(ஆபூநிதா)
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக SLMC க்குக் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை யாருக்கு வழங்குவது என்ற சர்ச்சைக்கான தீர்வு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரவுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்ற ஒரேமாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். இது ஒரு வரலாற்றுச் சாதனை என்று கூடச் சொல்லலாம்.
கடந்த 25 வருடங்கள் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளையும் ஏனைய வேலைத்திட்டங்களையும் செய்து அசைக்க முடியாது என நம்பியிருந்த தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை தோற்கடிக்கச் செய்து இவ்வெற்றியை SLMC பெற்றுக் கொண்டது இன்னுமொரு வெற்றியாகும்.
ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் கோட்டையான காத்தான்குடிக்குள் நுழைவதாக இருந்தால் அதற்கான ஒரே வழி நல்லாட்சிக்கான தேசிய முன்னணிதான் என்பதைப் புரிந்து கொண்ட SLMC யின் தலைமைத்துவம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து தனது இலக்கை அடைந்து கொண்டது.
இந்தத் தேர்தலில் எதிர்பார்த்தபடி SLMC வெற்றிபெற்றாலும் காத்தான்குடியில் களமிறங்கிய ஹிஸ்புல்லாஹ், சிப்லி பாறூக் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.
இருந்த போதிலும், ஏற்கனவே தானும் ஒப்பந்தம் செய்திருந்ததாகச் சொல்லிய ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக தனக்குரிய தேசியப் பட்டியல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
SLMC யின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட்டு வெற்றியீட்டிக் கொடுத்ததில் முக்கிய பங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இருந்த போதிலும் இதனூடாக ஏறாவூரைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானா அவர்களே வெற்றி பெற்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்த ஊருக்கொரு எம்பி வேண்டும் என்ற கோரிக்கை இவர்களின் வெற்றி மூலம் முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி என மூன்று ஊர்களுக்கும் கிடைத்திருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க..
SLMC கட்சியானது NFGG யுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பில் ஆலோசிப்பது என்ற தீர்மானத்திற்கு அமைவாக SLMC க்கு கிடைத்திருக்கிற தேசியப் பட்டியல் நியமனங்களில் ஒன்றை தரவேண்டும் என்ற கோரிக்கை NFGG யினால் SLMC தலைமைத்துவத்திடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டது.
அதனைப் தாம் பரிசீலிப்பதாகவும், கால அவகாசம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட SLMC யின் தலைமைத்தும் இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்காமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.
தேசியப் பட்டியல் பதவி கேட்டு காத்தான்குடி ஓட்டமாவடி திருமலை, வன்னி, மற்றும் அட்டாளைச் சேனை என்று பல ஊர்களிலிருந்தும் பலர் தலைவரின் கதவுகளை இன்னமும் தட்டிக் கொண்டே இருப்பதாகவும் அறிய முடிகிறது.
தாமும் தமது கட்சியும் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் காலங்களில் பல ஊர்களிலும் பலமேடைகளிலும் தங்களுக்குத்தான் தேசியப்பட்டியல் என்ற தனது வழமையான தாரக மந்திரத்தை தலைவர் பகிரங்கமாகவும் இரகசியமாகும் தெரிவித்திருந்தார். அதுவே இப்போது அவருக்கே தலையிடியாக மாறியிருக்கிறது.
SLMC க்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் இராஜினாமாச் செய்து அவர்களின் வெற்றிடங்களுக்கு இன்னும் சில நாட்களில் வேறு இருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த் தேசியப்பட்டியல் விவகாரம் மறைமுகமாக இருந்தாலும் திருமலை மற்றும் வன்னி மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இறுதியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு SLMC க்குக் கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை ஓட்டமாவடியைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் ஒருவரான சகோதரர் றியால் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
SLMC கட்சியினை வெல்லச் செய்து அதற்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்று கருத்தும் தற்போது வலுவாக மேலோங்கி நிற்கிறது.
SLMC சார்பாக போட்டியிட்டவர்களில் றியாலைவிட அதிகமாக வாக்குகளைப் பெற்றவர்களாக காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர்களான சிப்லி பாறூக் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் இருக்கிறார்கள. இவர்களில் ஒருவருக்கு வழங்குவதே பொருத்தம் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
தலைவர் ஹகீம் அவர்கள் கல்முனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில் தேசியப்பட்டியல் நியமனத்தை சுழற்சி முறையில் வழங்க ஆலோசிப்பதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதே போன்று இன்னுமொரு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையில் தேசியப்பட்டியல் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி வேறுவேறான கருத்துக்களும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தேசியப்பட்டியல் நியமனம் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கே வழங்கப்பட வேண்டுமாக இருந்தால் அது கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரான காத்தான்குடியைச் சேர்ந்த முபீன் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்ற கருத்தும் பலராலும் முன்வைக்கப்படுகிறது. இக்கருத்திலும் நியாயமில்லாமலில்லை.
எது எப்படியோ கட்சியின் மானத்தையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொடுத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அதிலும் குறிப்பாக காத்தான்குடிக்கே தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை வழங்குவது பொருத்தமானதாகும். இது தொடர்பில் SLMC யின் தலைமைத்துவம் மீண்டும் ஒருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
இல்லையென்றால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC கால்பதிப்பது கேள்விக்குறியாகிவிடும்.!
இல்லையென்றால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC கால்பதிப்பது கேள்விக்குறியாகிவிடும்.!
