கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின்
கீழான பயனாளிப் பெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கீழான பயனாளிப் பெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த விடயம் குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் குறித்த பெண் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த வீட்டுத்திட்டத்தை வடக்கில் செயற்படுத்தும் ஒரு பங்காளியாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் செயற்படுகின்றது.
முழங்காவில் பகுதியில் இந்திய வீட்டுத்திட்ட பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் முதற்கட்ட நிதிக்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட நிதி வழங்கப்படவுள்ளது.
இலங்கை செஞ்சிலுவை சங்க கொழும்பு அதிகாரிகளே நிதி விடுப்புக்கான அனுமதியை வழங்குவதாகவும் அவர்களில் இருவரே நிதி வழங்குவதற்கான பாலியல் இலஞ்சம் கோரினார்கள் எனவும் குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமும் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட விசேட அலுவலகமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாலியல் இலஞ்சம் தொடர்பான பல சம்பவங்கள் இனம் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
கணவனை இழந்த பெண் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வேறு பலரிடமும் இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாகவும் சிலர் இந்த கோரிக்கைகளுக்கு இணங்கி சென்றதாகவும் தெரிய வருகின்றது.
விடுமுறை நாட்களில் அவர்கள் குறிப்பிடும் இடத்துக்கு சென்று மேலதிகாரியை சந்தித்தால் இலகுவில் நிதியை பெற்றுக்கொள்ளலாம் என தொழில் நுட்ப அலுவலர் ஒருவர் குறித்த பெண்ணிடம் சொன்னதாக இந்த பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டுத்திட்ட பணத்தை உரிய நேரத்தில் தருவதில்லை எனவும் மீறி தாம் கேட்டால் மனிதாபிமானமற்ற முறையில் பேசி மிரட்டுகின்றார்கள் எனவும் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை பாலியல் இலஞ்சம் உள்ளிட்ட 25 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மீது தங்களால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் தலைமைக்காரியாலயம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
