(எம்.எல்.எம்.அன்ஸார் )
வாப்பா
ஊட்டுக்குள்ள கட்டித்தந்த
கடக்கர.
அலயுமில்ல கிலயுமில்ல, ஆனா
காத்து மட்டும் அழ்ழாட
கசனா
*
நானும் தங்கச்சியும்
இதுலதான்
தண்ணி இல்லாம தோணி ஓட்டி
கவுண்டு உழுவம்.
கவுத்து முடிச்சில செஞ்ச
விமானம் எண்டு
அவள் ஏறிப் பறப்பாள்.
*
உஞ்சிலுக்கு ரய்வர்
வெச்சி ஓட்டுனா
கோச்சிபோல
முன்னாலயும் பின்னாலயும்
உசந்து பணிஞ்சி ஓடும்.
ஹமிதா ராத்தா முந்தி
எங்கள
உஞ்சில்ல ஏத்தி ஊர்
ஊரா சுத்திக் காட்டுவா
மோட்டுல தட்ரத்துக்கு
உரமா ஆடுவா..
உத்தி உத்தி சவிலாப்
பறக்க
சுபுஹான மவ்லத்திட ராஹத்திக்கு
ஆலின் தம்பிதான் எங்களுக்கு
உஞ்சில் ஆட ஓதித் தந்த
*
சேட்டக் கழட்டி வெச்சிட்டு
சாறனோட மட்டும் சம்மனம் கொட்டிப்போட்டுக்கிட்டு
மெல்லவா ஒள்ளுப்ப நேரம்
ஆடுனா போதும்
மூளயில இருக்கிற கவல
கக்கிசம்
முழுசா கழண்டு உழுகிறத்த
கண்ணால காணலாண்டா மன
*
எங்கிட சுலெய்ஹா மச்சி
உஞ்சில்ட காலுக்கு பக்கத்தில
வட்டா படிக்கத்த வெச்சிக்கிட்டு
சிவக்கச் சிவக்க வாயிலயும்
போட்டுக்கிட்டு
நிப்பாட்டி நிப்பாட்டி
ஆடுனத்த நினய்க்கக்க
எண்ட உடம்பெல்லாம் உஞ்சில்
போட்டு
பழய ஞாபகம் ஏறி நிண்டு
ஆடுது.
*
சுடச்சுட சுண்டுக்கோப்பயில
உம்மா ஊத்தித்தார இஞ்சித்
தேத்தண்ணிய
உஞ்சில்ட மடியில உக்காந்திக்கிட்டு
குடிச்சாத்தான்
பத்தியமா இறங்கும்.
அந்த வேர்வய என்ன சுறுக்கா
தெரியுமா
காத்த எடுத்து துறச்சி
உடும்.
*
நானும் அனிஸாவும் உஞ்சிலார்றத்துக்கு
சண்டபுடிச்சி
அடிபுடிப்படக்க உம்மா செல்லுவா –
உங்க ரெண்டு பேரையும்
அடக்கக்க
உஞ்சில் பலகயாலதான்
மஞ்சி செய்யணும் எண்டு
14-04-2015
