முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், அவருடன் இருந்த கூட்டணியுமே கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடையக்காரணமாக செயற்பட்டனர் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
வெற்றிபெற்ற தலைவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுடன் இணைந்து செயற்படாது தோல்விகண்டவர்கள் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரத்தை மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் தலதா மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மாகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, உதயகம்பம்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விட்டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசியல் செய்த பெரும்பாலான அரசியல்வாதிகளை மஹிந்த ராஜபக்ஷவே தோல்வியடையச் செய்தார். அவர் சொல்வதை செய்யாத, அவரது பின்னால் செல்லாததன் காரணமாகவே திறமையான அமைச்சர்கள் எம்.பி.க்கள் பலருக்கு வெளியேற நேர்ந்தது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கட்சியின் தலைவர்களுடனே இருந்தார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவராக இருந்தபோது இவர்கள் அவருடன் இருந்தனர். கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரி பாலசிறிசேன பெற்ற பின்னர் அவருடன் இணைந்திருக்க வேண்டும். இதனைத்தான் செய்யதிருக்க வேண்டும். ஆனால் இதனை விடுத்து தோல்வி கண்டவர்கள் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரத்தை மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கியுள்ளார். அந்த அழிவுதான் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்சியின் தலைமையை பெற்றுக் கொண்ட காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கு மூலகாரணமாக அமைந்திருந்தது மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் இணைந்திருந்த இனவாதத்தை தூண்டும் கூட்டணியாகும்.
இதன் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடிமட்டத் தோல்வியைக் கண்டது. நான் சுதந்திரக் கட்சியை நேசிப்பவன், பண்டாரநாயக்கவின் கொள்கையை மதிப்பவன். எனவே எதிர்காலத்திலாவது "கை" சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு நாட்டு மக்கள் மத்தியில் செல்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இனவாத்தை, மதவாதத்தை, தூண்டிவிடும் வாய்பேச்சாள் வெற்றிபெற முயற்ச்சிப்பவர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இணைந்தால் சுதந்திரக் கட்சி அழிந்து போய்விடும்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.
