Featured Home (TOP)

Recent Comments

Sunday, November 15, 2015

avathani Media Network

மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்து ஒருவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடத்தில் நீர்வழிப் படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.
குருக்கள்மடம்-மண்டூருக்கடையிலான வாவியுடான நீர்வழி படகு பாதை பயணிகள் இக்கட்டிடத்தையே தங்குமடமாக பயன்படுத்தி வந்தனர்.
இக்கட்டிடம் உடைந்து விழுந்துள்ளதால் பயணிகள் கொட்டும் மழையில் நனைந்தே பாதையை எதிர்பார்த்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
ஸ்தலத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கேகோபாலரத்தினம் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் அரசாங்க அதிபர் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருடன் தொடர்பு கொண்டு உடனடியாக தற்காலிக நிலையமொன்றை அமைத்து தருவதாகவும் ஜனவரி மாதத்தில் புதிய தங்குமடத்தை அமைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

நிந்தவூரில் உலக நீரிழிவு தின விளிப்புணர்வு ஊர்வலம். -சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பங்கேற்பு-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
உலக  நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று (14) நிந்தவூரில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம் பெற்றது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் திருமதி. சஹிலா இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற இவ்வூர்வலத்தில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீமும் இணைந்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்கினார்.

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி மாணவர்களின் ஆதரவுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்த இவ்வூர்வலம் இன்று காலை 10 மணியளவில் நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியிலிருந்து கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதிவழியே பயணித்து, இறுதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் முடிவுற்றது.

இங்கு பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் கலந்துரையாடலொன்றும் இடம் பெற்றது.








Read More
avathani Media Network

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன பிராந்திய செய்தியாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.

( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பிராந்திய செய்தியாளர்களாகப் பணியாற்றிவரும் செய்தியாளர்களுக்கு புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாகவும், நடுநிலைமையாகவும் செய்திகளைத் தொகுத்து வழங்குவது தொடர்பாக அறிவுரை வழங்கம் ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வு சமீபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 'ஆனந்த சமரகோண் கலையகத்தில்' இடம் பெற்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர், மற்றும் உயரதிகாரிகள், செய்தியாசிரியர்கள், செய்தித் தயாரிப்பாளர்கள்,  நிருவாகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு, பிராந்திய செய்தியாளர்களுக்கு வழிகாட்டி உதவினர்.









Read More
avathani Media Network

வெக்கங்கெட்ட வெளிநாடு..

(மஸாகி)

அக்ரிமென்ட் போட்ட
அடிமைச் சங்கிலி – அதை நாம்
உடைத்தெறிவது எப்போது..?

படித்த படிப்புக்கு
வேலையுண்டு – ஆனால் 
வேதனத்தை விட வேதனைகளே - இங்கு அதிகமடா..

மகளுக்கு வீடு 
மகனுக்கு பாஸ்போர்ட் - என்ற 
பெற்றோரின் - சொத்துப் பிரிப்பில் மாற்றம்வேண்டும்..

மகளுக்கு வீடுவேண்டாம்..
மகனுக்கு தொழில்கொடுங்கள்..
உங்கள் மருமகள் – மகளாய் வீடு வருவாள்..

ஏழைக் குமரின் - ஏக்கம் தீர்த்து 
வாழ்க்கை கொடுக்க வேண்டிய இளைஞர்களோ – இங்கு
பெருமூச்சுகளுடன் ராத்தா. தங்கைக்காக....

உம்மா சமைத்த பிரியாணி
ராத்தா செய்த வட்டிலப்பம்
தங்கச்சி காய்ச்சிய – கோழிக் கஞ்சி
வட்ஸப்பில் வந்தால் – வாயூரும் – வயிறாருமா..?.

கடிதத்தில் - ஆரம்பித்த பலர்
ஸ்கைப். வைபர் என - தொழில்நுட்பத்தைதான் 
மாற்றியிருக்கிறார்களே தவிர – இன்னமும்
கட்டாரு. சவுதி. டுபாய் என்று – 
கல்ப் ஐ தான் – சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

வீட்டிலிருந்து வந்த – பக்கோடாவை கூட
உலககோப்பை கிடைத்ததுபோல் - காட்டி. காட்டி
வயித்துவலி வந்தாலும் பரவாயில்லையென
பேஷ்புக் யில் ஸ்டேட்டஸ் போடும் – நண்பர்களே..

ஜப்பான்காரனும் – அமெரிக்கனும் 
ஊரிலிருந்து விண்ணுக்கு ராக்கட் அனுப்ப வழிதேடும்போது. 
இருபது முப்பது வருடமாய் – வெளியிலிருந்து 
ஊருக்கு சாக்லட் அனுப்ப ஆள்தேடுவதுதான் நமது பிரச்சனை..

ஆயுதமெடுத்தவனுக்கும் – யுத்தநிறுத்தமுண்டு
பாஸ்போர்ட் எடுத்தவனின் – பிரச்சனைகள் முடிந்ததுண்டோ..?

அனுபவம் தேடி ஆளுமையுடன் செல்லுங்கள்..
ஆயுளை முடிக்க செல்லவேண்டாம்..
காசுழைக்கும் விருந்தாளியாய் செல்லுங்கள்..
கல்ப் தான் தலையெழுத்தென கிடக்கவேண்டாம்..

பேசுவதால் மட்டும் - மாற்றம் வராது 
யோசியுங்கள் - முடிவெடுங்கள் – செயற்படுங்கள்..
வெட்கங்கெட்ட வெளிநாட்டில்
விடிந்தவர் வாழ்க்கைகளை விட - ஆயுள்
முடிந்தவர் வாழ்க்கைகளே – அதிகம்..

உன் – உழைப்பை வெளியில் கொட்டிவிட்டு
ஓய்வெடுக்க வீட்டம்மாவிடம் செல்பவனே..
எல்லாம் ஓய்ந்த பிறகு – நீ சேர்த்த
பணத்தை அனுபவிக்க டாக்டரம்மாவால் தான் முடியும்..

விரதமிருந்த வெளிநாடு
உன் மகளுக்கு – வாழ்க்கை கொடுக்கலாம்..
ஆனால் உன் மனைவிக்கு..?????

Read More
avathani Media Network

அமானா கிட்ஸ் கொலேஜின் 2015 பாலர் கலை விழா-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலேஜின் 2015 பாலர் கலை விழா 15-11-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அமானா கிட்ஸ் கொலேஜின் தலைவர் ஆசிரியர் எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இப் பாலர் கலை விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் பீ.எம்.அன்சார் (நளீமி) கலந்து கொண்டார்.

இங்கு அமானா கிட்ஸ் கொலேஜ் பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது அதிதிகளினால் பாலர் கலை விழாவில் பங்குபற்றிய சிறுவர்,சிறுமிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் சமூக தொண்டர் சேவை பணிகளில் பாலர்களின் தோழன்; எம்.எச்.எம்.முழாபிர் (லக்கி) ஈடுபட்டார்.

இப் பாலர் கலை நிகழ்வில் அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் பீ.எம்.அன்சார் (நளீமி),இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஏ.எல்.எம்.மாஹிர் ,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சீ.அப்துல் அஸீஸ்,அல் ஸபா பீ,எல்.சீ. கிளை முகாமையாளர் றிஸ்வான் நிஸாமுதீன், அமானா கிட்ஸ் கொலேஜின் பணிப்பாளர் எம்.ஐ.எம்.அன்வர்,ஆசிரியர் அப்துல் அஸீஸ்,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் (ஜேபி), பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திற்குமான அமைப்பின் தலைவியும் ,முன்னாள் நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா,பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மக்பூழ், அமானா கிட்ஸ் கொலேஜின் அதிபர் காமிலா அன்வர் உட்பட ஊர் பிரமுகர்கள் கல்வியலாளர்கள்,புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




















Read More
avathani Media Network

மழை மற்றும் கடும் காற்று தொடர்ந்தும் நீடிக்கலாம் : மீனவர்களே அவதானம்

காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை மழையுடன் கூடிய காலநிலையால் சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 575 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு எட்டு முகாம்களில் 350 பேர் வரை தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் யாழில் 2000க்கும் அதிகமானோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் 811 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 209 பேர் வரை பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கம்பஹாவில் 1251 குடும்பங்களும் புத்தளத்தில் 2073 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More
avathani Media Network

பிரிட்டிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மட்டக்களப்பிற்கு விஜயம்

(ஜவ்பர்கான்)
பிரித்தானிய பாராளுமன்றத்தைச் சேர்ந்த டாக்டர் ஜென்னி டொங்கே தலைமையிலான 9 உறுப்பினர்கள் கொண்ட குழு இன்று காலை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தனர். 
இலிங் சௌத்தல் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா லண்டன் பாராளுமன்ற ஒன்றியத்தைச்சேர்ந்த நிகல் இவான்ஸ் உட்பட 5 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக இக்குழுவில் அடங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள் இனப்பெருக்கம் மற்றும் பாலியில் சுகாதாரம் தொடர்பான மீளாய்வு சந்திப்பில் கலந்து கொண்டனர். 
வைத்தியாசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை குடும்ப திட்ட சங்க தலைவி பெமிலா சேனநாயக்க வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன் உட்பட வைத்திய நிபுணர்கள், வைத்தியதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மிதுறு பியச நட்பு இல்லத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனப்பெருக்கம் மற்றும் பாலியில் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்ஆலோசனைகள் வழங்கப்படும் இலங்கையின் சிறந்த நிலையமாகவும் முதன்மை நிலையமாகவும் மட்டக்களப்பு நட்பு இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்தாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
virakesari.lk


Read More
avathani Media Network

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் 1247 முறைப்­பா­டுகள்

பாரிய ஊழல் மோசடி தொடர் பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு இது­வ­ரையில் 1247 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் லெசில் டி சில்வா தெரி­வித்தார்.


இவற்றுள் 200 முறைப்­பா­டுகள் குறித்து விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் 50 முறைப்­பா­டுகள் தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
இந்­நி­லையில் முன்னாள் பிரதியமைச்சர் சரத்­கு­மார குண­ரத்னம் மீது சுமத்­தப்­பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்­பான விசா­ர­ணைகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்­வ­தற்­கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

சூட்டிங்

(காத்தான்குடி நிஷவ்ஸ்)
சூட்டிங்
சுலபமாய் முடிந்தது.
இனி
எடிட்டிங்
ஈரோப்பாவில் நடக்கும்
பாட்டுப் பாடவும்
பக்க வாத்தியத்துக்கும்
பல மீடியாக்கள் தயார்.
இரட்டைக் கோபுரப் படம்
இனி ஓடாது என்பதால்
இந்த சூட்டிங்
எடுக்கப் பட்டது.
உளவுத் துறைகள்
களவில் தயாரித்த படம்.
இஸ்லாம் மதத்தை
இயக்குநர் போலாக்கி
முஸ்லிம் உலகை
முரட்டு வில்லனாக்கி
காட்டும் படத்தின்
சூட்டிங் முடிந்தது.
ஐ நா சபையின்
பொய் நா மூலம்
கதையும் வசனமும்
கணக்காய் எழுதி
இந்தப் போர்ப் படம்
இனிமேல் ஓடும்.
சிறிய பிள்ளை
சீனி களவெடுக்கவே
தெரியாமல் எடுக்க
தெரிந்து வைத்திருப்பான்.
சிரிய போரளி
சரியான பாஸ் போட்டுடன்
உரிய இடத்தில
உயிர விட்டானாம்.
விட்டாலச்சர்யாவை
விஞ்சுகிறது கதை.
அப்பாவி மக்களை
அநியாமாய்க் கொன்ற
இப்பாவிகள் எல்லோரும்
இஸ்லாத்தின் எதிரிகள்.
(காத்தான்குடி நிஷவ்ஸ் -15/11/2015)
Read More
avathani Media Network

UK பட்டப்படிப்புகளுக்கான 100 புலமைப் பரிசில்கள்! BCAS Campus வழங்கும் 'சிசு சவிய' புலமைப் பரிசில் திட்டம்

உயர் தரம் பூர்த்தி செய்த மாணவர்களின் Z-Score புள்ளிகளின் அடிப்படையில் 80 மில்லியன் பெறுமதியான 100 புலமைப் பரிசில்களை வழங்குகின்ற விசேட செயற்திட்டம் ஒன்றினை BCAS Campus அறிவித்துள்ளது. BCAS 'சிசு சவிய' என்ற பெயரில் ஆரம்பிக்ப்பட்டுள்ள இந்த புலமைப் பரிசில் திட்ட மூலமாக. UK பட்டப்படிப்புகளை இலங்கையில் முழுமையாக பூர்த்தி செய்வதற்கான புலமைப்பரிசில்களை 100 மாணவர்களுக்கு BCAS Campus வழங்கவுள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டமானது. பல்கலைக் கழக விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மோகன்லால் க்ரேரோ  அவர்களை பிரதம அதிதியாகக் கொண்டு கடந்த 11.11.2015 அன்று நடைபெற்ற BCAS Campus பட்டமளிப்பு நிகழ்வின் போது உத்தியோக பூர்வமாக அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் London South Bank பல்கலைக் கழகத்தினுடைய உப வேந்தர் பேராசிரியர் டேவிட் பீனிக்ஸ் அவர்களும், அதனுடைய உதவித்தலைவர் பேராசிரியர் ராவ் அவர்களும், அத்துடன் BCAS Campus யின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் அதனுடைய தலைமைப் பீடாதிபதி பேராசிரியர் சானிகா ஹிரும்புரேகம உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உயர்தரப் பரீட்சையில் வருடாந்தம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதிக்கான தகுதியினைப் பெறுகின்ற போதிலும் அதில் ஏறத்தாள 30 வீதத்திற்கும் குறைவானவர்களே அரச பல்கலைக் கழகங்களில் அந்த வாய்ப்புக்களைப் பெறுகின்றனர். ஏனைய 70 வீதமான மாணவர்களுக்கு நம் நாட்டில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதற்கான தீர்வாக, தனியார் உயர் கல்வித்துறையில் வெளிநாட்டு பட்டப்படிப்புகளை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக நம் நாட்டில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான நிதிச் செலவு என்பது திறமையான பல மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினையாக அமைந்துள்ளது.

அது போன்றே அரச பல்கலைக் கழகங்களுக்கான அனுமதிகளை பெறும் மாணவர்கள்கூட பல சந்தர்ப்பங்களில் தமது திறமைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற துறைகளில் கற்பதற்கான வாய்ப்புகளை பெறுவதில்லை என்பதும் இன்னுமொரு வகையான பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இச்சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு அரச பல்கலைக் கழக அனுமதிக்காக பின்பற்றப்படும் நடை முறைகளை ஒட்டிZ-Score  புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட விசேட புலமைப்பரிசில் திட்டமாகவே BCAS 'சிசு சவிய' புலமைப் பரிசில் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புலமைப் பரிசில் திட்டத்தின் மூலமாக Civil Engineering, Quantity Surveying, Computing, Bio Medical Science, Law, Management  Information System மற்றும் Business Management ஆகிய துறைகளில் 3 வருட பட்டப்படிப்பு பாட நெறிகளை இலவசமாக தொடர்வதற்கான வாய்ப்புகளை BCAS Campus வழங்ககின்றது.

இப்புலமைப் பரிசில்களுக்கு தகுதி பெறும் மாணவர்கள் தமது 3 வருட கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்கின்ற போது தமது இறுதித் தகைமையினை UK யின் பிரபல பல்கலைக் கழகங்களான university of Wolverhampton அல்லது London South Bank university இலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

இலங்கையில் கொழும்பு, கண்டி, குருநாகல், மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தனது வளாகங்களையும் கிளை வளாகங்களையும் BCAS Campus கொண்டிருப்பதன் காரணமாக புலமைப் பரிசில்களுக்கு தகுதி பெறும் மாணவர்கள் தமக்கு வசதியான வளாகங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளன.

இந்தப் புலமைப் பரிசில்களுக்கான தெரிவு முழுக்கமுழுக்க Z-Score புள்ளிகளை அடிப்படையாக கொண்டும், விசேட தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BCAS 'சிசுசவிய' புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவங்களையும், மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள www.bcas.lk என்ற இணையத்தளத்தினை அல்லது வார இறுதி பத்திரிகைகளில் வெளியாகும் அறிவித்தல்களை பார்வையிடுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன், இது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தனியான தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் BCAS Campus அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் 076 5204505 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உங்கள் பெயர், முகவரியினையும் உங்கள் Z-Score இனையும் SMS செய்வதன் மூலமும் மேலதிக விபரங்கள்ளை பெற்றுக் கொள்ள முடியும்.

இப்புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 25.12.2015 ஆகும் என்பதோடு எதிர்வரும் ஜனவரி / பெப்பரவரி மாதங்களில்  பாடநெறிகள் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





















Read More