இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு அனைத்து தரப்பினரதும் சம்மதத்துடனும் மரண தண்டணையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் தற்போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மறுபுறத்தில் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன பரவலாக நடைபெற்று வருகின்றது.
இவற்றைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் அவசியம். பாரிய குற்றச்செயல்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையாளர்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியும் விருப்பத்துடனேயே இருக்கின்றார்.
எனினும் அனைத்துத் தரப்பினரதும் சம்மதத்தை பெற்றுக் கொண்ட பின்பே அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
