ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினர் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னர் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டணி குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த தரப்பினர் இந்த கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் போட்டியிடுவதை இந்தக் குழுவினர் முழுமையாக எதிர்ப்பதாகவும் ஜனவரி 08ஆம் திகதி வெற்றிபெறுவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் அர்ஜூன மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தப் புதிய கூட்டணிக்கு வேட்பு மனுவைப் பெற்றுக்கொள்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த புதிய நிலைமையின் கீழ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதை ஒரு சில தினங்களுக்கு ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
srilankamirror
srilankamirror
