(எம்.எல்.எம்.அன்ஸார் )
எந்தக் கடையில் இப்போதும் இலவசமாக
விஷம் விற்கப்படுகிறது நாகப்பாம்புக்கு?
*
இன்று காலையிலும் எனது வாசலில்
பாம்புக் காடொன்று வளர்ந்து கிடந்தது.
சுபஹ் தொழுதுவிட்டு நான் ஓதியதை
மொட்டை வழித்த மஞ்சள் நாகம்
ஒட்டுக்கேட்டு
பயந்து நடுங்கியதையும் கண்டேன்!
*
சிறுநீர் கழித்தால் கழுவத்தெரியாத சேற்றுப் புழு.
யாரோ கட்டிவிட்ட
நஞ்சுப் பல்லோடு வந்து படமெடுத்தாடி
கொத்தித் தின்னப் பார்க்கிறது குர்ஆனை!
*
கொஞ்ச நாட்களுக்கு முன்னரும் இப்படித்தான்
கண்ட கண்ட இடத்தில் ஹலாலை கடிப்பதற்கு
சாரப்பாம்புகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தி
உசார் செய்து
விஷத்தைக் கக்கி
நாக்கில் கொடுத்தது நாகப் பாம்பு!
*
இதன் பிறகு பாம்புகள்
சீறுவதற்கு படித்து வெளியேறுகிற புற்றாகவே
“பன்சல” வை அவதானித்து கடந்து சென்றிருக்கிறேன்!
*
நாகப்பாம்பே நஞ்சருந்தி செத்துக் கொள்ளுமளவிற்கு
பாம்பின் விஷ பற்களை
இரண்டு விரல்களால் இலேசாகப் பிடுங்கி எறிந்து
செருப்புக் காலால் மிதித்தால்
நசுங்கிச் சாகின்ற நாக்கிழிப் புழுவாக்கியது தேர்தல்!
*
துவேசத்தை முகத்தில் தூக்கி போட்டுக் கொண்டு
எனது வேதத்தை வெட்டிச் சாய்ப்பதற்கு
படமெடுத்தாடுகிறது
போக்கிடம் தெரியாத சாக்கடைப் புழு.
ஒரு “அலிஃப்” பைக் கூட பிடுங்க முடியாமல் தோற்று
செத்த பாம்பாய்
அடங்கிப்போவதை பார்ப்பதற்காவது
எனது சீவனை நீடித்துத் தா ரஹ்மானே!
17-12-2015
-எம்.எல்.எம்.அன்ஸார்
