பாராளுமன்றத்திற்கு படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் தெரிவு செய்யுங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்.
அவர்களை நிராகரியுங்கள் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுருவாவே சோபித தேரர் நாட்டுக்குத் தேவை “கட்சி மாற்ற” அரசுகள் அல்ல. கொள்கையுடைய ஆட்சியாளர்களே தேவையென்றும் தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே. முன்னணியின் கொள்கை பிரகடன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
தேரர் இங்கு தொடர்ந்து உறையாற்றுகையில், நாட்டின் சட்டம், மற்றும் கொள்கைகளை தயாரிக்கும் இடம்தான் பாராளுமன்றமாகும். எனவே பாராளுமன்றத்திற்கு படித்தவர்கள், பண்பானவர்கள், நேர்மையானவர்களையே தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
இதனால் இத் தேர்தலில் எதனோல், போதைப்பொருள் வியாபாரிகள் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டோர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் வாக்களிக்காது நிராகரிக்க வேண்டும்.
நாட்டை கட்டியெழுப்பக்கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கசினோ, சூதாட்டங்கள், சுவிப் விற்பனை, குதிரைப் பந்தயக்காரர்கள் நாட்டை முன்னேற்ற முடியாது. இவற்றால் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்குள் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தான் எமது நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைத் தொழிலுக்கு செல்கின்றனர். இளைஞர்கள் கொரியாவுக்கு செல்கின்றனர்.
இந்த நாட்டை அழித்தவர்கள் ஆட்சிக்கு வந்த அரசியல் வாதிகளே ஆவார்கள். எனவே அவர்களே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். பிரதான இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் பலனில்லை. எனவே கொள்கைகளை திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
அதற்கான புரட்சியை ஜனவரி 8ஆம் திகதி முன்னெடுத்தோம் அது தொடர வேண்டும். நாட்டு மக்கள் தற்போது கேட்பது அரசியலில் நல்லாட்சியையே ஆகும் என்றும் சோபித தேரர் தெரிவித்தார்.
virakesary.lk

