Featured Home (TOP)

Recent Comments

Sunday, January 31, 2016

avathani Media Network

சுவாமி விவேகானந்தரின் ஜனன தின விழா காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில்!



(பத்மராஸ் கதிர்)

சுவாமி விவேகானந்தரின் 153 வது ஜனன தின விழா நிகழ்வுகள் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.எஸ்.நேசராஜா அவர்களின் தலைமையில் கண்ணகி சனசமூக நிலையத்தில் வெகுசிறப்பாக இன்று(31) ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.

சுவாமிஜியின் திவுருவப்படம் கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு நந்திகொடியேற்றல் சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தல் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு,பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.ச.கணேசராஜா அவர்கள் கலந்து கொண்டதோடு மேலும் ஆன்மிக அதிதிகள் கௌரவ அதிதி மற்றும் சிறப்பு அதிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு கழக உறுப்பினர்கள் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Read More
avathani Media Network

"கல்வியின் நோக்கத்தினை புரிந்து கொள்ளாத வரை நமது பிரச்சினைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது" பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"அறிவியற்துறை மிக வேகமாக வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு முறையான ஆய்வு மிகமிக அவசியமாகின்றது. கல்வி என்பது மிக விரிந்த பார்வையுடனும், சமகால உலக நியமங்களுக்கு ஏற்பவும் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.  கல்வியின் நோக்கத்தினையும், அதன் பரப்பினையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை நமது சமூகம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தொவித்தார்.


இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் கல்விப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கான  அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று (31.01.2016) 'அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றது. அதன் தலைவர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் தலைமையில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் நடைபெற்ற இவ்வங்குரார்ப்பண நிகழ்வில் 'தனியார் உயர் கல்வியின் தாக்கங்களும், பங்களிப்பும்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்குவதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு அழைக்கப்பட்டிருந்தார்.


இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCAS Campus நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது...


'அறிவியற்துறை மிக வேகமாக வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு முறையான ஆய்வு மிகமிக அவசியமாகின்றது. கல்வி என்பது மிக விரிந்த பார்வையுடனும், சமகால உலக நியமங்களுக்கு ஏற்பவும் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு பற்றி பேசப்படுகின்ற பல தருணங்களில் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை ஒப்பீடு செய்வதிலும், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு எத்தனை பேர் தெரிவாகின்றனர் என்ற ஒப்பீடுகளுடனும் பலரது பார்வைகளும் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. இது மிகவும் துரதிஸ்டவசமானது. கல்வியின் நோக்கத்தினையும், அதன் பரப்பினையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை நமது சமூகம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.


பல்கலைக் கழக அனுமதியினை நமது சமூகத்தில் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதற்கு சமமாகவே ஏனைய பல விடயங்களிலும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். முறையான ஆரம்பக் கல்வி, பாடசாலை இடைவிலகல், ஆங்கில மற்றும் கணனி விஞ்ஞானத்துறையிலான ஊக்குவிப்பு, பல்கலைக் கழக வாய்ப்புக் கிடைக்காதோருக்கான மாற்றுவழிகள், தொழில் கற்கைகள், கல்வியின் மூலமாக கிடைக்கும் ஒழுக்க பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆழுமை விருத்தி அத்தோடு துறை சார் பிரயோக அறிவு என ஏனைய பல்வேறு விடயங்களிலும் நமது கவனம் குவிக்கப்படவேண்டும். 


அந்த வகையில், முஸ்லிம் கல்வி மகாநாட்ட்டின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்ற இந்த ஆய்வு பத்து தலைப்புக்களில் ஒரு விரிவான பரப்பைக் கொண்டிருக்கிறது என்பது திருப்தியளிக்கிறது.


இன்றைய புதிய உலக ஒழுங்கில் ஏனைய துறைகளில் இருப்பது போலவே உயர் கல்வித்துறையிலும் தனியார் துறையினரின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. நம்நாட்டில் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறும் 150000 க்கும் அதிகமான மாணவர்களில் 25000 பேர்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தினால் பல்கலைக் கழக வாய்ப்பினை வழங்கக் கூடிய இருக்கிறது .இந்நிலையில் ஏராளமான ஏனைய மாணவர்களுக்கான வாயப்புக்களை வழங்கக்கூடிய வழிமுறையாக தனியார் உயர் கல்வித்துறை இன்று இலங்கையில் மாறியிருக்கிறது. அரசாங்கம்கூட இதனை ஒரு தேசிய பங்களிப்பாகவே கருதி இதனை மேலும் மேம்படுத்துவதனை தனது கொள்கையாக வகுத்துக் கொண்டிருக்கிறது.


தனியார் உயர்கல்வித்துறையானது ஏராளமான வாய்ப்புக்களைக் தருவது போலவே பல்வேறு புதிய புதிய சவால்களையும், பிரச்சினைகளையும் அது ஏற்படுத்தியிருக்கிறது. இந்நாட்டில் தனியார் உயர் கல்வி நிறுவனமொன்றை ஸ்தாபித்து தொடர்ந்தும் தலைமை தாங்கி வழி நடாத்துகின்றவன் என்ற அடிப்படையில் இத்துறையில் எனக்கு 16 வருட அனுபவமிருக்கிறது.
இதனடிப்படையில், தனியார் உயர் கல்வியினை நெறிப்படுத்தித் தரப்படுத்துகின்ற ஒரு முறையான கட்டமைப்பு இந்நாட்டில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகும். எனது வெளிநாட்டு அனுபவத்தோடு இவ்விடயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்நாடுகளின் தனியார் உயர் கல்வித்துறை மிக நுணுக்கமாக நெறிப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம் தரமான கல்விச் சேவையினை தமது மாணவர்களுக்கு அவர்கள் உத்தரவாதப்படுத்துகின்றனர். இந்த நிலைமை இன்னும் இங்கு உருவாகவில்லை. உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான பல சந்திப்புக்களின் போது நான் இதனை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.


அதேபோல் முஸ்லிம் சமூகம் தனியார் உயர் கல்வித்துறையை பயன்படுத்திக் கொள்வதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் ஒன்று நமது மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் போதைமை. மற்றையது பொருளாதாரச் சிக்கல்கள்.  இந்த இரண்டுக்குமான தீர்வுகளை ஒரு ட்டமைக்கப்பட்ட ஒழுங்கின் ஊடாக வழங்க முடியுமெனின் தனியார் உயர் கல்வித்துiறியின் உச்சகட்டப் பலன்களை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள முடியும்.


இந்நாட்டின் சிறுபான்மை மக்களாக நாம் வாழுகின்ற போதிலும் கூட நாம் பல்வேறு துறைகளிலும் கனிசமான பங்களிப்பினை நாட்டுக்கு வழங்கி வருகிறோம். ஆனால், முறையான புள்ளி விபரங்களுடன் இவை முன்வைக்கப்படுவதில்லை. அந்த வகையில் எனது தலைமையில் இயங்கும் உயர் கல்வி நிறுவனமானது முழு நாட்டிலும் ஏனையோர்களால் செய்யமுடியாத பல பங்களிப்புக்களை உயர் கல்வித்துறையிலும், தொழில் வாயப்புக்களை உருவாக்குவதிலும் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதிலும் செய்திருக்கிறது. இந்நாட்டின் குடிமகனாகவும், அதே வேளை ஒரு முஸ்லிம் பிரஜையாகவும் இருந்து செய்யப்பட்ட இந்தப் பங்களிப்பானது முஸ்லிம் சமூகத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தேசிய பங்களிப்புக்களில் ஒன்று எனத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்."
இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் முஹம்மட் நாஜிம், கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி உவைஸ் ஹனீபா, உயர் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் அஸ்ஸெய்க் முஹம்மது நவவி,ஜெஸீமா இஸ்மாயில், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதிகளான முஹம்மட் றமீஸ், கலாநிதி முஹம்மட் நுபைல்,முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் NM அமீன் உள்ளிட்ட 50க்கும் அதிகமான முஸ்லிம் கல்வி மான்களும், புத்தி ஜீவிகளும், துறைசார் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.









Read More
avathani Media Network

புதிய அரசியல் யாப்பு முஸ்லிம்களுக்கு வைக்குமா ஆப்பு?

(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)

இலங்கையின் அரசியலமைப்பினை திருத்துவது அல்லது புதிதாக உருவாக்குவது தொடர்பில் பல்வேறு கதையாடல்கள் இன்று பேசுபொருளாகியுள்ளது.அரசியலமைப்பை புதிதாக மறுசீராக்கம் செய்வதா? அல்லது சில பகுதிகளில் திருத்தங்களைக் கொண்டுவருவதா என்பதில் கூட ஒருமித்த கருத்து நிலை இன்னும் ஏற்படவில்லை.இதனால்தான் கடந்த 26.01.2016 இல் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் நிர்ணய சபை குறித்த விவாதம் முன்கூட்டியே இரத்துச் செய்யப்பட்டு நடைபெறாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை முற்றாக ஒழிப்பது, நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் தொகுதி ரீதியாகவும் விகிதாசார வகையிலும் கலந்த முறைமையினை தோற்றுவிப்பது,இனப்பிரச்சனைக்கு தீர்வினைக் காண்பது ஆகிய மூன்று விடயங்கள் முன்னிறுத்தியே அரசியலமைப்பு விவகாரம் இன்று பேசப்படுகின்றது.
நமது நடைமுறை அரசியலமைப்பினைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றிக்கொள்வதினால் மட்டும் அரசியலமைப்பை முழுமையாக மாற்றிக்கொள்ள முடியாது என்பது ஒரு விடயம்.ஏனெனில் உலகிலுள்ள அரசியலமைப்புக்களை நெகிழும்,நெகிழாத அரசியலமைப்பு என்ற பாகுபாட்டுக்குள் உள்ளடக்கிப் பார்க்கும் வகையில்தான் பெரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தினை வைத்து அரசியலமைப்பினைத் திருத்தும் மாதிரியில் அமைந்திருந்தால் அது நெகிழும் யாப்பு எனவும்,விஷேட விதிகளை வைத்து திருத்தம் செய்யலாம் என்கின்ற மாதிரியை கொண்ட அரசியலமைப்புக்கள் நெகிழாத யாப்பு என்றும் நோக்கப்படுகின்றது.
தற்போதைய நமது அரசியலமைப்பைப் பொறுத்தவரை அதிலுள்ள பல பகுதிகளைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பாராளுமன்ற பலத்தினைக் கொண்டு மாற்றிக்கொள்ள முடியும்.இன்னும் சில பகுதிகள் நாடாளுமன்ற பலத்துடன் மக்கள் தீர்ப்பினையும் பெற்றுத்தான் திருத்தங்கள் செய்ய முடியும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக நமது நாட்டு அரசியலமைப்பு நெகிழா யாப்பு முறைமையினை கொண்டதாக விளங்குவதை அறிய முடியும்.இதனால்தான் இன்றைய நல்லாட்சிக்கு முந்தைய 100 நாள் வேலைத்திட்டத்தின் போது , அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பத்தொன்பதாம் திருத்தத்துக்கு முன்மொழியப்பட்டிருந்த சில விடயங்களை நிறைவேற்ற முடியாது போயின.அதாவது முன்மொழிவுக்கு உட்பட்ட சில விடயத்தில் மக்கள் அபிப்பிராயம் பெறப்பட வேண்டிய பகுதிகள் இருந்தன.
இதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் தீர்ப்புக்குரிய விடயங்களை இப்போது நிறவேற்றுவதில்லை என அன்று அறிவிப்புச் செய்திருந்ததாகும்.ஆயினும் அண்மையில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பைத் திருத்துவது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதனூடாக மக்கள் தீர்ப்பு தேவைப்படும் பகுதிகளில் திருத்தத்துக்கு உட்படுத்தப்போவதில்லை என்ற அர்த்தத்தினை இது சுட்டிக்காட்டுவதாக பார்க்க முடிகின்றது.
நமது  நடைமுறை அரசியலமைப்பின் படி இன்று நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமை என்பதை திருத்துவதாயின் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் மக்கள் தீர்ப்பும் தேவைப்படும்.சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் நிகழாது என்பதை திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் பௌத்த மதத்தினை முதன்மைப்படுத்திய யாப்பின் பகுதி திருத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை மீதான தனது கருத்துக்களை பிரதமர் பின்னர் வெளிப்படுத்துவதாகக் கூறியிருப்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது விடயத்தில் கருத்து எதனையும் தெரிவிக்காது இன்றுவரை இருப்பதைக் கொண்டு இவ்விரு விடயங்களிலும் மாற்றம் நிகழாது என்றே நம்பலாம்.
உண்மையில் “இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்” என்ற உறுப்புரை 2 “இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும்” என்ற வாசகத்துக்குரிய உறுப்புரை 9 ஆகியனவும் நாடாளுமன்ற பலமும் மக்கள் தீர்ப்பும் இன்றி மாற்றியமைக்க முடியாத பகுதிகளில் உள்ளவைகள் என்பதை அவதானிக்கலாம்.
சோல்பரி அரசியலமைப்பில் எவ்வாறு யாப்பினைத் திருத்த வேண்டும் என்பது பற்றி கடுமையான கட்டுப்பாடுகள் எதனையும் அது கொண்டிருக்கவில்லை.இதனால்தான் 1972 இல் நமது நாட்டின் முதலாவது சுதந்திர குடியரசு யாப்பினை வரைந்து நிறைவேற்றிக்கொள்வதை இலகுபடுத்தியிருந்தது. ஆனால் அன்றைய நாடாளுமன்றத்தின் பலம் என்பது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 157 பேர்,இவர்களில் 91 ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியிருந்தது.ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி பெற்றிருந்த 19 ஆசனங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த 6 ஆசனங்களையும் இணைத்துக்கொண்டு மொத்தமாக 116 உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கமாக அது அமைந்திருந்ததென்பது கவனத்துக்குரியது.
அதேபோன்று இலங்கையின் இரண்டாவது சுதந்திரக் குடியரசு யாப்பு 1978இல் உருவாக்கப்பட்டதாகும்.இது முதலாம் குடியரசு யாப்பில் (1972) எவ்வாறு அரசியலமைப்பை திருத்தவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது.அதில் நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பலத்தையே குறித்து நின்றது.இதற்கு இசைவாக 168 மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 140 பேர் தனித்து ஐக்கிய தேசியக் கட்சி பெற்று ஆட்சியமைத்தது.இது ஆறில் ஐந்து பலம் கொண்டதாகும்.இதனால் வ்வித சிரமமுமின்றி அரசியலமைப்பை புதிதாக உருவாக்க வழிசமைத்தது.
இவ்விரு அரசியலமைப்புக்களும் ஒரு இனப்பிரச்சனைத் தீர்வுக்காக புதிதாக உருவாக்க முனைந்தவை அல்ல.ஆளும் கட்சிகளாக வரும் பெரிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆட்சி நலன் சார்ந்ததாக அவைகள் ஆக்கப்பட்டிருந்தன.அப்போதுகூட தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் முன்வைத்த சிறுபான்மை நலன் சார்ந்த எந்தக் கோரிக்கைகளயும் ஏற்றுக்கொள்ளாத ஒரு கோணம் அங்கு நடந்தேறிய வரலாற்றுப் பதிவையும் அது கொண்டுள்ளது.
இன்று அரசியலமைப்பு உருவாக்க அல்லது திருத்துவதற்கு முன்வைக்கப்படும் காரனங்களுள் இனப்பிரச்சனை தீர்வுக்கான பொறிமுறையாகவும் இது அமைய வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியதுமாகும்.இதனால் பெரும்பாலும் மக்கள் தீர்ப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டியவற்றையும் உள்வாங்கக்கூடும்.அவ்வாறான நிலையில் பின்வரும் இரண்டு விதமான கடும் எதிர்ப்புக்களை அரசியலமைப்பு நிர்ணய சபை எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்.
01)நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படும்போது சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க மேலாண்மையுடைய மனோபாவத்துக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் அதிகரித்து காணப்படுவது.
02)சிங்கள-பௌத்த பேரினவாத மேலான்மை குடிகொண்ட சிங்கள மக்கள் நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலைமை காணப்படுவது.
இத்தகைய சூழலில் பெரும்பான்மையாக சிங்கள மக்களின் மன உரமூட்டலுக்கு எதிராக செயல்படுவதற்கு அச்சமூகம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயலாற்ற துணிந்துகொள்வதில் நடைமுறைச்சிக்கல் இருப்பது வெளிப்படையானது.அதுமட்டுமன்றி இதே மனோபாவமுடைய மக்கள் பெருகிக் காணப்படுவதனால் மக்கள் தீர்ப்பு அவர்களுக்கு வலிமையுடையதாக அமைந்துவிடக்கூடிய சாத்தியமே அதிகம் காணப்படுகின்றது.
ஏனெனில் சமதர்ம கொள்கையுடைய அரசியல் கட்சி சார்ந்த அரசியல் பிரதிநிதிகள் கட்சியின் அபிமானிகள் கூட இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் தோரணையில் எழுதியும் பேசியும் செயற்பட்டும் வரும் சூழலையும் தருணங்களையும் நாம் கண்கூடாகவே பார்ப்பதினால் இவ்வாறான ஐயப்பாடுகள் மேற்கிளம்புவது ஆச்சரியத்துக்குரியதல்ல.
நமது நாட்டின் இனப்பிரச்சனை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான ஒரு பிரச்சனை போன்று நோக்கும் ஒரு நிலையும் கட்டமைப்பு மாயையும் இருந்துவருவதை நிதர்சனமாக பார்க்கின்றோம்.இது நமது நாட்டின் இனப்பிரச்சனையின் உண்மை நிலைக்கு புறம்பானதாகும்.சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அதே போன்று தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் என்றும் சில பிரச்சனைகள் இருந்துவருவது உரத்துச்சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும்.
இலங்கை முஸ்லிம்களின் இருப்பியல் சார்பு ஒரு இக்கட்டானதும் கைசேதப்படக்கூடிய வகையிலும் அமைந்திருக்கின்ற யதார்த்த பாங்கு உள்வாங்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும்.குறிப்பாக மொத்த முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் இவ்விரு மாகாணங்களுக்கு வெளியில் ஏனைய மொத்த முஸ்லிம்களில் மூன்றில் இரு பங்கினர் வாழ்கின்றனர்.
இதனாலும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,நெருக்குவாரங்கள் என்பன ஒருமித்தும்,வேறுபட்டும் காணப்பட்டு ஒரு பொறிமுறையைப் பெற்றிருக்கின்றது.இதற்கேற்ப முழு நாட்டிலும் வாழும் முஸ்லிம்களுக்கான தீர்வுப்பொதி என்ற வகையில் நமது மக்களின் அரசியல் பிரதிநிதிகள்,புத்திஜீவிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,புலமை சார் சமூகத்தினர்கள் உலமாக்கள்,சிவில் சமூகம் போன்றவர்கள் ஒன்றுகூடி ஒரே வகையான தீர்வாக முன்வைக்கும் முன்னகர்ச்சியை மேற்கொண்டதாக காணப்படவில்லை.
இவ்வாறு காணப்படாமை என்பது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் உரித்தான ஒரு பலவீனமாக பார்க்கப்படுகின்றது.ஆனால் இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்ந்தாலும் முஸ்லிம்களுக்கு ஒரே வகையான தீர்வென்று முன்வைக்கக் கூடிய கட்டமைப்பை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு யதார்த்தமாகும்.யதார்த்தங்களை மீறி நடப்பதாயின் அது ஒரு அற்புதமாகத்தான் இருக்க முடியும்.
வடக்கு,கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் இயன்றவரை பிரச்சனைகள் தோன்றும்போது அந்த சூழலுக்கு ஏற்றவகையிலும் அந்தந்த சந்தர்ப்பத்துக்கான நிவாரணமாகவும் அடைவுகளை பெற்றுக்கொள்ளும் நகர்ச்சியைக் கொண்ட இயங்குதளத்தை அல்லது போக்கை கடைப்பிடித்துக்கொள்ளும் ஒரு கோணம் நீண்டகாலமாக இருந்துவருவது அவதானிப்புக்குரியது.நமது நாட்டைப் பொறுத்தவரை சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் கொதிப்புக்கு முதலிரையான சமூகமாக முஸ்லிம்களே இருக்கின்றனர்.இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக 1915 இல் இடம்பெற்ற சிங்கள , முஸ்லிம் இனமோதலைக் குறிப்பிட முடியும்.
விதிவிலக்காக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் அல்லது தென்கிழக்கு அலகு என்ற திட்டத்தையே இதுவரை முன்வைத்துள்ளனர்.இதில்கூட சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக கட்சி நலன் சார்ந்து நின்று ஆட்சேபனைகளையும் குறுக்கீடுகளையும் எதிர்க்கேள்விகளையும் முன்னிறுத்தி காரியமாற்றுபவர்களாகவும் உள்ளனர்.
திட்டவட்டமான ஒரு தீர்வுப்பொதியாக இலங்கை முஸ்லிம்களை முழுமையா உள்ளடக்கி பேசுவதில் சில தடைகள் இருப்பது தவிர்க்க இயலாதது.இதனால் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களை முன்னிறுத்தி பேசும் தீர்வுகளில் அக்கறைகாட்டுவதென்பது இனச்சுத்திகரிப்புக்கும் பல்வேறு உயிர் அழிப்புக்கும் பல்வேறு பொருளாதார இழப்புக்களுக்கும் வெகுவாக ஆட்பட்டு பாதிக்கப்பட்டுவந்திருப்பதனாலாகும்.
என்றாலும் இவ்விரு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தில் நேரடியாக ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை உள்ளடக்காவிட்டாலும் கூட அவர்களுக்கு ஒரு பலத்தை அல்லது ஒரு பின்புல சக்தியாக இத்தீர்வுத்திட்டத்தினூடாக பாதுகாப்பு அரணாக அமைந்து அவர்களையும் உள்ளடக்கிய முழு முஸ்லிம் சமூகத்துக்கான ஒரு குரலாகவும் அமையுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலாகும்.
அரசாங்கத்துடன் தமிழர்கள் பேசி ஒரு தீர்வை எட்டிக்கொள்ள முனைகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் திடீரென முஸ்லிம்கள் அதற்குள் புகுந்து எங்களுக்கும் தீர்வு வேண்டும் என கூக்குரலிட்டு தமிழர்கள் தமது உரிமையை அடைந்துகொள்வதற்கு ஒரு தடைக்காரணியாக முஸ்லிம்கள் இருந்துவருகின்றனர் என்கின்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேரூன்றப்பட்ட,உரமூட்டிய உரையாடலாக நடந்துவருவதும் நமது கவனங்களுக்கு புறம்பானதல்ல.
உண்மையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு முன்வைக்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் அதுவும் தீர்வை வழங்கக்கூடிய அரசாங்கம் அதற்கான முனைப்பைக் காட்டுகின்ற போது முஸ்லிம் சமூகம் அந்த நிலையில் தமது பிரச்சனைகள் பற்றி பிரஸ்தாபிக்காதும் பேசாதும் இருந்துவிட்டால் அவர்களுக்கான தீர்வு எப்படி சாத்தியமாகும்?இந்த தவறை செய்தால் மீண்டும் ஒரு குழப்பகரமான பிணக்குகளையும் அழிவுகளையும் உருவாக்கித்தான் தீர்வைத்தேட வேண்டிய ஆரோக்கியமற்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியதாக அமையும்.
இதனை தவிர்ப்பதற்காகவும் அதிகாரப் பகிர்வுகளை முன்வைக்கக்கூடிய அதிகாரத்துவமுடைய அரசாங்கம் நியாயங்களைக் காண முன்வரும்போது அதில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்களும் தமது பிரச்சனைக்கான தீர்வை தேடிக்கொள்வது ஒரு முன்மாதிரியானதும் அமைதியானதுமான முறைமைகளினூடாக பிரச்சனைகளை முறியடித்துக்கொள்வதற்கு முனைகின்ற ஒரு நகர்வின் பக்கமான செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
அவசியத்தின் அடிப்படையில் தேவையான விட்டுக்கொடுப்புக்களை கொண்ட நெகிழும் தன்மையுடைய கருத்தியல்களை திரட்சியாகக் கொண்ட சாத்தியமான தீர்வுகளை நாம் அடைந்துகொள்வதற்காக நமக்குள் ஒரு கட்டமைப்புடன் கூடிய பொறிமுறைகள் வகுக்கப்படுவதை இன்றைய சூழல் நமக்கு அவசியப்படுத்தியிருக்கின்றது.
இந்த சூழலை சரியாக நாம் பயன்படுத்திக்கொள்வதற்கு தவறுவோமாயின் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் அல்லது மாற்றத்தினூடாக முன்னகர்த்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் இனப்பிரச்சனைத் தீர்வில் முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்படாத ஒரு பொறிமுறைக்குள் தள்ளிவிடும் ஆபத்தையும் அது எதிர்காலத்தில் வேண்டப்படாத விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியத்தையும் கவனத்திலெடுத்து இந்த யாப்பு நமக்கு ஆப்பாக மாறாமல் பாதுகாப்போம்.
Read More
avathani Media Network

மருதமுனை ஜம்'இய்யா 5வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம்

 (காமிஸ் கலீஸ்)
இலங்கை நாட்டின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மருதமுனை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்'இய்யா) 5வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் இவ் இரத்ததான ஏற்பாட்டில் மருதமுனையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பங்களிப்பினைச் செய்துள்ளனர். அதே போன்று இவ்வருடமும் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றி இன்னொரு உயிரைக் காக்க எம்மால் இயன்றதொரு பங்குபற்றலினை வழங்க உறுதிகொள்வோம்.
Read More

Saturday, January 30, 2016

avathani Media Network

ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் 68வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

முஸ்லிம்களின் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும்,  நாட்டின் அனைத்து சமூகங்களுடனான சகவாழ்வை மேம்படுத்துவதற்குமாக பிரமாண்டமான சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஜமாஅதுஸ் ஸலாமாவின் கல்குடா கிளை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 04.02.2016 (வியாழக்கிழமை) சுதந்திர தினத்தன்று மாலை 4.00 தொடக்கம் 5.30 வரை ஓட்டமாவடி அமீர் அலி பொது மைதானத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள சர்வமத தலைவர்களும் கல்விமான்களும அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர். நிகழ்வின் சிறப்பு உறையினை அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்விற்கு இன, மத, சமய பேதமின்றி ஆண்கள், பெண்கள் என  அனைவரும் கலந்து கொண்டு நாட்டுப் பற்றை வெளிப்படுத்துமாறு ஸலாமா அன்புடன் அழைக்கின்றது.
Read More
avathani Media Network

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய விஷேட தினம்.

(நிந்தவூர் - முஹம்மட் ஜெலீல்)
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய விசேட தினத்தை முன்னிட்டு இன்று  30-01-2016, சனிக்கிழமை   நிந்தவூர் பொது  மைதானத்தில் இடம்பெறும் மாபெரும் உடற்பயிற்சி.
இந்உடற்பயிற்சி நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசால் காசிம், அவர்கள் கலந்துகொண்டதோடு இதில் நிந்தவூரிலுள்ள அரச நிறுவனங்களான பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும்  வைத்தியசாலை ஊழியர்களென பலர் கலந்துகொண்டதோடு நிந்தவூரிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் உடற்பயிற்சி நிகழ்வினைத் தொடர்ந்து விளையாட்டுக் கழகங்களோடு இணைந்து அரச நிறுவன ஊழியர்களும் கழகங்களாக பிரிக்கப்பட்டு கபடி, கிரிக்கெட்.போன்ற விளையாட்டில் ஈடுபட்டனர்.






---


Read More

Friday, January 29, 2016

avathani Media Network

நான் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை


பாராளுமன்றத்தில் தான் நேற்று (28) கழ்த்திய உரையினூடாக ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

பிரதமர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஒவ்வென்றுக்கும் பின்னால் இருப்பவர்கள் யார் என்று பெயர்களை குறிப்பிட்டேன். அது எமது உரிமையல்லவா? என்று கூறியுள்ளார். 

பத்திரிகைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர் குறிப்பட முடியும் என்றால் ஏன் எமக்கு ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிட முடியாது. 

அவர்கள் கூறுகிறார்கள் தகவல் அறியும் சட்டம் ஒன்றை கொண்டு வருமாறு. அவ்வாறு கொண்டு வந்தால் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

நான் இங்கு குறிப்பிட்டது ஊடகங்களிற்குள்ளிருந்து வௌிவரும் கருத்துக்களையே. அரசியல்வாதிகளின் கருத்துக்களையல்ல என்றும் கூறியுள்ளர். 
Read More
avathani Media Network

கல்முனை பிரதான பஸ்தரிப்பிடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு

கல்முனை பிரதான பஸ்தரிப்பிடத்திலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலிருந்து இந்த சடலம் சடலம் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த 45 வயதான தனியார் பஸ் நடத்துநர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-newsfirst.lk
Read More
avathani Media Network

ஸீகா வைரஸ் குறித்த சுகாதார அமைச்சர் அவதானம்

பல்வேறு உலக நாடுகளில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் ஸீகா வைரஸிற்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொற்று நோய் பிரிவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார். 

ஸீகா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாட்டில் இல்லாவிட்டாலும் அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் தலைமையில், சுகாதார அமைச்சு நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். 

ஸீகா வைரஸை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தயாராக இருக்குமாறு தொற்று நோய் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர், அதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
Read More
avathani Media Network

SLMC தலைமைத்துவம் கருத்திற் கொள்ளுமா...?

முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராட்டக் களத்தில் மிக தீவிரமாக இயங்க மறைந்த தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு மக்களின் இருப்பை உறுத்திப்படுத்தி உரிமைகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த போது எம்மனைவரையும் விட்டு மறைந்து சென்றார்.

அந்த தருணத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பல சூழ்ச்சிகளையும் தகர்த்து தற்போதைய தலைவர் சகோ.ரௌப் ஹக்கீம் கட்சியை சரியாக வழிநடத்திக்கொண்டிருக்கும் போது பல குள்ளர்களின் சதிகளும் அரங்கேராமலில்லை. அவற்றையெல்லாம் தர்த்தேரிந்து கட்சியை கொண்டு சொல்லும் போது தலைமைக்கு பல சவால்கள் வராமளுமில்லை. என்பதை சகலரும் நன்றாக அறிவோம்.

ஆனால் அம்பாரை,திருமலை,மட்டு  மாவட்டங்களை  பொறுத்தவரை கட்சி சற்று ஆட்டம் காண ஆரம்பிக்கிறது என்பதை கட்சி அறியாமளுமில்லை. ஆனால் கட்சி தலைமை சாணக்கியமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரமும் இதுவே.

கட்சியின் சார்பில் தற்போது அங்கம் வகிக்கும் ஆரம்ப கால போராளிகளை கௌரப்படுத்தி ஒரு புறம் வைத்து விட்டு கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது. அந்த வகையில் பழைய முகங்களையே மக்கள் ஆதரித்து அவர்களின் மீது அதிருப்தி கொண்டுள்ளதை நன்றாக சிந்திக்க கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, எதிர்வரும் காலங்களில் நடைபெறப்போகும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது கட்சியின் கடமையாகும் .இதனையே மக்களும் விரும்புகின்றனர். 

அதிருப்தி கொண்ட மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அடங்கலாக 40 ஆயிரத்திக்கும் மேலதிகமான வாக்குகள் சிங்கள சகோதர வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்தமையும் கட்சியின் நிர்வாகத்தின் கீளே  உள்ள கல்முனை மாநகர சபைக்கு முன் வைக்கப்படும் விமர்சனங்களும்  இதற்க்கு நல்ல உதாரணமாக கொள்ளலாம் 

அதே போன்று எதிர்வரும் காலங்களில் பழைய முகங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மக்கள் விரும்புவது போல புதிய முகங்களாக களமிறக்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலின் போது கல்முனை தொகுதியில் கல்முனையின் ராஜாவாக இருந்து செயலாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் மகனான ரஹ்மத் மன்சூரையும்,பொத்துவில் தொகுதியில் அட்டாளைச்சேனை மக்களுக்கு நீண்ட நாட்களாக ஆசைகாட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கதிரையை வழங்குவதற்காக வினைத்திறன் மிக்க மாகாண  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சகோ.ஏ.எல்.எம்.நசீருக்கும்,சம்மாந்துறை தொகுதியில் மக்கள் நலனை கருத்திற்கொண்டு  இம்முறை தேர்தலில் களமிறங்காது விட்டுகொடுத்து கட்சிக்கு பல வகையிலும் ஒத்தாசை புரிந்து வரும் பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர் அவர்களையும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு களமிறக்க வேண்டும் என்பது மக்களினதும்,புத்திஜீவிகளினதும்  கருத்தாக உள்ளது.

இவ்வாரன  ஆலோசனைகளை கட்சியும், தலைமையும் ஏற்று நடப்பதன் மூலம் பல குள்ளநரி தந்திரம் கொண்ட வர்களிடமிருந்து எமது மக்களின் உரிமைகளையும் கட்சியின் இருப்பையும் தக்க வைத்து கொள்ளலாம்.இதனை கட்சி கரிசனை கொள்ளுமா?????

சஜா எம்  அனஸ் 
Read More

Thursday, January 28, 2016

avathani Media Network

எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
பட்டதாரிகளுக்கு 10,000.00 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகானத்திற்கு வெளியில்
அனுப்பினால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும் என
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.....
2016ம் ஆண்டிற்கான முதலாவது கிழக்குமாகாண சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை
(26.01.2016) அன்று திருகோணமலை பேரவைச் செயலகத்தில் சபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் குறைந்த ஊதியத்துடன் வெளி மாகாணங்களில்
நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விஷேட பிரேரணை ஒன்று கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இவ் அமவர்வில் உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பட்டதாரிகளுக்கான
பயிற்சி நியமனத்தைப் பெற்றிருக்கின்ற அநேகமான பட்டதாரிகள் ரூபா 10,000.00
ஊதியத்துடன் மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது
இப்பட்டதாரிகளை பாரிய அசௌகரியங்களுக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் என்ற வகையில் அவர்களை உடனடியாக
மாகாணத்துக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்சபையில்
முன்மொழிந்தார்.

இலங்கையில் பல தசாப்தங்களாக எமது மாணவச் செல்வங்கள் இலவசமாக கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் வரையும்
இலவசக் கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் பன்னிரெண்டு
ஆண்டுகள் பாடசாலைகளிலும் அதனைத் தொடர்ந்து 3,4,5 வருடங்கள் அவர்களுடைய
பட்டப்படிப்புகளை பல்கலைக்கழகங்களிலும் முடித்துவிட்டு, மேலும் இரண்டு மூன்று வருடங்கள் தாமதத்தின் பின்பு அவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுகின்றபோது
பத்தாயிரம் ரூபாவினைக் கொடுத்து மாகாணத்துக்கு வெளியில் அதுவும்
தூரப்பிரதேசங்களுக்கு அவர்களை அனுப்புகின்ற இந்தச்செயலானது எதிர்வரும்
காலங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்வது ஒரு கேள்விக்குறியானதொரு விடயமாக மாறும் என்பது என்னால் உறுதியாகச்சொல்ல முடியும். ஏனென்றால் தற்போது வளர்ந்து வருகின்ற இளம் சமூகம் வேகமாக பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு
வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு பல கற்பனைகளுக்கு மத்தியில் தங்களுடைய கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் பிள்ளைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தாங்கள் பொருளாதாரத்தினை ஈட்டி வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று
விரும்புகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான தூர இடங்களுக்குப் பட்டதாரிகளை அதுவும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தினைக் கொடுத்து அவர்களை பயிலுனர்களாக ஒரு
வருடத்துக்கு அமர்த்துவதென்பது நிச்சயமாக அவர்கள் மீது ஒரு பாரிய
சுமையைச்சுமத்துகின்ற ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் கிழக்கு
மாகாணத்திலிருந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கொழும்பு, கண்டி
என்று பல்வேறு இடங்களில் மாகாணத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
வளர்ந்து கொண்டிருக்கும் இந்த கல்விச் சமூகத்தில் அதிகமானவர்கள் பெண்களாகவே
இருக்கின்றனர், பல்கலைக் கழகங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உயர்
கல்வி கற்கின்றனர்.
பெண்களை தூர இடங்களுக்கு நியமித்து அனுப்புகின்ற பொழுது அவர்களால்
தொடர்ச்சியாக வேலைசெய்ய முடியாது போகின்றது.

எங்களுக்கு பல அனுபவங்கள்
இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு
வேலைவாய்ப்பினைப் பெற்றுவருகின்றவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் 2 அல்லது 3 வருடங்களில் திருமணம்செய்து ஓரிரு வருடங்களில் கர்ப்பிணியாகின்றார்கள்
அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு போக்குவரத்து
செய்யமுடியாது போன்ற காரணங்களை முன்வைத்து தற்காலிக இடமாற்றம் செய்து
அவர்களின் பிரதேசங்களில் கடமை புரிகின்றனர், இலங்கை சட்டத்தின் பிரகாரம்,
அவர்களது மகப்பேற்றுக்கு பின்னர் 81 வேலை நாட்கள் அவர்களுக்கு விடுமுறை
கிடைக்கின்றது. சிசுவொன்றினை பெற்றெடுத்தபின்பு மீண்டும் ஏறத்தாள 9 மாதங்கள்
விடுமுறை முடித்து மீண்டும் கடமைக்கு வருவதற்கு அவர்களுடைய சிசு தடையாக
அமைகின்றது.

இவ்வாறு பட்டதாரிகளாக உருவாகின்ற பெண்களுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுக்கு
சமமாக ஆண்களும் உருவாக வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. இந்த
தேவைப்பாட்டை தடுத்து நிறுத்துவதற்குரிய முக்கிய காரணி ஒரு பிள்ளை சாதாரண தரம் கற்கின்றபொழுது தனியார் கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடாத்துகின்ற போர்வையில் சாதாரண தரம் கற்றபின்பு 2, 21/2 வருடங்கள் உயர்கல்வி கற்கவேண்டும் அதன்பின் கிட்டத்தட்ட 1வருடம் காத்திருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகி 3 அல்லது 5 வருடங்கள் பல்கலைகழகங்களில் கழிக்கவேண்டும் ஆகமொத்தத்தில் 6,7
வருடங்கள் செலவு செய்து பட்டப்படிப்பின் பின் ஒரு தொழிலை பெறுவதாக இருந்தால் மீண்டும் 2,3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை தவறாக வழிகாட்டுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் சாதகமாக
அமைவதுடன் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட முற்படுவார்கள். அதிகமான
பிள்ளைகள் சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தர
கல்வியினை தொடராமல் விட்டுவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் 06 மாத குறுகிய
காலப்பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு வளைகுடா நாடுகளுக்கு
வேலைவாய்ப்பு பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் என்ன? அவர்கள் ஒப்பிட்டு
பார்க்கின்றனர் 8,9 வருடங்கள் முடிந்த பிற்பாடு ரூபா 10,000.00; சம்பளத்திற்கு
வேலை செய்வதா அல்லது 06 மாத குறுகிய கால பயிற்சிநெறி ஏதேனுமொன்றை
முடித்துக்கொண்டு ரூபா 100,000.00 சம்பளம் பெறக்கூடிய அந்த வேலைவாய்ப்பினை
பெறுவதா என்ற வினாவிற்கு விடைகானும் முகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆண்கள்
பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் உழைத்து வாழ வேண்டிய தேவைப்பாடும்
கட்டாயமும் இம் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு
குடும்பத்தில் 2,3 பெண்பிள்ளைகள் இருப்பின் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளை
மீது பாரிய சுமைகள் சுமத்தப்படுகின்றன ஏனெனில் தனது பெண்சகோதரிகளுக்குரிய
கடமைகளை மேற்கொள்ளவேண்டும் வீடுகட்ட வேண்டும் என்ற கடமைகள் வரும்போது அவன்
தனது கல்வியினை இடைநடுவே நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக தனது கல்வியினை தியாகம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்படும் அந்த நிலைமையும், கல்வியிலே ஆண்பிள்ளைகள் இல்லாமல் போகின்றதோர் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை
முழுவதும் உள்ள ஆண்பிள்ளைகள் தமது கல்வியினை இடைநடுவே நிறுத்தி விட்டு
வெளிநாடுகளிலும், இங்குள்ள சிறிய சிறிய கூலிவேலைகள் அல்லது அவர்களுடைய கல்வி
தகைமைக்குப்பதிலாக அவர்கள் பொருளாதாரத்தினை ஈட்டுகின்ற வேறுசெயற்பாடுகளில்
ஈடுபடுவதனூடாக எதிர்காலத்தில் கல்வியை இழந்த சமூகமாக இலங்கை மாறக்கூடிய
துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது, ஆகவே இந்த செயற்பாடானது நிச்சயமாக
வடக்கிலே வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர் வேலைவாய்ப்புக்களும்
வடமாகாணத்திற்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கின்றது ஏன் கிழக்கு மாகாணத்திற்கு
மாத்திரம் இவ்வாறானதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தினை
உங்களிடம் கேட்கின்றேன். ஆகவே உடனடியாக முதலமைச்சரும், இங்குள்ள அமைச்சரவை
வாரியமும் இதற்குரிய தீர்வொன்றை கண்டறிந்து, அவர்களின் கஷ்ட நிலைமையை
கருத்திற்கொண்டு அவர்கள் பெப்ரவரி மாதம் 13ம் திகதிக்குமுன் பொறுப்புக்களை
பாரமெடுக்குமுன் அவர்களை உடனடியாக மாகாணத்திற்குள் உள்வாங்கி அந்தந்த
மாவட்டங்களில் நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு
மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது பிரேரணையை
முன்வைத்து உரையாற்றினார்.





Read More
avathani Media Network

தேசியப்பட்டியல்

(மர்சூக் அஹமட் லெப்பை)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பட்டியலில் இரண்டில் ஒன்றுக்கு ஒரு வாறு நீண்ட இழுபறியின் பின் ஒரு முடிவு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அவ்வெற்றிடத்திற்கு முன்னாள் பிரதி அமைச்சர் சின்ன தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்த பிரதி நிதித்துவத்தை இந்த தேசிய பட்டியல் பிரதி நிதி மூலம் மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளது. 
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியது. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து கேட்பதென்று கட்சி முடிவு எடுத்திருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து கேட்பதால் ஐந்து பேருக்கு மாத்திரம் வேட்பாளர் தரலாம் என ஐக்கிய தேசிய கட்சி கூறி இருந்தது. இதனால் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது. அம்பாறையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களுக்கும் ஒவ்வொரு வேட்பாளர்கள் கொடுப்பது என்றாலும் 10க்கும் அதிகமான வேட்பாளர் வெற்றிடங்கள் தேவை. கிடைத்திருப்பது ஐந்து பேருக்கு மாத்திரம். எந்த ஊருக்கு ஐந்து பேரையும் வழங்குவது என்பது சிக்கல். பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார் நான்கு பேருக்கு மாத்திரம் தான் வேட்பாளர் தருவேன் என்று. ஐந்து நாலாகியதால் இன்னும் பிரச்சினை அதிகரித்தது. ரவூப் ஹக்கீம் மீண்டும் அதிரடியாக அறிவித்தார் மூன்று பேருக்கு மாத்திரம் தான் வேட்பாளர் தர முடியும் என்று. இதனால் இன்னும் பிரச்சனை கூடியது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பைசல் காசிமுக்கும், ஹரீசுக்கும் வேட்பாளருக்குரிய சந்தர்ப்பம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மிகுதியாக உள்ள ஒருவரை சம்மாந்துறையில் இருந்து தெரிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. 

சம்மாந்துறையில் யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல் தோன்றியது. முஸ்தபா லோயருக்கா?,  மாகாண அமைச்சர் மன்சூருக்கா?, சவூதி தூதுவராலய மாஹிருக்கா? வழங்குவது என்பதில் சிக்கல். இறுதியில் மன்சூருக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்பாளர்கள் தெரிவு செய்வதில் சிக்கல்கள் உருவாகின. அலிசாஹிர் மௌலானா பசீர் சேகுதாவூதுக்கு வேட்பாளர் நியமனம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் சிக்கல்கள் தோன்றின. காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினரை இணைத்துக் கொள்வதில் சிக்கல்கள் தோன்றின. பின்னர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவு செய்வதில் எந்த சிக்கல்களும் தோன்றவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன தௌபீக் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கட்சி பிரமுகர்கள் சின்ன தௌபீக்கை பார்த்து தாருல்ஸலாத்தில் வைத்து 'நீங்கள் மாத்திரம் தான் எந்த சிக்கலும் இல்லாமல் வேட்பாளர் நியமனம் கிடைக்கப்பெற்றிருக்கிறீர்கள். நாங்களோ எவ்வளவு இழுபறிபடுகின்றோம். நீங்கள் வெற்றி பெற எங்களது நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.' என்று வாழ்த்தி வழி அனுப்பினார்கள். இந்நேரத்தில் தாருஸ்ஸலாத்தில் கூடி இருந்த எல்லோரும் சின்ன தௌபீக்கின் வெற்றி நிச்சயம் என பேசிக்கொண்டார்கள். 

ஆனால் தேர்தல் களம் சூடுபிடிக்க சூடுபிடிக்க சின்னதௌபீக்கின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியானது. தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன தௌபீக் தோற்றுவிடுவார் என்ற கதை பரவலாக பேசப்பட்டது. சின்ன தௌபீக்கின் தோல்வி ஓரளவு நிச்சயமானதும் சின்ன தௌபீக்கம் றவூப் ஹக்கீமும் அதிரடியான சில தேர்தல் வியூகங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னனியைச் சேர்ந்த டொக்டர் சாஹிருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். டொக்டர் சாஹிருக்கு கிடைக்கின்ற விருப்பு வாக்குகளில் சின்ன தௌபீக்குக்கும் சேர்த்து விருப்பு வாக்கை வழங்க வேண்டும். அதற்கு பகரமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினருக்கு ஒரு தேசிய பட்டியல் தருவோம் என ஒப்பந்தத்தை செய்து இருந்தால் சின்ன தௌபீக் நிச்சயம் வென்று இருப்பார். ஏனெனில் சின்ன தௌபீக்குக்கு 26000 விருப்பு வாக்குகளும் டொக்டர் சாஹிருக்கு 16000 விருப்பு வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தன. சின்ன தௌபீக்கு இன்னும் 5000 வாக்குகள் கிடைத்திருந்தால் பாராளுமன்றம் சென்றிருப்பார். முஸ்லிம் காங்கிரசுக்கு இன்னும் ஒரு ஆசனமும் அதிகரித்திருக்கும். இப்போது சின்ன தௌபீக்கு வழங்கியிருக்கின்ற தேசிய பட்டியலும் மிஞ்சியிருக்கும். அந்த தேசிய பட்டியலை ஒப்பந்தப்படி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினருக்கு வழங்கி இருக்கலாம். 

இவ்வாறு சரியான அரசியல் வியூகம் இல்லாத காரணத்தினால்  சின்ன தௌபீக் அநியாயமாக தோற்க வேண்டிய நிலை உருவானது. இதனால் முஸ்லிம் காங்கிரசுக்குரிய ஒரு பிரதி நிதித்துவம் குறைந்ததுடன் சின்ன தௌபீக்குக்கு ஒரு தேசிய பட்டியலை வழங்கியதால் மற்றவர்களுக்கு தேசிய பட்டியல் கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் இழக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் ஒரு முறை சின்ன தௌபீக்குக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. பல முறை அவர் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு செல்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளது. நிச்சயமாக வென்று இருக்க வேண்டிய சின்ன தௌபீக் சிறிய தவறினால் தோல்வியடைந்ததால் கட்சியினுடைய தலைவர் அவருக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டிருக்கின்றார். 

எனெனில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இவரது தோல்வியால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. இந்தவொரு நியாயத்துக்காக றவூப் ஹக்கீமினால் தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்தாலும் சரியான தேர்தல் வியூகம் இல்லாமல் அநியாயமாக தோற்றுவிட்டுவந்து சின்ன தௌபீக் தேசிய பட்டியல் ஒன்றை அநியாயமாக்கக் கூடாது. அந்த தேசிய பட்டியலானது காத்தான்குடி போன்ற முக்கியமான ஊர்களுக்கு சொந்தமானது. அவர்களும் தேசிய பட்டியலை பெற்று தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். தேசியப்பட்டியலானது சின்ன தௌபீக்குக்கு மாத்திரம் உரித்துடையானது அல்ல. தற்போது தேசிய பட்டியலை பெற்றிருக்கும் சின்ன தௌபீக் ஆனவர் எதிர்காலத்தில் தனது தவறுகளை திருத்தி தனது தோல்விக்கான காரணத்தை சரியாக அடையாளம் கண்டு அதனை சரிக்கட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்வதற்காக இப்போதே முழு மூச்சுடன் இறங்க வேண்டும். அதனை விட்டு மீண்டும் தோல்வியை தழுவி மீண்டும் காத்தான்குடி போன்ற முக்கியமான ஊர்களுக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியலை சின்ன தௌபீக் மீண்டும் சாப்பிடக் கூடாது. 

இன்று தலைவர் றவூப் ஹக்கீமின் திருகோணமலை மாவட்டத்திற்கு தேசிய பட்டியலில் ஒன்றை வழங்கும் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ்கார்களில் 60மூமானோர் ஆதரிக்கின்றனர். அதற்கு இதுவரை காலமும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்து வந்த பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்ததுதான் காரணம். திருகோணமலைக்கு றவூப் ஹக்கீம் தேசிய பட்டியலை வழங்கியது சரி. ஆனால் சின்ன தௌபீக்குக்கு வழங்கியது சரியா என்றொரு கேள்வியும் இங்கிருக்கின்றது. ஏனெனில் சின்ன தௌபீக் பலமுறை பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தவர். முன்பு ஒரு முறை தேசியப் பட்டியல் பிரதிநியாகவும் இருந்தவர். பிரதி அமைச்சராகவும் இருந்தவர். இவ்வளவு அதிகாரத்தில் இருந்தும் இவரால் தேர்தலில் வெல்ல முடியவில்லை என்பதால் திருகோணமலை மாவட்டத்தில் மற்றுமொருவருக்கு இந்த தேசியப்பட்டியலை வழங்கியிருக்க வேண்டும் என்பது காங்கிரஸ்கார்களின் கருத்தாகும். சின்ன தௌபீக் ஒரு பெரிய சதியால் தோற்கடிக்கப்ட்டிருந்தாலும் பரவாயில்லை. எளிதாக வெல்வதற்கு இவருக்கு சந்தர்ப்பம் இருந்தது. 

எமது சமூகத்திலே முஸ்லிம் தலைவர்களுக்கு பெரும் பஞ்சம் இருக்கின்றது. றவூப் ஹக்கீம் ஒரு தேசிய தலைவராக மிளிர்வதற்கு சகல அம்சங்களும் பொருந்தியவர். அவருக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்கள் யார்? என்ற கேள்வியெழுகின்றது. தமிழ் தலைவர்களில் சம்பந்தன் ஐயா இருக்கின்றார். சுமந்திரன் இருக்கின்றார். முதலமைச்சர் விக்னேஷ்வரன் இருக்கின்றார். சுரேஷ் பிரேம சந்திரன் இருக்கின்றார். மாவை சேனாதிராசா இருக்கின்றார். சித்தாத்தன் இருக்கின்றார். போராளி சிவாஜிலிங்கம் இருக்கின்றார். இவ்வாறு தமிழ் சமூகத்திற்கு ஒருவர் இல்லாட்டி மற்றொருவர் குரல் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் ஒருவர் இல்லாவிட்டால் குரல் கொடுப்பதற்கு இன்னொருவர் இல்லை. ஓரளவு றவூப் ஹக்கீம் மாத்திரம் தான் இருக்கின்றார். 

முஸ்லிம் காங்கிரஸ்சின் அடுத்த மட்ட தலைவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு றவூப் ஹக்கிமிடமே இருக்கின்றது. ஏனெனில் றவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசில்  இணையும் போது ஒரு தலைவராக இருக்கவில்லை. மறைந்த மாமனிதர் அஷ்ரப்பினால் தனக்கு பின் ஒரு தலைவராவதற்கு றவூப் ஹக்கீம் திட்டமிடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார். அஷ்ரப் றவூப் ஹக்கீமுக்கு செயலாளர் பொறுப்பை வழங்கினார். பின்னர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினார். பின்னர் குழுக்களின் பிரதித் தலைவராக்கினார். பின்னர் பிரதிசபாநாயகராக்கினார். இவ்வாறுதான் றவூப் ஹக்கீம் மறைந்த மாமனிதர் அஷ்ரப்பினால் புடம் போட்டபப்ட்டார். இவ்வாறு அஷ்ரப்பினால் தனக்கு பின் இந்த கட்சிக்கும் சமூகத்திற்கும் ஒரு தலைவர் வேண்டுமென தீர்க்க தரிசனத்தோடு றவூப் ஹக்கீம் வளர்க்கப்பட்டார். 

இதே போல தனக்கு அடுத்தாக இந்த கட்சிக்கும் சமூகத்திற்கும் உரிய தலைவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு றவூப் ஹக்கிமிடமே இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் சம்பந்தனாக றவூப் ஹக்கீமை நாங்கள் கொள்ளலாம். முஸ்லிம் சமூகத்தின் சுமந்திரன் யார்? முஸ்லிம் சமூகத்தின் விக்கேஸ்வரன் யார்? முஸ்லிம் சமூகத்தின் சுரேஷ் பிரம்மசந்திரன் யார்? 
தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுக்க பல தலைவர்கள் இருக்கின்றார்கள். அது தவிர வெளிநாடுகளிலும் டயஸ்போறா போன்ற பல அமைப்புக்கள் தமிழர்களுக்காக பாடுபட இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உள்நாட்டிலே குரல் கொடுக்கக்கூடிய தலைவர்கள்; யார்? வெளிநாட்டில் செயற்படக்கூடிய அமைப்புக்கள் எது?. இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வந்த பிரச்சினை போல் முஸ்லிம்களுக்கும் வந்திருந்தால் இன்று இந்த நாட்டிலே முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.

எனவே தேசிய பட்டியல் வழங்கும் போது றவூப் ஹக்கீம் இந்த விடயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். இது முக்கியமான கால கட்டம். புதிய அரசியல் யாப்பு ஒன்று இந்த நாட்டிலே முதன்முறையாக மக்களால் தயாரிக்கப்படபோகின்றது. இந்த சூழலில் றவூப் ஹக்கீம் சுகவீனம் காரணமாகவோ அல்லது வெளிநாட்டில் இருப்பதன் காரணமாகவோ பாராளுமன்றத்திற்கு சமூகம் கொடுக்க முடியாவிட்டால் அன்று அந்த இடத்தை நிரப்பக்கூடிய முஸ்லிம் காங்கிரச் பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரும் இல்லை. இவ்வாறான தலைவர்களை றவூப் ஹக்கீம் தேசிய பட்டியலின் ஊடாக வளர்த்தெடுக்க வேண்டும். ஏனெனில் றவூப் ஹக்கீமும் அவ்வாறு தேசிய பட்டியல் ஊடாக வளர்க்கப்பட்டவர்தான். உதாரணமாக எஞ்சினியர் அப்துர்ரஹ்மான், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் போன்றவர்களை முஸ்லிம் சமூகத்தின் சுமந்திரனாக, முஸ்லிம் சமூகத்தின் விக்னேஷ்வரனாக வளர்த்தெடுக்க முடியும். இவர்கள் தேர்தலின்போது தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்ல முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்களுடைய சேவை சமூகத்திற்கு தேவை. தேசியப் பட்டியல் உருவாக்கபட்டதன் நோக்கமும் இவ்வாறானவர்களுடைய சேவையை நாட்டிற்கு பெற்றுக்கொடுப்பதே. றவூப் ஹக்கீம் தேசிய பட்டியல் வழங்கும் போது தனியே கட்சியின் நலனை மாத்திரம் பாராமல் சமூக நலனையும் கருத்திற் கொண்டு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்.

தேசிய பட்டியல் உருவாக்கப்பட்டதன் நோக்கம் திசை மாறி தலைவருக்கு நெருக்கமானர்களுக்கும் தலைவருக்கு வேண்டியவருக்கும் வழங்கும் சூழல் உருவாகியுள்ளது.  இன்று முஸ்லிம் காங்கிரசிலே யார் யார் தனக்கு தேசிய பட்டியல் வேண்டுமென கேட்பது என்பது ஒரு விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது. உதாரணமாக களுத்துறையை சேர்ந்த அஸ்லம் என்பருக்கு றவூப் ஹக்கீம் ஒரு தேசியபட்டியலை சென்ற முறை வழங்கியிருந்தார். இரண்டு வருடம் மூன்று வருடம் இல்லாமல் முழுமையாக ஆறு வருடமும் வழங்கியிருந்தார். இம்முறை தேர்தலிலே அஸ்லம் தோற்றுவிட்டார். தோற்ற கையோடு அடுத்த நாளே 'இம்முறையும் மீண்டும் தனக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டும்' என்று றவூப் ஹக்கீமின் வீட்டில் சம்மானங்கொட்டி உட்காந்திருந்தார். இவர் ஒரு வெட்கம் உள்ளவர் என்றால் என்ன செய்திருப்பார் 'றவூப் ஹக்கீம் என்னை நம்பி முழுமையாக 6 வருடம் தேசிய பட்டியலை தந்திருந்தாரே. நான் நன்றாக வேலை செய்திருந்தால் பாராளுமன்ற தேர்தலிலே வெற்றிபெற்றிருப்பேனே. அநியாயமாக 6 வருடமும் தேசியப் பட்டியலை தின்று விட்டேனே. என்னை நம்பி தந்த றவூப் ஹக்கீமின் முகத்தில் எப்படி விழிப்பேன்' என்று பச்சாதாபப்பட்டு ஒரு வருடத்திற்கு றவூப் ஹக்கீமின் முகத்தில் விழிக்காமல் வெட்கபட்டு அஸ்லம் முக்காடு போட்டு கொண்டு திரிந்திருப்பார். ஆனால் அவ்வாறு இல்லாமல் மீண்டும் தேசியப் பட்டியலை கோரும் 'தில்' எவ்வாறு அஸ்லமுக்கு வந்தது?. இந்த 'தில்' அஸ்லமுக்கு வர காரணம் தேசியப் பட்டியலின் தந்தை பசீர் சேகுதாவூத் இந்த கட்சியில் இருப்பது தான் காரணம். தோற்று, தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் தேசிய பட்டியலை பெறலாம் என்ற வழிகாட்டி பசீர் சேகுதாவூத் இருக்கும் வரை அஸ்லம் போன்றவர்கள் உருவாகத்தான் செய்வார்கள். நல்ல விடயங்களில் மறைந்த மாமனிதர் அஷ்ரபின் முன்மாதிரியை பின்பற்றக்  கூடியவர்கள் இக்கட்சியிலே பலர் இருக்கிறார்கள். ஆனால் தேசியப் பட்டியல் விடயத்தில் பசீர் சேகுதாவூதைப் பின்பற்றக் கூடியவர்கள் இப்போது உருவாகி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரசுக்குள் பல பசீர் சேகுதாவூத்கள் உருவாகுவது இந்த கட்சிக்கு நல்லதா ?. ஒரு பசீர் சேகுதாவூத் இந்த கட்சிக்கு பேதாதா?.

றவூப் ஹக்கீமிடம் இருக்கும் சில நல்ல பண்புகளை இங்கு நாம் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். றவூப் ஹக்கீம் எப்போதும்  இந்த தேசியப் பட்டியலை பணத்திற்கு விற்பதில்லை. அதேபோல சீடிக்களின்(ஊனு) அச்சுறுத்தல்களுக்கும் அடி பணிந்தும் தேசிப்பட்டியலை வழங்குவதில்லை. தினம் தினம் சீடிக்களுக்கு பயந்து சாவது கோழைத்தனம். என்றோ ஒரு நாள் அந்த சீடியை எதிர்கொள்வதே வீரம் என்பதை தற்போது றவூப் ஹக்கீம் நன்றாக புரிந்துள்ளார்.

மேலும் தலைமைத்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர் றவூப் ஹக்கீம்தான். முஸ்லிம் காங்கிரசில் உள்ள மும்மணிகளில் இருவருமான தொடர்ந்து தேசியப் பட்டியலை அலங்கரிக்கும் அவ்விருவருக்கும் தேசியப்பட்டியல் இம்முறை வழங்காவிட்டால் அவர்கள் இருவரும் பேரியல் அஷ்ரபுடனும் சேகு இஸ்ஸதீனுடனும் அதாவுள்ளாவுடனும் ஹிஸ்புல்லாவுடனும் சேர்ந்து புதிய கட்சி உருவாக்க இருப்பதாக செய்தி அடிபடுகின்றது. இவர்கள் என்ன கட்சி தொடங்கினாலும் இவர்களால் எல்லாம் சமூகத்திற்கு தலைவர்களாக முடியாது. ஏனெனில் இவர்களால் தலைவர்களாக ஆக முடியுமாக இருந்தால் இதுவரைக்கும் தலைவர்களாகி இருப்பார்கள். 

எனவே மறைந்த மாமனிதர் அஷ்ரப் எவ்வாறு றவூப் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் உட்பட பல பதவிகளை வழங்கி தனக்கு அடுத்த தலைவராக வளர்த்தாரோ அதே போல றவூப் ஹக்கீமும் தேசியப்பட்டியலை பொருத்தமானவர்களுக்கு வழங்கி அதன் மூலம் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் அலங்கரிக்கின்ற அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

(மர்சூக் அஹமட் லெப்பை)
Mob : 0777801382

Read More