பொலிஸாருக்கு எதிராக கிடைத்துள்ள 120 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை உள்ளிட்ட விடயங்கள்
குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை குறித்து எதிர்வரும் வாரம் முதல் விசாரணைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்த அவர் முறைப்பாட்டுக்குரிய தரப்பினரை பிராந்திய அலுவலகங்கள் ஊடாக வரவழைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புகளை ஆணைக்குழு பெற்றுக்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸார் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின், செயலாளர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலக்கம் 9, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், கொழும்பு 07 என்ற முகவரிக்கு தெரிவிக்க முடியும் எனவும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே மேலும் தெரிவித்தார்.
