(ஜுனைட்.எம்.பஹ்த்)
கடந்த பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நாம் ஆதரவு வழங்கியமை கல்முனை மாநகர உள்ளுராட்சி தேர்தலில் உலமா கட்சித்தலைவர் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கே என பலரும் சொல்வது எமது அரசியல் கொள்கை பற்றித்தெரியாதோரின் பிழையான கருத்தாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,கடந்த பாராளுமன்றத்தேர்தலில் கல்முனைக்கான பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதற்காகவும் கல்முனையின் நலனுக்காகவும் மாவட்டத்தில் செல்வாக்குள்ள முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து சமூகத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இன்றைய பிரதி அமைச்சர் ஹரீசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அவரிடம ஒரு சதம் கூட பணம் வாங்காது தூய்மையான முறையில் நாம் அவருக்கு ஆதரவளித்தோம்.
அவருடனான பேச்சுவார்த்தையின் போது கல்முனை மாநகர சபை தேர்தலில் விகிதாசார தேர்தலாயின் எமது கட்சியை சேர்ந்த மூவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தருவதாகவும், வட்டார தேர்தல் முறையாயின் ஒருவருக்கு இடம் தருவதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை பிரதி அமைச்சர் ஹரீஸ் செயற்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அந்த ஒருவர் உலமா கட்சித்தலைவராக இருப்பார் என்ற எண்ணம் எம்மிடம் இல்லை.
எம்மை பொறுத்த வரை பிரதி அமைச்சர் ஹரீஸ் பற்றிய நல்லெண்ணம் எம்மிடம் உள்ளது.
அவர் நல்ல குடும்பத்தை சேர்ந்த கர்வமற்ற ஒருவர் என்பதால் அவருடன் நாம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஏனைய விடயங்களை அவர் நிறைவேறுறுவார் என்று நம்புகிறோம். அவர் பிரதி அமைச்சராகி சில மாதங்களே என்பதால் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது பொறுமையாய் நாம் அவரது செயற்பாடுகளை கவனித்துக்கொண்டிருக்கிறோம்.
எம்மை பொறுத்த வரை கல்முனையை தலைமையாகவும், தலைமையகமாகவும் கொண்ட முஸ்லிம் கட்சியே எமது எதிர்கால இலக்காகுமே தவிர உள்ளுராட்சி தேர்தலில் உலமா கட்சித்தலைவர் போட்டியிட்டு ஒரு மாநகர சபை உறுப்பினராக வருவது அல்ல. அந்த எண்ணம் சிறிதளவேனும் எமக்கு கிடையாது.
ஆனால் மு.காவின் தலைமையும், பிரதி அமைச்சர் ஹரீசும் அதனை விரும்பினால் அது பற்றி ஆலோசிப்போமே தவிர தலைவருக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்ற பதவி என்பது ஓர் அமானிதமாகும். அந்த அமானிதத்துக்கு மோசடி செய்து விட்டு கொழும்பை மையப்படுத்திய தேசிய அரசியலில் அதிகம் ஈடு பட முடியாது போகும். அப்படியொரு துரோகத்தை கல்முனை மக்களுக்கு செய்ய உலமா கட்சித்தலைமை தயாரில்லை என்பதனாலேயே மாநகர சபை தேர்தலில் தலைவர் தவிர்ந்த வேறு யாரையும் நிறுத்துவது என்பதே இது வரை எமது முடிவாகும்.
அதே வேளை உள்ளுராட்சி தேர்தலில் தேசிய ரீதியாக எந்தக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி நாம் இன்னமும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.
இந்தக்கட்சிக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்ற கடப்பாடு எமது கட்சிக்கு இல்லை. நாம் தனித்துவமான, சுய அரசியல் சிந்தனையுள்ள கட்சி என்பதால் எமது கட்சியினதும், சமூகத்தினதும் நலன்களை முன்வைத்து எமது முடிவுகளை எடுப்பதில் நாம் துணிச்சல்மிக்கவர்கள் என்பதை எமது ஆதரவாளர்கள் நன்கு அறிவார்கள் என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.