( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு சமூர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவுடன், பிரதேச செயலகம் இணைந்து உருவாக்கிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறையில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், சமூர்த்தி வங்கி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.ஹுசைன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து, சிறப்பித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இப்பிரதேசத்திலுள்ள எல்லா ஏழை மக்களுக்கும் ஒரே நேரத்தில் அரசாங்க நிதியில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதென்பது முடியாத காரியமாகும். எனவே கிராம சேவை உத்தியோகத்தர், அல்லது சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிபார்சின் பேரில், அரசிடமிருந்து கிடைக்கும் நிதிநிலைமைக்கேற்ப கட்டங்கட்டமாக உதவிகள் செய்யப்படும். கிடைத்தவர்கள் போக ஏனையவர்கள் பொறுமை காக்கவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.