Featured Home (TOP)

Recent Comments

Sunday, November 1, 2015

avathani Media Network

மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகனம் (ஜீப்) மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிடிகல – தலகத்தே வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்களை அல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு, காயமடைந்த ஆண் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.
Read More
avathani Media Network

அகர ஆயுதம் கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி நிகழ்வு.

(முஹம்மட் ஜெலீல்-நிந்தவூர்)

அகர ஆயுதம் கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி நிகழ்வானது இன்று 01-11-2015 ஞாயிறு நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு இலங்கை கிராமிய இலக்கிய கலைஞரும் சட்டத்தரணியுமான எஸ். முத்துமீரான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு வடக்கு பிரதேச யாழ் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து ஆண் மற்றும் பெண் இலக்கிய கலைஞர்களென பலர் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வானது தமிழ் முஸ்லிம் உறவுகளை இலக்கியத்தினூடக கட்டியெழுப்பும் நோக்கில் கனடா இயங்கு படைப்பாளிகள் உலகு அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர், யோ புரட்சி மற்றும் முல்லைதீபன் ஆகியோரின் தலமையில் இக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

மேலும் இம்முறை அமர்வு கிராமிய கலை இலக்கிய மரபுரை நிகழ்வாக பொல்லடி நிகழ்வொன்றினை பறைசாத்தியமை குறிப்பிடத்தக்கது.








முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்
Read More
avathani Media Network

ஆபாச இணையத் தளங்களை தடை செய்ய கோரி : பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை

ஆபாச இணையத் தளங்களை தடை செய்ய கோரி, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபை தெரிவித்துள்ளது.
சிறுவருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றங்கள் பல பெருகிவர இதுவும் காரணம் என, அந்த சபையின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹீல் டோல் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த மனுவில் மக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் நவம்பர் 4ம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளன.
கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதனையடுத்து குறித்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Read More
avathani Media Network

மட்டக்களப்பில் சர்வதேச சிக்கன தினத்தினை முன்னிட்டு சிறுவர்களைக் கௌரவிக்கும் விழா

சர்வதேச சிக்கன தினத்தினை முன்னிட்டு சிறுவர்களைக் கௌரவிக்கும் வகையிலான விழா வெள்ளிக்கிழமை பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் பி.கே.தர்மதாச, பிராந்திய முகாமையாளர் வி.கே.எம்.எஸ்.குமார, மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், கிளை முகாமையாளர்கள் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மாவட்டத்திலுள்ள வங்கியின் 7 கிளைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 250 சிறுவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் பிரதேச அபிவிருத்தி வங்கியில் கணக்கினைப் பேணும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 24 பேருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் ரூபா 50 ஆயிரத்துக்கு மேல் வைப்பிலிட்ட 8 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட மட்டத்தில் வங்கியினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 12 பேருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அதே நேரம் தமது கிளைகளில் அதிக சேமிப்பினை மேற்கொண்டிருந்த வங்கி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
Read More
avathani Media Network

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பெற்றோர்கள் வெளிநாடு செல்வதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் சித்திபெற்ற கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய மண்ணடபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
வித்தியாலய அதிபர் த.வை.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்!
“மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசமானது யத்தத்தினால் பல இழப்புக்களைச் சந்தித்திருந்தது. இந்த வகையில் கதிரவெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களை கற்பித்த ஆசிரியர்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அதில் வெற்றி கண்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பெற்றோர்கள் வெளிநாடுகளில் தொழிலுக்கு செல்வதன் காரணமாக பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. பல பெற்றோர்கள் வெளிநாடுகளில் இருப்பதன் காரணமாக மாணவர்களில் பலர்  பாடசாலைக்குச் செல்லாது இடைவிலகுகின்றனர். மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கா விட்டால் ஆசிரியர்கள் அதற்கான காரணங்களை அறிந்து மாணவர்களின் வரவு வீதத்தை அதிகரிக்க வேண்டும்.
கடந்த கால யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள எமது மக்கள் வறுமை காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது இளம் வயதில் தொழிலுக்கு அனுப்புகின்றனர். இதனால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் இடை நடுவிலே பாதிக்கப்டுகிறது. வறுமையை காரணம் காட்டி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்த கூடாது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நாங்கள் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம்.
ஒரு காலத்தில் கல்வியில் முதன்மை வகித்த எமது தமிழினம் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பெறுபேறுகளின் அடிப்படையில் சற்று பின் நோக்கி சென்றுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அவதானித்து அதற்கேற்ற வகையில் தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
Read More
avathani Media Network

முள்ளில் நடந்த அந்த நாட்கள்

(காத்தான்குடி ஏ.எச்.எம்.ஜிஹார்)
எத்தனை
நாளைக்கு
நாம் இந்த
நடைப் பிணமான
மனதுக்கு
சமாதானம்
சொல்லி வாழ்வது...?
முள்ளில்
நடந்த
அந்த நாட்களில்
சொப்பிங்
பேக்குடன்
சோகமான.
வலியுடன்
வாழிடம்
தொலைத்து விட்டு
இருந்த நகை
நட்டுகளையும்
கழட்டிக் கொடுத்து
விட்டு..வந்தோம்
கதறினோம்
பதறினோம்..
உதறி எறியப்
பட்ட கறி வேப்பிலையாய்
தானும்
உருகினோம்..
ஒத்துவாரச்
சூறாவளியில்
கசக்கி வீசப்பட்ட
காகிதமானோம்..
எங்களை
உள் வாங்க
எற்க பார்க்க
சில அபிவிருத்திச்
சில்லறைகளை
சுண்டி விட்டனர்..
மல சலம்
கழிக்க
ஆடை மாற்ற
மானம் போக..
அபயம் தேட
ஒழுகிக் கரைந்த
அந்தப்
புத்தளத்தின்
புகலிடக் கொட்டில்கள்
கை விரித்தனவே..
திஹாரியிலும்
கொழும்பிலும்
திரும்பி வராத
பந்தாக எறியப்
பட்டு நொந்து
கிடந்தோம்..
நொந்து
கிடந்து நூறாண்டு
போனாலும்
எங்களை எண்ணிப்
பார்ப்போர்
எவருமிருக்க வில்லை..
புழுதிகளும்
ஆடு மாடுகளும்
உறங்கிய
எங்கள் ஆலயங்களை
பார்த்து பார்த்து
மெய் சிலிர்த்துப்
போனோம்..
தொற்று
நோயிலும்
தூக்கமற்ற நாட்களிலும்
கனவில் வந்து போன
எங்கள் மண்..
நாங்கள் போட்டு
வந்த வீடு வாசல்
உங்களதும்
எங்களதுமான
உறவு பிட்டும்
தேங்காய்ப்
பூவுமென..
காலமெல்லாம்
கவிதை அப்பங்களில்
வார்த்தைச் சீனி
தூவினோமே..
அதற்கு
நீங்கள் தந்த
கைமாறா
இது..?
Read More
avathani Media Network

'தமிழ்ச் சங்கத்தில் மட்டுமல்ல வாழைத்தோட்டத்திலும் தமிழ் வளர்க்கப்படுவதைப் பார்த்து பிரமித்து நிற்கிறேன்' - 21வது வகவக் கவியரங்கில் பிரதம அதிதி மு.சிவலிங்கம்

வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் பௌர்ணமியன்று(27.10.2015) நடைபெற்றது. குறிஞ்சித் தென்னவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். பிரபல மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் பிரதம அதிதியாக கலந்து வகவ கவிதைகள் குறித்தும், குறிஞ்சித் தென்னவன் குறித்தும் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தார்;.

வகவ ஸ்தாபக உறுப்பினர் காத்திபுல் ஹக் எஸ்.ஐ.நாகூர் கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.
'இந்த கவிஞர்களின் கவிதா ஆற்றலை கண்ணுற்று நான் மெய்சிலிர்த்து நிற்கிறேன்.  தமிழ்ச்சங்கத்தில் மட்டும்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது என்ற எண்ணம் இங்கே வந்து நீங்கள் வெளிப்படுத்திய ஆற்றலினைப் பார்த்தபோது மாறிப்போனது. தமிழ்ச் சங்கத்தில் மட்டுமல்ல வாழைத்தோட்டத்திலும் தமிழ் வளர்க்கப்படுவதைப் பார்த்து பிரமித்து நிற்கிறேன மிகவும் அருமையான கவிதைகள் இங்கே வாசிக்கப்பட்டன. வித்தியாசமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்று கூறிய மு.சிவலிங்கம் அவர்கள் குறிஞ்சித் தென்னவனின் ஆற்றல்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.

'1934ம் ஆண்டு சுப்பையா முருகம்மா தம்பதிகளுக்கு மகனாப் பிறந்தவர் குறிஞ்சித் தென்னவன். அவரது இயற்பெயர் வேலு ஆகும். 5ம் வகுப்புவரைதான் படித்தவர். அதனால்தான் அவரது கவிதைகள் யதார்த்த தன்மை மாறாதிருந்தன. மரபுக் கவிதைகளையே அவர் எழுதினார். குறும்பாக்களையும் எழுதியுள்ளார்.ஆய்வாளர்கள் மலையகத்தில் பாரதிக்குப் பிறகு பாரதிதாசனுக்குப் பிறகு குறிஞ்சித்தென்னவனையே குறிப்பிட்டுள்ளனர். கலாபூஷணம், கவிச்சுடர், தமிழ்மணி போன்ற பல பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். 'எனக்குத் தொழில் கவிதையல்ல, எனது ரத்த நாளங்களில் ஓடும் உயிர்த் துடிப்பு' என பாடியவர் குறிஞ்சித் தென்னவன் என்றார்.

மேலும் உரையாற்றிய மு.சிவலிங்கம் அவர்கள் 'பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன். இன்றும் மலையகம் பற்றிய ஆக்கங்களுக்கு கூடையோடு கொழுந்து பறிக்கும் பெண்களையே படமாக இடுகிறீர்கள். ஏதோ இன்றும் ஆதிகால மனிதர்கள் அங்கு வாழ்வது போன்று. இன்று பல சவால்களை வெற்றி கொண்டு பல உயர் பதவிகளை மலையக இளைஞர்கள் வகிக்கிறார்கள். பல டாக்டர்கள், வக்கீல்கள், பேராசிரியர்கள் அங்கே உருவாகியிருக்கிறார்கள். எனவே மலையகம் பற்றிய கருத்துகளை மாற்றி அமையுங்கள். அவர்களை கேவலமாக காட்டாதீர்கள்' என்றும் வேண்டுகோள் விடுத்தார். 
வகவ தேசிய அமைப்பாளர் கலா விஸ்வநாதனால் வெளியிடப்படும் 'கவின்' சஞ்சிகை பிரதம அதிதிக்கு கையளிக்கப்பட்டது.

இளநெஞ்சன் முர்ஷிதீனின் தலைமையில் மிகவும் விறுவிப்பான கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் எம்.ஏ.எம்.ஆறுமுகம், வெளிமடை ஜஹாங்கீர், மாவை சோமசுந்தரம், இப்னு அஸூமத், எஸ்.தனபாலன், எம்.எச்.எம்.நவ்ஸர் (நௌஷாத்), எம்.பிரேம்ராஜ், புல்மோட்டை யாசிர் எம். ஹனீபா, வதிரி சீ. ரவீந்திரன், இம்போர்ட் மிரர் இணையதள செய்தி ஆசிரியர் அட்டாளச்சேனை எஸ்.எல்.எஸ்.ரிஸ்லி சம்சாத், கலா விஸ்வநாதன், கிண்ணியா அமீர் அலி, ஈழ கணேஷ், கவிக்கமல் ரசீம், மேமன்கவி, கலைவாதி கலீல், ஷங்கர் கைலாஷ், அலி அக்பர் ஆகியோர் கவிமழை பொழிந்தனர். ஜெர்மனியைச் சேர்ந்த கவிதாயினி மீரா குகன் வகவத்துக்கு அனுப்பி வைத்த கவிதை கவிதாயினி கலையழகி வரதராணியால் வாசிக்கப்பட்டது. பெங்களுரிலிருந்து வருகை தந்திருந்த பி.கே. சங்கர் அவர்களின் கவிதையும் வாசிக்கப்பட்டது.
உடுவை தில்லை நடராஜா, த. மணி, சமூகஜோதி ரபீக், எம்.எஸ்.எம்.ஜின்னா, கே. பொன்னுதுரை, கல்முனை முபாரக், கனிவுமதி, எஸ்.பரீனா, உஸ்மான் மரிக்கார், கே.திவாகர், எஸ்.ஏ.கரீம், எம்.இன்ஹாம்,  என்.ஐ.அஹமத், ஏ.ஆர்.எம.பரீத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.



Read More