Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 21, 2015

Unknown

தோணாவில் மீன் பிடித்தல்

(மதியன்பன்)

இப்போது
தோணா என்ற பெயரையே
தோண்டிப் புதைத்து விட்டார்கள்
அப்போதெல்லாம்
அதில்தான் நாங்கள் மீன் பிடிப்போம்.



மாலையானால்
தூண்டில் இரை சகிதம்
இடுப்புத் தண்ணிக்குள்
இறங்கி நிற்பதில் அலாதிப் பிரியம்.

தங்கூசில் துண்டில் கட்டி இரையும் குத்தி
இடையிலே மப்பளர் கட்டி
இடம் பார்த்து வீசுவோம் தூண்டிலை

கண்ணிமைக்கும் நேரம்
மப்ளர் ஓடும் அங்கும், இங்கும்
மாட்டிக்கிட்டாங்க..
ஆவலோடு இழுத்தெடுப்போம்.



பனையான், விரால்
சுங்கான் கெழுத்தி குறட்டை என்று
சுண்டி இழுத்தால்
தூண்டிலில் தொங்கி வருவார்கள்.

மீன் பிடிக்கும் இரை
நாக்கிளிப் புழுக்கள்தான்
ஈரமண்ணைத் தோண்டி இழுத் தெடுத்து
உசிரோடு துண்டு துண்டாக்கி
இரையாய் பயன்படுத்துவோம்.

அப்போதெல்லாம்
அருவருப்புத் தெரிவதில்லை
இலட்சியமே
மீன் பிடித்தல் ஒன்றுதான்.

மீனைக் கழற்றும் போது
சுள் என்று முள் குத்தும்
அப்போது
வலி தெரியாத சுகமொன்று
எம்மை வருடிச் செல்லும்.

களிசனை உடுத்துக் கொண்டு
சாரனை கையிலெடுப்போம்
சாரன்தான் எங்களுக்கு
வலையும், அத்தாங்கும்,
அதை வைத்துத்தான்
சின்ன மீன்களை சிறை பிடிப்போம்.

மாலை நேர மத்ரசா
டியூசன் வகுப்பு எல்லாமே கட்டாகும்.
வீட்டுக்குச் சென்றால் விருந்தென்பதால்
பிரவேசிப்பதெல்லாம்
பின் கதவால்தான்

எங்கள் வருகைக்கு முன்னரே
தகவல் வந்திருக்கும் வீட்டுக்கு..
பிறகென்ன...
கிடைக்கும் இரவுச் சாப்பாட்டோடு
தர்ம அடியும் சேர்ந்து கிடைக்கும்.
தழும்புகள்
தாறுமாறாய் துடைகளில் தவமிருக்கும்.

அடிவலி தாங்கத்தான்
சாரனுக்குள் களிசன் போடுவது
அதையும் கழற்றச் சொல்லி
போனஸ் அடி கிடைக்கும்.

உம்மாவுக்கு
ஒத்தணம் போடுவதே தினமும்
ஓயாத வேலையாகிவிடும்..

இப்போதெல்லாம்
அப்படியொரு வாழ்க்கை
நினைக்க மட்டும்தான்..

21.04.2015

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :