உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கையும் இங்கிலாந்தும் தோல்வியடைந்துள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2015- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல்நாள் ஆட்டங்களில் இந்த இரண்டு நாடுகளின் அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆண்டர்சன் 75 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் ஆடிய இலங்க அணி 46.1 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. லஹிரு திரிமான்ன 65 ஓட்டங்களை எடுத்தார். அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 46 ஓட்டங்களும் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 65 ஓட்டங்களும் எடுத்தும் அணியால் வெற்றிபெற முடியவில்லை.
மெல்பர்ன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இப்போட்டியில் ஆஸி. வீரர் ஃபிஞ்ச் சதமடித்தது சிறப்பம்சமாகும். அவர் 135 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ஓட்டங்களை எடுத்தது. ஆனால் இங்கிலாந்து அணியோ 41.5 ஓவர்களில் 231 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஞாயிறன்று அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இதுவரை ஆஸ்திரேலியா நான்கு முறைகளும் இந்தியா இரண்டு முறைகளும் வென்றுள்ளன. இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் தலா ஒரு தடவை வென்றுள்ளன.
BBC News
BBC News

