Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 7, 2015

Unknown

அமரர் பிரேமதாஸ 44 வீடுகளை நிர்மாணித்து உருவாக்கிய கர்பலா கிராமத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிர்மானிக்கவுள்ள 100 வீடுகள் கொண்ட மாடி மனைத் திட்டம்


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கர்பலா கிராமத்தில் மேலும் 100 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின் அமைப்பாளருமான அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபா ஜே.பி தெரிவித்தார்.

புதிய காத்தான்குடியையும், பாலமுனையையும் இணைக்கும் வகையில் கர்பலா கிராமமானது, 1981ம் ஆண்டில் பலத்த சவால்களுக்கு மத்தியில் முன்னாள் கிராம அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்புத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மர்ஹும் டாக்டர் எம்.எல். அகமட் பரீட் அவர்களால் உருவாக்கப்பட்டது.


அன்னாரின் வேண்டுகோளுக்கமைய அப்போது நாட்டின் பிரதமராகவும், உள்ளுராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு நிர்மான அமைச்சராகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர். பிரேமதாஸ அவர்கள் இக்கிராமத்தில் 44 வீடுகளை நிர்மாணித்து 1981.05.24ம் திகதி வைபரீதியாகத் திறந்து வைத்தார்.

தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி விவகார அமைச்சராகவுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்களின் கவனத்திற்கு இந்தக் கிராமத்தின் வரலாற்றினை முன்னிலைப்படுத்திய அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபா, தற்போது இக்கிராமத்திலும், சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழ்ந்து வரும் சொந்த வீடற்ற வறிய மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேலும் 100 வீடுகளை நிர்மாணித்து தந்தையின் வழியில் இப்பிரதேச மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என அண்மையில் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்திருந்ததாகத் தெரிவித்தார்.

இவ்வேண்டுகோளினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறு 100 வீடுகளை நிர்மானிப்பதற்கு ஏற்ற காணியொன்றை அடையாளம் காணுமாறு தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கமைய தற்போது கர்பலா நகர் அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்மாகவுள்ள காணியைத் தாம் அடையாளம் கண்டு அச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவர்களின் சம்மதத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் அடையாளம் காணப்பட்ட காணி தொடர்பாகத் தான் அமைச்சருக்குத் தெரியப்படுத்தியதாகவும், அதனடிப்படையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் கே. ஜெகநாதன், பொறியியலாளர் எம்.ஈ.எம். அலியார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த 04ம் திகதி வியாழக்கிழமை மாலை ஸ்தலத்திற்கு வருகை தந்து காணியைப் பார்வையிட்டுச் சென்றதாகவும் அமைப்பாளர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
காணியின் உறுதி, நில அளவை வரைபடம் போன்றவற்றை உடனடியாகத் தம்மிடம் கையளிக்குமாறு இதன்போது கேட்டுக் கொண்ட பிராந்திய முகாமையாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களுமே இவ்வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட வடிவமைப்பை வரைந்து அமைச்சரின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பார்கள் எனவும், வீடமைப்புத் திட்டமொன்றில் உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், வாகனத் தரிப்பிடம் போன்ற வசதிகளையும் உள்ளடக்கியதாகவே இந்தக் கட்டிட வடிவமைப்பு வரைபடம் அமையும் என்றும் கூறினார்.

இந்த நூறு வீடுகளும் தலா 33 வீடுகளைக் கொண்டதாக மூன்று கட்டிடத் தொகுதிகளில் அமையும் என்றும், 100வது வீடு, கர்பலா கிராமத்தை உருவாக்க மர்ஹும் டாக்டர். பரீட் மீராலெப்பை அவர்களுடன் அக்காலத்தில் தோளோடு தோள் நின்று பாடுபட்ட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜனாப். சுலைமாலெப்பை அவர்களின் வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும் என்றும் அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

கர்பலா கிராமம் நிறுவப்பட்ட 1981ம் ஆண்டு போடப்பட்ட குறுகிய கற்பாதையே இன்றளவும் புதிய காத்தான்குடியையும், பாலமுனைக் கிராமத்தையும் கர்பலா கிராமத்திற்கூடாக இணைக்கும் பிரதான போக்குவரத்துப் பாதையாக மிகவும் சீர்கெட்டுப்போய் உள்ளதாகவும், இந்த வீட்டுத் திட்டத்தின் மூலம் இவ்வீதி விசாலமாகவும், நவீன காபட் வீதியாகவும் நிர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுத் தலைவர் ஜனாப் கே.எம்.எம். அலயார் ஜே.பி, பொதுச் செயலாளர் ஆசிரியர் எம்.பி.எம். கையூம் பி.ஏ. பொருளாளர் எம். முபாறக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :