கொழும்பு - 2015 ஆம் ஆண்டில் ஆயுட்காலம் நிறைவடைகின்ற 322 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை திருத்தியமைக்கப்பட்ட புதிய முறையில் நடத்துவதா அல்லது பழைய முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் பௌத்த விவகார அமைச்சர் கருஜயசூரிய நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை அமர்வின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவினால் நிலையியற் கட்டளை 23 (2) இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக கேள்வி எழுப்பிய உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன
2015 ஆம் ஆண்டில் 322 உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வருகின்றது. மாநகர சபைகள் நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் என உள்ளடங்குகின்றன. எனவே இந்த மன்றங்களுக்கான தேர்தல்கள் புதிய முறையிலா? அல்லது பழைய முறையிலா? நடத்தப்படவிருக்கின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கரு ஜயசூரிய
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.
இப்படியிருக்கும் போது இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடாத்துவதற்கான இயலுமை இல்லை.
புதிய முறையில் அதாவது திருத்தியமைக்கப்பட்ட வகையில் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் சிக்கல் காணப்படுகின்றன.
எல்லைகள் நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே எல்லை நிர்ணய விவகாரமானது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
எனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நினைத்த மாத்திரத்தில் நடத்த முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்கள் என சகல தரப்பினருடனும் கலந்து பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.