நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் 5 பேர் கொலை செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த ஐந்து கொலைகளும் தேர்தலுடன் தொடர்புபட்டவை அல்லவெனவும் இரு சம்பவங்கள் குறித்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தேடிவருவதாகவும் அவர் கூறினார்.
நேற்று முன் தினம் சனிக்கிழமை நண்பகல் வாழைச் சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்.பி.சி.எஸ். பாதையின் ரயில் குறுக்கு வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரியின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உட்பட்டு 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (35 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் ஒலுவில பிரதேசத்தில் மற்றொரு கொலை சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் 36 வயதுடைய அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் மேலும் இருவரும் பிரதேசத்தின் குளக்கட்டு ஒன்றின் அருகே மதுபானம் அருந்திய போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளமை ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இதேவேளை மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதிவல, அம்புல் தெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலைச் எய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட நபரின் மனைவியின் மூத்த சகோதரர் இந்த கொலையை செய்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இது இவ்வாறிருக்க தம்பகல்ல பொலிஸ் பிரதேசத்தின் ஹேனஹிடியான எனும் இடத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமும் நேற்று முன் தினம் மாலை வேளை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாலை 5.30 மணியளவில் கத்திக் குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுவிட்டு மீன்டும் வீடு திரும்பிய நிலையில் இரவு 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நெலுவ பொலிஸ் பிரிவில் லேல்வல சந்தியில் வைத்து வெட்டுக்காயங்களுடன் 63 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 7.00 மணிக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இரவு தனது நண்பன் ஒருவருடைய வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொன்டிருந்த போது இவர் இவ்வாறு கொலைச செய்யப்பட்டிருப்பதாக வும் பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் காணாத நிலையில் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
