
கடந்த வாரம் சாய்ந்தமருது அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “சமகால அரசியலில் முஸ்லிம்களின் வகிபங்கு” என்கின்ற தொனிப்பொருளில் நடத்திய பொதுக்கூட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. முதலில் கேள்விகள் கேட்டுக் கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள் பின்பு கற்களையும் நாற்காலிகளையும் எறிந்து மண்டப யன்னல்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இச்சம்பவங்களின் சூத்திரதாரிகள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நோக்கி சுட்டுவிரலை நீட்டியிருக்கின்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்கின்ற பெயரில் கிட்டத்தட்ட ஒருதசாப்தத்திற்கு முன்னரே காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். வுழக்கமாகி விட்ட முஸ்லிம் அரசியலுக்கு மாற்றான அரசியலை மக்கள் மத்தியில் வேரூன்ற வைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டது. படித்த மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவுடன் இது செயற்பட்டது. அக்காலத்தில் அவர்கள் காத்தான்குடி நகரசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றனர். அவர்களுடைய உறுப்பினர்கள் அந்நகரசபையின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்லாமல் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
அவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி தமது ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு நகரசபையின் உறுப்பினர் பதவியினை சுழலும் முறையில் வழங்கியது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். அதனை விட, மிக நிதானமாக, தேர்தல் காலத்தில் மட்டும் மக்கள் மத்தியில் போகின்ற கட்சியாக இல்லாமல், தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த இலங்கையின் ஒரேயொரு கட்சி எனவும் இதனை விபரிக்கலாம். இவர்கள் ஆட்சிக்கு வரும் குறுக்குவழிகளை நோக்காமல் ஓர் நீண்டகால நோக்கில் இலங்கையின் ஆட்சி முறைகளை மாற்ற விழையும் கட்சியாகத் தம்மை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இன்று கிழக்கில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தமது வேலைத்திட்டங்களைக் கொண்டு சென்றிருக்கின்றனர். இக்கட்சியின் வேலைத் திட்டங்கள் தற்கால முஸ்லிம் அரசியல் வர்க்கத்தினருக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது முஸ்லிம் காங்கிரஸாக இருந்தால் என்ன அல்லது மலிந்து போயிருக்கும் ஏனைய ஏராளமான முஸ்லிம் கட்சிகளாக இருந்தால் என்ன, அனைத்துக் கட்சிகளும் பெருமுதலாளிகளுடையதும் உலெம்மாக்களுடையதும் கூட்டிணைப்பின் தலைமைத்துவத்தின் கீழல்லவா இயங்குகின்றன? நல்லாட்சியை எற்படுத்துவது இவர்களின் நலன்களுக்கு முரணல்லவா?
கடந்தகால முஸ்லிம் அரசியலை ஆராய்ந்து பார்த்தால் இந்த அரசியல் வர்க்கத்தினரின் நோக்கங்கள் தெளிவாகவே புரியும். முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தீவிர பிரதேச வாதத்தினை விதைத்து, எந்தவிதமான சுதந்திர சிந்தனையும் உள்ள மாற்றுக் கருத்துக்களை உள்விடாது, குறிப்பாகப் பெண்களை எவ்விதத்திலும் முன்னேற விடாமல் மாhக்கத்தைக் காட்டிக் காட்டியே பயமுறுத்தி இவர்கள் வந்திருக்கின்றனர். அதன் அடித்தளங்களின் தன்மையினாலேயே இதுவரைகாலமும் இந்த முஸ்லிம் அரசியல் வர்க்கம் ஜனநாயகத்தைப் பற்றிய எந்தக் கருத்தாடல்களிலும் தேசிய ரீதியாகப் பங்குகொள்ளவில்லை. அது 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமாக இருக்கலாம், அல்லது சமீபத்தைய 18ம் திருத்தச் சட்டமாக இருக்கலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகநடைமுறைகளுக்கு சார்பாக அவர்கள் பேசியதாகவே கிடையாது. எப்பொழுதுமே அவர்கள் முஸ்;லிம் நலன்களைப்பற்றி (அதாவது தமது அரசியல் வர்க்கத்தினரின் நலன்களைப் பற்றி) மட்டுமே பேசி வந்ததை வரலாறு கூறும்.
சாய்ந்தமருதுக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் திரு அப்துல் ரஹ்மானை நோக்கி “ உன்னுடைய அரசியலைப் போய்க் காத்தான்குடியில் செய். சாய்ந்;தமருதில் செய்தாயானால் இந்த விதிதான் நேரும்” எனப் பயமுறுத்தியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இது இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல கிழக்கில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையிராக வாழும் அனைத்து ஊர்களிலும் காலங்காலமாகத் தொடரும் விதிதான். மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், தேர்தல் காலங்களில் ஓட்டுமாவடி அரசியல்வாதிகள் ஓட்டுமாவடியிலும் ஏறாவூர் அரசியல்வாதிகள் ஏறாவூரிலும் காத்தான்குடி அரசியல்வாதிகள் காத்தான்குடியிலும் மட்டுமே தமது பிரசாரங்கiளைச் மேற்கொள்ளக் காணலாம். மாறாக, ஒருவர் மற்றவரின் பிரதேசத்தில் கால்வைத்து விட்டாரெனில் அடிதடிதான்.
2010ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் பாராளுமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டபோது ஓட்டுமாவடியிலுள்ள முஸ்லிம் கிராhமங்களிலும் எனது பிரசாரத்தினை எடுத்துச் செல்ல விரும்பினேன். “ஐயோ பயம், உங்களது பதாகைகளை அகற்றிவிட்டு இரகசியமாக வந்து போங்கள். இல்லாவிடில் உங்கள் வாகனத்தை நொறுக்கி விடுவார்கள்” என அங்குள்ள எனது ஆதரவாளர்கள் ஆலோசனை கூறினார்கள். இதென்ன, பிரசாரம் செய்யும் எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகின்றதேயென வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறையிடச் சென்றேன். “
நீங்கள் புதுசு. உங்களுக்குத் தெரியாது. இதுதான் அவர்களுடைய வழக்கம். இதற்கு நாங்கள் ஒன்றுமே செய்ய முடியாது” என கையை விரித்து என்னை அங்குள்ள அதிகாரி வழியனுப்பி வைத்தார். இந்தப் பிரதேச வாதம் என்பது அரசியலில் மட்டுமென்றில்லை. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை எமது நிறுவனத்தின் சமூகப் பணிகளுக்காக ஏறாவூரைச் சார்ந்த ஒரு பணியாளரைக் காத்தான்குடிப்பிரதேசத்தைப் பொறுப்பெடுக்கும் வேலையில் அமர்த்தியபோது, ஏறாவூர் முஸ்லிம் காத்தான்குடியில் வந்து வேலை செய்ய முடியாது என மறுத்து விட்டார்கள்!
பிரதேச வாதம் என்பது மக்களை ஒன்று சேரவிடாது கிணற்றுத்தவளைகளாக வைத்திருப்பதற்கு ஒரு உகந்த கருவியாகும்.
இன்னமும் முஸ்லிம் மக்கள் அதனை மறைமுகமாக ஊக்குவிக்கும், வன்முறையில் ஈடுபடும் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப் போட்டுக்கொண்டுதானே இருக்கின்றார்கள். இதே போலவே மாற்றுக் கருத்துக்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத முறையில் அங்கு சமூகக் கட்டுப்பாடுகளை இந்த அரசியல் வர்க்கம் விதித்திருக்கின்றது. இது தொடர்பான பல அனுபவங்கள் எனக்குண்டு. கிழக்கின் மருதமுனையில் பயில்வான் எனப் பலராலும் அழைக்கப்பட்ட ஓர் ஆன்மீகவாதி இருந்தார். இவர் தனது 14வது வயதில் இப்பிரபஞ்சத்தில் சகலதுமே ஒன்றாகும் எனக் காட்சி பெற்றவர் அதன் பின்பு அத்தத்துவத்தினைப் போதிக்க ஆரம்பித்தார்.. இவருடைய தத்துவம் இந்து சமயத்தின் அத்வைத தத்துவத்துடன் இணைகின்றது எனக் கண்டு சைவ அறிஞர்களுடனும்; நெருங்கிய தொடர்புகளைப் பேணினார். மிகக் கலையார்வம் உடையவரும்கூட. ஒரு பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் திகழ்ந்தார். ஒரு சினிமாப் படம் கூட எடுத்திருக்கின்றார். பயில்வானாக வாழ்க்கையை ஆரம்பித்து எத்தனையோ சிகரம் தொட்டு விட்ட அறிஞராக அவர் திகழ்ந்தார். இவரை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுக்க அவர் வீட்டிற்கு நான்; சென்றேன்.
அங்கோ அவருடைய குடும்பம் அழாக்குறையாக நின்றது. “இப்போதுதான் சிறிது அமைதியாக அவர் இருப்பதால் எங்கள் வீட்டிற்குக் கல்லெறி விழாமல் நின்றிருக்கின்றது. நீங்கள் இதனைத் திரும்பவும் குழப்பி விடாதீர்கள் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்“ என அவருடைய மனைவி என்னிடம் மன்றாடினார்.
இதனால் அவருடைய பேட்டியினை எடுத்திருந்தும் அதனை நாம் ஒளிபரப்பவில்லை. சிறிது காலம் சென்று அவர் இறந்தபோது அவருடைய சி~;யர்கள் அவர் சமாதியினைக் காத்தான்குடியில் நிர்மாணித்தனர். உடனே என்ன நடந்திருக்கும்? அந்தச்; சமாதி நொறுக்கப்பட்டு அதனை நிர்மாணித்த குடும்பங்கள் வீடுடைக்கப்பட்டு ஊரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டன. இவ்வன்முறைக் கலவரங்களினால் ஊரடங்குச் சட்டமும் காத்தான்குடியில் அமுலிலிருந்ததாக எனக்கு ஞாபகம். கிழக்கில் மாற்றுச் சிந்தனையுடன் மாற்று அரசியல் செய்ய
முனைவோருக்கு இதுதான் ஆபத்து. எதிரிகள் வசிக்கும் வீட்டையல்லவா உடைத்து விடுகிறார்கள?. அந்த இழப்பினை எத்தனை பேர்களுக்கு ஈடு செய்ய முடியும்? இதனால் பயத்தினால் வாளாவிருக்க வேண்டியதுதான். இத்தகைய அடக்கு முறைகளை அவதானித்தால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்நோக்கும் சவால்களின் பெருப்பத்தினை நாம் வினங்கிக் கொள்ளலாம்.
இப்பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, ஏதோ தம்மத்தியில் இயங்கும் மதத்தீவிரவாதக் குழுக்கள் தான் தோன்றித்தனமாக சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துள்ளது போல அங்குள்ளவர்கள் பேசுவதைக் காணலாம். எந்தவொரு காடையர் குழுவும் கொள்கைப் பிரியர்களாக சுயாதீனமாக ஒருபோதும் இயங்;கியது கிடையாது. அவற்றிற்குப் பின்னால் அரசியலதிகாரம் இருந்தாலன்றி அவை தலைதூக்கவும் முடியாது. மகிந்த இராஜபக்ச ஆட்சியில் இயங்கிய பொதுபலசேனாவும், கிறீஸ் மனிதர்களும் இதற்குச் சாட்சி. முன்பு ஒவ்வொரு சிவில் சமூக நிகழ்வுக்கும் முன்னால் அதனை எதிர்த்து கொடி பிடித்து நின்ற காடையர் கும்பல்கள் இந்த அரசாங்கத்தின் கீழ் சென்;ற இடம் தெரியாது மறைந்த விந்;தைதான் என்ன. தங்கள் கொள்கைகளுக்காக ஆபத்தான வன்முறைகளில் மக்கள் இறங்கத் தயாராக இருக்கின்றார்களென்றால் எங்கள் பிரச்சினைகளெல்லாம் எப்போதோ தீர்ந்திருக்குமே. இதொன்றுமே கொள்கைக்கான அர்ப்பணிப்புக்களல்ல. அதிகார வர்க்கத்தினரின் நோக்கங்களை நிறைவேற்ற முயலும் அடாவடித்தனங்களாகும். இவற்றை இப்படியே தொடர விட்டார்களெயெனில் முஸ்லிம் சமூகம் உள்ளிருந்தே வெடிக்கும் நிலை (implode) உருவாகும். .
கருத்துச் சுதந்திரம் இன்றி, பெண்கள் இன்னமுமு; கட்டுண்டிருக்க, குறுகிய வாதங்களைப் பேசி நிற்கும் இந்நிலைமையினை முஸ்லிம்; மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள படித்த வர்க்கமே மாற்ற வல்லது. அதற்கானதொரு தளத்திளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று ஏற்படுத்திக்கொண்டு வருகின்றது. ஆனால்
இந்த மாற்றத்தினை தனியே அரசியல் விழிப்புணர்வினால் மட்டும் ஏற்படுத்தி விடலாம் என்பதனை நான் நம்பவில்லை. இதுவொரு கலாசாரப் புரட்சியாகவும் பரிணமிக்க வேண்டும். இது உள்ளுரைக் கொண்டு மட்டுமே செயற்படுத்தக்கூடிய முறைவழியல்ல. சர்வதேச ரீதியான அரசியல் சிந்தனைகளிலிருந்து எழும் முற்போக்கான கருத்துக்கள் இந்தப் புரட்சியினைப் போசிக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்வதற்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பான இருட்காலத்தில் ஊறியுள்ள சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் கலாசார செல்வாக்கிலிருந்து முதலில் முஸ்லிம் சமூகத்தினரை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாற்றீடாக, கலாசார ரீதியாக எம்மை ஒத்திருக்கும் எமது அயலான தமிழ் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினருடனான உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அங்கிருக்கும் அறிஞர்களுடனான நெருங்கிய உறவாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
இது ஒரு பாரிய சவால்தான்.
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
anusha.sachithanandam@gmail.com
நன்றி - Puttalamtoday