாத்தும் நா.உ. ஹிஸ்புல்லா அவர்களும் இவ்வாறே காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கும், சம்மேளன நிர்வாகத்திற்கும் நூதனசாலையைப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு அவர்களே வலிந்து கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அவர் அவர்களுக்கும்கூட அதனைப் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இவ்வாறே தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களுடனும் இந்த நூதனசாலை சிலை விவகாரம் தொடர்பாக கலந்து பேசவும், பத்வாக்கள் தொடர்பாக ஆராயவும் நீங்களும் சம்பந்தப்பட்டு நேர காலம் வழங்கிவிட்டு அவர்களுடனான சந்திப்பைத் தவிர்த்துக் கொண்டு அந்த உலமாக்களையும் அப்பட்டமாக ஏமாற்றியதும் நீங்களும், நா.உ. ஹிஸ்புல்லாஹ்வும்தான் என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் தமிழக மார்க்க அறிஞரான கோவை எஸ். ஆய்யூப் அவர்கள் நேற்றிரவு நமதூரில் இந்நூதன சாலைக்கு அருகில் அமைந்த மேடையில் நின்று உருவச்சிலைகளின் தோற்றம் தொடர்பாகவும் பின்னர் அவற்றுக்கு மக்கள் சமூகம் படிப்படியாக வழங்கிய மரியாதை, கண்ணியம், கௌரவம், வழிபாடு போன்றவை பற்றியும் 1½ மணித்தியாலமாக ஆற்றிய விளக்கவுரையானது, எமதூர் மக்களை மாத்திரமன்றி ஆரையம்பதிப் பிரதேசத்தில் வாழும் ஹிந்து மதச் சகோதரர்களின் உள்ளத்தையும் தொட்டுள்ளது.

இதனையடுத்தே இத்தனை நாட்களாக அ.இ.ஜ.உலமாக்களையும், காத்தான்குடி உலமாக்களையும், தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களையும் கணக்கிலெடுக்காது புறந்தள்ளி காரியம் சாதிக்க முற்பட்ட நீங்களும், நா.உ. ஹிஸ்புல்லாவும் இப்போது தமிழ் நாட்டு மார்க்க அறிஞரின் விளக்கத்தையடுத்து சவூதி அரேபியவிலிருந்து உலமாக்களை இறக்குமதி செய்து எமது மக்களின் உள்ளங்களில் மீண்டும் உருவ விவகாரத்திற்கு உரம்போட முனைகிறீர்கள் என்பது இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவாகின்றது.

சவூதி அரேபிய உலமாக்களை இறக்குமதி செய்து உருவச்சிலைகள் குறித்து விளக்கம் கொடுப்பதற்கு முன்னால் உங்களுடனும், நா.உ. ஹிஸ்புல்லா அவர்களுடனும் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு இவ்வூரில் செயற்பட்டு வருகின்ற அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி ஏ.ஜே. அப்துர் றவூப் (மிஸ்பாஹி) அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கி, 'இஸ்லாத்தின் பார்வையில் உருவச்சிலைகள்' எனும் தலைப்பில் இவ்வூர் மக்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்வதுமிகவும் பொருத்தமானது என்பது எனது கருத்தாகும்.

ஏனெனில் 'உருவ விவகாரம்' தொடர்பில் நமதூரிலுள்ள அத்தனை மூத்த - இளைய உலமாக்களுக்கும் ஒரு முன்னோடியான விவரம் தெரிந்தவர் அவர் ஒருவர்தான். அவரை மேடையேற்றி விளக்கம் சொல்ல வைத்து விட்டு, அதிலும் திருப்தியேற்படாதபோது சவூதி அரேபிய உலமாக்களை நீங்கள் அழைத்து வந்து விளக்கமளிக்கச் செய்யலாம்.

ஆனால் ஒன்று, ஏற்கனவே இந்த 'உருவச்சிலை' விவகாரம் தொடர்பில் ஊரிலுள்ள – உலகிலுள்ள எந்தவொரு இஸ்லாமிய அறிஞராலும் 'அவை ஆகும்' என்ற கருத்து முன் வைக்கப்பட்டால், அத்தகையோருடன் அல்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் தாம் விவாதிக்கத் தயார் என தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் அப்துர் றவூப் மௌலவியானாலும், சவூதி உலமாக்களாயினும் 'உருவச்சலைகள் வைப்பது ஆகும்' எனத் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களுடன் பகிரங்கமாக இவ்விடயத்தில் விவாதிக்கச் செய்வதற்கும் நீங்களும், நா.உ. ஹிஸ்புல்லா அவர்களும் தயாராகவும் இருக்க வேண்டும்.

இன்றேல், 'கூலிக்கு மா இடிப்பவர்கள்' என்ற அவப்பெயரே இவர்களுக்கும், இவர்களை அரங்கேற்றுபவர்களுக்கும் இவ்வூர் மக்கள் அளிக்கும் தீர்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :