நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும், பொதுவாக இந்நாட்டு தேர்தல்களின் போதும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு கடைபிடித்து வரும் நிலைப்பாடுகள் குறித்தகேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கை இவ்வாறு அமையப் பெற்றுள்ளது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அதன் அமைப்புச் சட்டம் கூறுவதற்கேற்ப அது ஒரு அரச சார்பற்ற மற்றும் கட்சி அரசியலுக்கப்பாலிருந்து செயல்படும் அமைப்பாகவே இயங்கிவருகின்றது.
அதேவேளை, இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதையும் ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் தேர்தல்கள் நடைபெற்று, தெரிவு செய்யப்படும் அரசுகள் ஆட்சி புரிவதையும் அது மதிக்கின்றது.
எனினும், தேர்தல்களின் போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எந்தக் கட்சியுடனும் கூட்டிணைவதில்லை. கூட்டிணைவதற்கான ஒப்பந்தங்கள் எதிலும் இதுவரை கைச்சாத்திட்டதுமில்லை. ஒரு கட்சியை எதிர்த்து இன்னுமொரு கட்சிக்காக வேலை செய்வதுமில்லை. இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினர் இறங்க உத்தேசித்தால் அவர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர் அந்தஸ்திலிருந்து இராஜினாமா செய்துவிட்டு தனது அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள அவருக்கு இடமளிக்கப்படுகின்றது.
ஜமாஅத் இது விடயத்தில் நிர்ப்பந்தங்கள் எதனையும் ஒரு அங்கத்தவர் மீது பிரயோகிப்பதில்லை.
அது மட்டுமல்ல, தனது அங்கத்துவத்தை இராஜினாமா செய்த ஒருவரின் அரசியல் ஈடுபாடுகளுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி பொறுப்புக் கூறவும் மாட்டாது.
ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்கள் மேலே கூறப்பட்ட ஒழுங்குகளை நிர்ப்பந்தங்களின்றி
சுதந்திரமாகவே பின்பற்றுகின்றனர். அது மட்டுமல்ல, அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்களாக இருக்கும் வேளையில் தாம் விரும்பும் ஒரு கட்சிக்கோ, வேட்பாளருக்கோ வாக்களிப்பதற்கும் அவர்களுக்கு பூரண சுதந்திரமுண்டு.
நாட்டினதும் சமூகத்தினதும் நலன்களைக் கருத்திற் கொண்டு அவர்கள் இது விடயத்தில்
சுதந்திரமாகவும் தனித்தனியாகவும் முடிவெடுப்பர். இந்த முடிவுகளில் தாக்கம் செலுத்தும் ஒரே காரணி, அமைப்பின் உறுப்பினர்களது அரசியல் விழிப்புணர்வு மட்டுமே. அரசியல் காழ்ப்புணர்வு அவர்களை இயக்கும் வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி தனது உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கவில்லை.
ஜமாஅத்தே இஸ்லாமியின் இந்த அரசியல் நிலைப்பாடுகள் இன்று நேற்று எடுக்கப்பட்டவை அல்ல. இந்த நிலைப்பாடுகளை நீண்டகாலமாகப் பேணி வருபவை. ஜமாஅத் இப்போது அவற்றை மக்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கின்றது.
இன்றுள்ள சில அரசியல் சூழ்நிலைகள் ஜமாஅத்தே இஸ்லாமி பற்றி எழுப்புகின்ற சில வினாக்களுக்கு இந்த நிலைப்பாடுகள் தெளிவான பதில்களை அளிக்கக்கூடியதாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
எம். எச். எம். ஹஸன்
ஊடகப் பேச்சாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
(ஜுனைட்.எம்.பஹ்த்)
