தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது அல்குர்ஆனை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்த அநுராபுதர மாவட்ட பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக நேற்று பொலிஸ் தலைமையகத்திலும் தேர்தல் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பி.ஜே.பி) சார்பில் அநுராதபுரம் மாவட்டத்தில் 'நாக பாம்பு' சின்னத்தில் போட்டியிடும் சுசந்த ரண்முத்து குமாரணசிங்க எனும் வேட்பாளருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் முறைப்பாட்டினை ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் அதன் உறுப்பினரான ஏ.ஆர்.எம்.சபீன் நேற்று பொலிஸ் தலைமையகத்திலும் தேர்தல் ஆணையாளரிடமும் நேரில் கையளித்தார். இவருடன் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ஸப்ராஸ் ஹம்ஸா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
இதேவேளை இவ் விடயம் தொடர்பான மற்றுமொரு முறைப்பாட்டை ஆர்.ஆர்.டி. அமைப்பின் உறுப்பினரான காதர் முஹைதீனும் நேற்று தேர்தல் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.
மூன்றாவது முறைப்பாடு இன்றைய தினம் முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவரால் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆர்.ஆர்.டி அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
குறித்த வேட்பாளரால் கடந்த 29 ஆம் திகதி தேர்தல் பிரசாரத்தை நோக்காகக் கொண்டு சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட வீடியோ பதிவு ஒன்றிலேயே அவர் அல்குர்ஆனையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதில், முஸ்லிம்களை மரக்கலயா என்றும் தமிழர்களை தெமலுன் என்றும் வர்ணித்துள்ள அவர், அல்குர்ஆன் தொடர்பில் தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். '' ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை 50 வீதத்தை விட அதிகரித்தால் அங்கு வாழும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்.
இதுவே அல்லாஹ்வின் விருப்பமாகும்'' என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக அவர் குறித்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இவை உட்பட மொத்தமாக 6 விடயங்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் குறித்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக இம் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நேரடியாக முறைப்பாட்டைப் பொறுப்பேற்ற தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, குறித்த வீடியோ பதிவை முழுமையாக பார்வையிட்டதுடன் இது தொடர்பில் இன்று திங்கட் கிழமை இடம்பெறவுள்ள கட்சிச் செயலாளர்களின் கூட்டத்தில் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.
அத்துடன் குறித்த வேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் முறைப்பாட்டாளர்களிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
