ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை தமது பிரதேசத்துக்கு வழங்குமாறு கோரி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நேற்றுக் காலை முதல் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
திருகோணமலை, புத்தளம், வன்னி, குருநாகல், அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் வாகனங்களில் வந்திறங்கி ஹக்கீமின் வீட்டைச் சூழ்ந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதன் அடிப்படையில் அக் கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் குறித்த ஆசனங்களை தத்தமது பிரதேசங்களில் போட்டியிட்டு தோல்வியுற்ற அல்லது வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்குமாறு கோரியே கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்புக்குப் படையெடுத்துள்ளனர்.
ஏலவே கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் மீதமாகவுள்ள ஆசனத்தை எந்தப் பிரதேசத்திற்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சியின் உயர் பீடம் கூடித் தீர்மானிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கிடையிலேயே குறித்த ஆசனத்தை தமது பகுதிக்கு தர வேண்டும் எனக் கோரி திருகோணமலை அம்பாறை புத்தளம் குருநாகல் வன்னி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்திக்க படையெடுத்துள்ளனர்.
தேர்தல் பிரசார காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசியப் பட்டியல் ஆசனம் தரப்படும் என சில பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
