கொழும்பு -
நாட்டில் பதிவுசெய்யப்படாது இயங்கும் பள்ளிவாசல்களை துரிதமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது பதிவுசெய்வதில் அநீதி இழைக்கப்பட்ட பள்ளிவாசல்களை புதிததாகப் பதிவு செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அக்குறணை, கசாவத்தை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வரவேற்பு வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
“கடந்த ஆட்சி காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். அத்துடன் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இவை எதற்கும் அன்றைய அரசு எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது பாரா முகமாக இருந்தது.நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் அதிகமானவை இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஆகவே இதுவரை பதிவு செய்யப்படாத அனைத்து பள்ளிவாசல்களையும் துரிதமாக பதிவுசெய்யும் திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆட்சி காலத்தில் வேண்டுமென்றே பள்ளிவாசல்கள் பலவற்றைப் பதிவு செய்வதை தாமதமாக்கி உள்ளமையும் தெரிய வந்துள்ளது. எமது புதிய திட்டத்தின் படி பள்ளிகளைப் பதிவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
முன்னைய ஆட்சியில் காணப்பட்ட தேவையற்ற பல்வேறு கெடுபிடிகள் தளர்தப்பட்டுள்ளன. இதனை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கொண்டு ஜனாதிபதி வழங்கியுள்ள சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் படி வேண்டிக்கொள்கின்றேன். இது தொடர்பில் மேலதிக விபரம் தேவைப்படுவோர் அமைச்சுடனோ அல்லது அமைச்சு அதிகாரிகளுடனோ தொடர்புகொண்டு இப்பணியை பூரணப்படுத்த முடியும்” என்றார்.
Source - Puttalamtoday
