தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் புதிதாக பள்ளிவாசலை நிர்மாணிக்க அரசினால் கையேற்கப்பட்டுள்ள டாக்டர் புத்ததாசவின் காணியில் இடம் ஒதுக்கப்படவேண்டும் என்று கோரி 59 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அனுப்பி வைத்துள்ளார்.
தம்புள்ளையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்களவர் இணைந்து இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தம்புள்ளையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ள 74 பேருக்கு வீடுகள் கட்டிக் கொள்வதற்காக காணிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் தம்புள்ளையில் அப்புறப்படுத்தப்பட்ட கோயிலுக்கும் காணி வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்ட கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரை வேண்டியுள்ளார்.
அக்கடிதத்தின் பிரதியும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பிவைத்த தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை நகர அபிவிருத்திக்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கவிரும்பவில்லை எனவும் அபிவிருத்திக்காக தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்படுமாயின் அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டுள்ள டாக்டர் புத்ததாசவின் காணியில் நிலம் வழங்கப்படவேண்டுமெனவும் பள்ளிவாசல் நிர்வாகமும் ஏற்கனவே வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
