
பதவிகளுக்கான இழுபறியும் நல்லாட்சியும்
இலங்கையின் எட்டாவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.
இதற்கமைவாக நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவசரமாக மூவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீரவும் நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்சவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையே பெரும் இழுபறி தோன்றியுள்ளதாகவும் அதுவே அமைச்சர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்படக் காரணம் எனவும் தெரியவருகிறது.
அமையப் பெற்றுள்ள தேசிய அரசாங்கத்தில் 40 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 10 இராஜாங்க அமைச்சர்களும் 30 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சுக்களைப் பங்கிடுவதிலேயே தற்போது இழுபறி நிலை தோன்றியுள்ளது.
19 ஆவது திருத்தத்திற்கமைவாக அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை 30 ஐ விட அதிகரிப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அதற்கமைவாக எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றம் கூடி அமைச்சரவை நியமனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கிய பின்னரே புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியிருப்பினும் அமையப் பெற்றுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் எழுந்துள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பான இழுபறி நிலை தேசிய அரசாங்கத்தின் வெற்றிகரமான நகர்வுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமாத்திரமன்றி தேர்தலில் தோல்வியுற்றவர்களிலிருந்து தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல எனும் விமர்சனங்களும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
தேசியப் பட்டியல் மூலம் தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியதற்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஆக அமைச்சுப் பதவிகளுக்கானதும் தேசியப் பட்டியல் தொடர்பானதுமான இழுபறியும் கருத்து முரண்பாடுகளும் நல்லாட்சி அரசாங்கத்தின் சுமுகமான இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்குமானால் அது மக்கள் ஆகஸ்ட் 17 இல் மீள் உறுதிப்படுத்திய ஜனவரி 8 மாற்றத்தை குழிதோண்டிப் புதைப்பதாக அமைந்துவிடும்.
இது தொடர்பில் இரு தரப்பு அரசியல் தலைமைகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.



