Featured Home (TOP)

Recent Comments

Thursday, January 7, 2016

avathani Media Network

மழையின் நேற்றைய உரை

(எம்.எல்.எம்.அன்ஸார் )

தேர்தல் பிரச்சார இறுதி நாள் போல
நேற்றைய தினத்தை
வாய்ப்பாகி இருந்தது வானம்!
*
கூதலாலும் குளிராலும்
சோடிக்கப்பட்டிருந்த மேடையில்
எதிர்க் கட்சியை சேர்ந்த
பீரங்கிப் பேச்சாளராக பிரசன்னமாகி இருந்த
மழை -
ஆவேசமாக உரையாற்றிச் சென்றது!
*
நேற்றுவரை ஆளுங்கட்சி அமைச்சராக இருந்த
சூரியனால் -
மழையின் காரசாரமான உரைக்கு மறுப்புரையாற்ற
எந்த சந்தர்ப்பமுமே கிடைக்கவில்லை!
*
சூரியனின் சண்டியனாக ஊருக்குள்
கெப்பர் தனம் காட்டித் திரிந்த
வெயிலின்   திருகுதாளங்களை
மழை  அம்பலப்படுத்திய போது
திக்கு முக்காடி
வாயடைத்துப்போய் நின்றது வெயில்!
மரங்கள் கரகோஷம் செய்து
மழையை உற்சாகப் படுத்தின!
*
மழை வீண் பழி சுமத்தி
வரம்பு மீறிப் பேசுவதாக
கோபமடைந்த வீட்டு வாசல்கள்
வானத்தை சந்தித்து முறையிட முயன்ற போதிலும்
மேகங்களின் சனக்கூட்டம் நிறைந்திருந்ததால்
அது பலிக்கவில்லை!
*
மழை  வரும்போது
வானம் தட்டிக் கொடுத்தனுப்பிய தைரியத்தில்
எதையும் கணக்கிலெடுக்காமல்
தன் உரையை அட்டகாசமாக நிகழ்த்தியது!
*
ஆற்றங்கரைப் பக்கத்தில் ஒலித்த
மழையின் உரை
வெள்ளத்தை தூண்டிவிட்டு
வேடிக்கை பார்ப்பதாக இருந்ததாகவும்
எழுந்தன கண்டனங்கள்!
*
மழையின் உரை முழுவதையும்
பூமி பதிவுசெய்து வைத்திருக்கிறது.
மழையின் ஆவேச உரைக்கு எதிராக
இன்றைக்கு
வெயிலை அனுப்பி சூரியன்
என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ?
07-01-2016







 




  

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :