நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படும். தேர்தல் முறைமை மாற்றத்தைக் காரணம் காட்டி பாராளுமன்றத் தேர்தலை தள்ளி வைக்கப்போவதில்லை. தேர்தல் முறைமை மாற்றம் தேவையென்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், அதனை அவசர அவசரமாக ஏற்படுத்த முடியாது என்று ஐ.தே.கட்சி பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தல் பழைய முறையிலேயே நடைபெறும். சிறுபான்மையினக்கட்சிகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் இவ்வாரம் சந்தித்து தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே. கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சரும் ஐ.தே.கட்சி பொதுச் செயலாளருமான கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட பல்வேறு சிவில் அமைப்புக்கள் உட்பட நிபுணர்கள், கல்விமான்கள் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக தத்தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர். அதேவேளை ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.
இந்த யோசனைகள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, சிறுபான்மையினக் கட்சி களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்த கால அவகாசம் கோரியுள்ளது.
விரைவில் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறும். எனவே தேர்தல் முறை மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்த முடியாது. அனைவரது யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது 20ஆவது திருத்தமாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். ஆனால் இந்த நடவடிக்கைகளை அவசர அவசரமாக மேற்கொள்ள முடியாது.
அனைத்து தரப்பினரதும் யோசனைகள் உள்வாங்கப்பட வேண்டும். ஜே.வி.பி. யும் தமது யோசனைகளை முன் வைத்துள்ளது. எனவே நீண்டதொரு நிகழ்ச்சி நிரலுக்கமையவே இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
எப்படியாயினும் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான யோசனைகள் கிடைத்து விடும் என எதிர்பார்க்கின்றோம். உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலமும் முடிவடைந்து விட்டது. அதேவேளை அரசு உறுதியளித்ததற்கமைய 100 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலைமையில் பொதுத்தேர்தலை நடத்துவதே அரசின் முதன்மையான பொறுப்பாகும். தேர்தல் முறைமை மாற்றத்தை காரணம் காட்டி பொதுத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது.
அதனை உடனடியாக நடத்தியாக வேண்டும். மக்களும் பொதுத் தேர்தலையே எதிர்பார்த்துள்ளனர். எனவே தற்போதைய தேர்தல் முறைமைக்கு அமையவே எதிர்வரும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். ஏனென்றால் தற்போதைய பாராளுமன்றத்திற்கு மக்கள் ஆணை இல்லை. இது காலாவதியாகி விட்டது.
எனவே புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்கள் ஆணையை பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். தேர்தல் முறைமை மாற்றம் தேவையென்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் அதனை அவசர அவசரமாக ஏற்படுத்த முடியாது. 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தல் பழைய முறையிலேயே நடைபெறும்.
எமது அரசாங்கத்தை சிறுபான்மை அரசு என விமர்சிக்கின்றனர். ஆனால் கடந்த மே தினத்தில் எமது ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இந்த அரசுக்கு மக்களிடமிருந்த ஆதரவை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
எனவே பொதுத் தேர்தலை நடத்தி உண்மையான மக்கள் சக்கியுள்ள அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளுடனும் பேசி நிறைவேற்றுச் சபையினது அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டு பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவோம். பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது தொடர்பாக எனக்கு பதில் வழங்க முடியாது. அதற்கு உரியவர்கள் உள்ளனர் . ஆனால் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படுவது உறுதியென்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
Source - Virakesary
