Featured Home (TOP)

Recent Comments

Monday, January 4, 2016

avathani Media Network

2015ம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வாழ்த்துச்செய்தி

(ஜுனைட்.எம்.பஹ்த்)
கடந்த 2015ம் ஆண்டு நடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ
மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் தமது துறையில் சிறந்த முறையில் மேட்படிப்பினை மேற்கொண்டு அதில் நிபுணத்துவம்
அடைந்து இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், இந்நாட்டிகும் சிறந்த சேவைகளை மேற்கொண்டு அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்
என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது
வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் இவ் உயர்தர பரீட்சையில் காத்தான்குடி
காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் இருந்து சிறந்த சித்தியுடன் வைத்திய துறை,
பொறியியல் துறை, தொழிநுட்பத் துறை, முகாமைத்துவ வர்த்தக துறை மற்றும் கலைத்துறை, ஆகிய துறைகளுக்கு காத்தான்குடியில் இருந்து பல மாணவர்கள் சிறந்த
பெறுபேற்றை பெற்று பல்கலை கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பது இப்பிரதேசத்திட்கு ஓர் மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமை சேர்க்க கூடிய
விடயமாகும். இவ்வாறு சித்தியடைந்து பல்கலை கழகத்திற்கு தெரிவாகிய அனைத்து மாணவ
மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும்
மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போன்று ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று
பல்கலை கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அதே நேரம் பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு
விடாமல், முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் எனவே அவர்கள் மீண்டுமொரு முறை
முயற்சி செய்து க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை
வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்கு செல்ல வேண்டுமென வாழ்த்துகிறேன்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ
மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போல் கிழக்கு மாகாணத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த அனைத்து
மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும்
மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலை
கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் மிக்க மாகிழ்ச்சி அடைகின்றேன்.
Read More
avathani Media Network

போலியான தகவல்களை உண்மையானவையாக சித்தரிக்க முயலும் இனவாதிகளின் நோக்கம் நிறைவேற அனுமதிக்கக்கூடாது.


(கல்முனையான்)
கல்முனை நகர அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டு வயல் நிலங்கள் சுவீகரிக்கப்படவிருப்பது யாவரும் அறிந்த விடையமே. அரசியல் இலாபம் தேடமுயலும் சில குறுகிய நோக்கம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் அப்பட்டமான போலியான தகவல்களை ஊடகங்களினூடாகவும், வெளிப்பிரதேசங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியும் கல்முனையில் தமிழ், முஸ்லிம் உறவுக்கு சவால் விடுத்து வருகின்றனர். இனவாதிகளின் இத்தகைய வங்குரோத்துசெயல்களை கல்முனையான்ஸ் குழுமம் வன்மையாக கண்டிக்கிறது. 
மேலும் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் எம்.பி.க்கள், ஹென்றி மஹேந்திரன் போன்ற தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களின் கூற்றின்பிரகாரம் கல்முனையில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வசிப்பதாகவும், வயல்காணிகளும் அவர்களுக்கே அதிகமாக இருப்பதாகவும் கூறியிருப்பதானது குருடர்கள் சந்திரனை சூரியன் என்று கூறுவது போலானது. 

கல்முனையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 70வீதமாகவும்,தமிழர்கள் 30வீதமாகவும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் அதே போன்று கல்முனையிலுள்ள மொத்த வயல்காணிகளில் 80 வீதத்திற்கு மேற்பட்டவைகள் முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் என்பதும் ஒரு கல்முனைத் தமிழ்த்தாயின் வயிற்றிலே பிறக்கவிருக்கின்ற குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் இந்த இனவாதிகளுக்கு தெரியாமலிருப்பது ஒரு கேலிக்கூத்தான விடையமே ஆகும்.
கல்முனைநகரத்தில் அபிவிருத்தித் தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய அரச காணிகள்மிகவும் குறைவாகக்காணப்படுகின்றது. இதன்காரணமாகவே மேற்குப்புறத்தில் உள்ள சதுப்பு நிலங்களை சுவீகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கல்முனைப்பிரதேசத்தின் முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களின் சனத்தொகை அடர்த்தி அதிகமாகும். சூழல் சுகாதார நியமங்களையும் விஞ்சிய அளவில் இவ்வடர்த்தி காணப்படுவதாலும், பாதைகள் நெரிசலடைந்தும், கழிவு நீர் முகாமைத்துவப் பொறித்தொகுதி இல்லாததாலும் எதிர்கால சனத்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப தற்போது காணப்படும் குடியிருப்புப்பிரதேசத்தில்அடுக்கு மாடி வீட்டுத்திட்டங்களை அமைப்பது கடினமாகும்.  எனவே வருங்காலத்தில் ஏற்படும் நிலப்பற்றாக்குறையைக் கருதியும், அதிகரித்த சனத்தொகைக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் புதிய குடியிருப்புப் பிரதேசங்களை அடையாளம் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 
மேற்குறித்த காரணிகளின் அடிப்படையில் சுனாமிக்குப் பிறகு ஆய்வைமேற்கொண்ட ஜெய்க்கா நிறுவனம் கல்முனையின் நீண்டு நிலைக்கக் கூடிய அபிவிருத்திக்கு மேற்குப்புறத்தில் காணிகளை நிரப்பவேண்டிய கட்டயாயத்தினை தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொறியியல் துறையில் விற்பன்னர்களான ஜப்பானியர்கள் சதுப்பு நிலங்களை நிரப்பும்போது தேங்கப்போகும் வெள்ளப்பெருக்கை ஈடுசெய்யக்கூடியவகையில்என்னென்ன வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்று ஏலவே அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் .எனவே புதிய நகரத்திட்டத்தினால் குடியிருப்புக்கள் தாழும் என்னும் கூற்று முற்றிலும் அடிப்படையற்றதாகும். 
மேற்படி திட்டத்தின் விபரங்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில், தங்களுக்கு ஏதும் சந்தேகங்கள், ஐயப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை சுமூகமான முறையில் பேசித்தீர்ப்பதற்குரிய ஆரம்ப கட்ட கலந்தாலோசனைகள் மக்கள் பிரதிநிதிகளோடு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஒருதலைப்பட்சமாக தமிழர்களின் பூர்விகத்தை அழிக்கும்செயல் என சில விஷமச் சக்திகள் கூக்குரல் இடுவது இனப்பிரச்சினை இருந்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய எத்தனித்த காலத்தில் கல்முனை நகரத்திலிருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்தஆயுதக்கலாச்சாரமும், பயங்கரவாதப் போக்கும் இன்னும் எஞ்சியுள்ளதா என எண்ணத்தோன்றுகிறது.
கல்முனையின் எல்லையாக வடக்கில் தாழவட்டான் சந்தி வீதியிலிருந்து தெற்கில் சாஹிறா கல்லூரி வீதி வரைக்கும் கல்முனை வட்டாரப்பிரிவு ஏற்படுத்தப்பட்ட 1947 ம் ஆண்டு முதல் இன்று வரை நடைமுறையிலுள்ளது. இதுவே சட்டபூர்வமான எல்லை. இதனை யாரும் இன்று வரை மாற்றவும் இல்லை, மாற்ற அனுமதிக்கப் போவதுமில்லை என்பதனை திட்டவட்டமாகக் கூறிக்கொள்வதுடன் இனிமேல் இத்தகைய சமூகவிரோத எண்ணங்கொண்ட சில்லறை அரசியல்வாதிகள் கல்முனை தமிழ் முஸ்லிம் உறவிற்குள் மூக்கை நுழைக்க வராது தங்களது எல்லைகளுக்குள்ளேயே முடங்கி விடவேண்டும் என எச்சரிக்கையும் விடுக்க விரும்புகிறோம்.
தமிழ் மக்களின் விருப்பம் கோராது கல்முனை நகர அபிவிருத்தியை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுக்கவிருக்கிறார்கள் என்று இனவாத அரசியல்வாதிகள்  கூறியிருப்பதானது அடிப்படைக்கு புறம்பானதொன்றாகும். ஏனெனில் அபிவிருத்தி என்பது அரசாங்கம் தீர்மானிக்கம் செயலாகும். இதற்கு மக்களின் விருப்பு வெறுப்பை அறிந்தபின் அதனைத் தீர்மானிக்கும் ஒரு மரபு முறையோ அல்லது சட்ட வழிமுறையோ இல்லை. அவ்வாறு அபிவிருத்தி மேற்கொண்ட வரலாறுகளுமில்லை. மக்கள் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டுமானால் காணிசுவீகரிப்பு, தொழில் பாதிப்பு, சூழல் பாதிப்பு போன்ற தவிர்க்கமுடியாத விளைவுகள் ஏற்படலாம். ஒரு அபிவிருத்தியினை மேற்கொள்ள முனைகின்ற போது அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதக விளைவுகளை ஆராய்ந்து சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து இருக்குமாயின் மத்திய சூழல் அதிகாரசபையினால் மக்கள் கருத்துக்கோரலுக்கு விடப்படுவதே மரபுரீதியாகவும், சட்டரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகும். 
இதைவிடவும் கேலிக்கூத்தான அவரது கூற்று என்னவென்றால் இவ் அபிவிருத்தியினால் தமிழ் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கலாமாம், தேவையான வடிகான்களையமைத்து ஒரு துளித்தண்ணிகூட தேங்காமல்; 1000 ற்கும் மேற்பட்ட ஏக்கர வயல்காணிகள் நிரப்பப்பட்டு குடியேற்றங்களை ஏற்படுத்திய சுனாமியின் பின்னரான அண்மைய வரலாற்று உண்மை; தமிழ் பிரதேசங்களிலேயே உள்ளது. 
மேலும் இவர் கூறுகையில் இவ் அபிவிருத்தியின் மூலம் மு.கா.தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனையை முஸ்லிம்களின் ஊர் என பறைசாற்ற முயல்கிறார். இதில் என்ன சந்தேகம்? தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் யாழ்ப்பாணம், கிழிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு போன்றவைகள் தமிழர்களின் ஊர் என்று கூறப்பட முடியுமாக இருந்தால் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் கல்முனை முஸ்லிம்களின் ஊர் என்று கூறப்படுவதில் என்ன தவறு? அபிவிருத்தி நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.
தமிழ் அரசியல் தலைமைகள் அவர்களது கட்சி உறுப்பினர்களின் போலியான சமூக விரோத போக்கினை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதானது குறிப்பாக இனவாதத்தைத் தூண்டும் வகையிலான வெறுப்பேற்றும் பேச்சுக்களை சில சில்லறை அரசியல்வாதிகள் முன்வைப்பதை தடுக்க முன்வர வேண்டும்.இவ்வாறான இனவாதப்பேச்சுக்கள் தொடர்ச்சியாக கீழ்மட்ட தமிழ் அரசியல்வாதிகளால் பேசப்பட்டு வருகின்றமையானது உன்னிப்பாக உற்று நோக்க வேண்டியவிடயமாவே உள்ளது.
மேலும், இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்து போலி ஆவணமாக மாற்றும் முஸ்லிம் விரோத கைங்கரியங்களில் ஈடுபடுகின்ற போது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் சரியான தரவுகளைக்கொண்ட அறிக்கைகளை ஊடகங்களில் பிரசுரித்து தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று ஆதாரமற்றது என்று நிரூபிக்காமல் வேடிக்கை பார்ப்பதானது கவலையை தோற்றுவிக்கின்றது.
ஆகவே, கல்முனையான்ஸ் குழுமம் எமது கல்முனையின் நலன்களையும் தமிழ், முஸ்லிம் உறவையும் பாதுகாக்க தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும், சிவில் சமூகத்தாரினதும் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.

Read More
avathani Media Network

உனது அபாயா மேகத்திடம்

(எம்.எல்.எம்.அன்ஸார்)  

நீ வெளியே போகின்ற போது
அணிகின்ற அபாயாவை
இன்று பகல்
மேகம் உடுத்திருந்ததைக் கண்டேன்.
நீ காயப்போட்டிருந்ததை
அது களவெடுத்ததா?
கைமாற்றுக்குக் கொடுத்தாயா?
*
வீட்டில் நீ உடுக்கின்ற
சல்வார் ஆடைகளை அவ்வப்போது
பூ மரங்களுக்கு கொடுத்து உதவுவது எனக்குத் தெரியும்!
*
நிலவுக்கு உடுதுணிகள் வாங்கிக் கொடுப்பதற்கு
வானம் இரவில் வந்துவிட்டுப் போகிறது.
உனது இரவு ஆடைகளை  ஒருபோதும்
இரவல் கேட்பதில்லை நிலவு அதனால் !
*
சரி போகட்டும்,
கருப்பு அபாயாவை கடனுக்கு அணிந்தாலும்  
மேகம் ஒழுக்கமாகத்தான்  இருக்கிறது.
எப்படியும் இன்று சாயந்தரம் உன் வீட்டுக்கு
மச்சியைப்போல மழை வந்து சேர்ந்துவிடும்.
சமுசாவும் பறங்கி வாழைப்பழமும்
வாங்கி வை.
மழை சாப்பிட்டுவிட்டுப் போவதற்கு!
*
இந்த நாட்களில் சூரியன்
கெட்டுப் போய்த்தான் கிடக்கிறது.
சூரியனின் பார்வை படாமல்
மரங்களும் மலர்களும்
அதன் அதன் வீட்டுக்குள்
பயந்து ஒதுங்கிப்போய் நிற்கின்றன!
*
நீ சிரிப்பை இரை குத்தி
என்னை சிக்க வைத்தது போல
இன்னும் இரண்டொரு நாட்களுக்கு
மழையை மயக்கி  வைத்திருக்கச் சொல்லி
மேகங்களுக்கு புத்திகூறு.
*
மழை உன் வீட்டில் தங்கி இருந்தால்
வேலைக்கரியைப்போல  
மரங்கள் மலர்களின் ஆடைகளைக் கழுவி
புதிதாக்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
நீ உன் ஆடைகளை
காலையிலும் மாலையிலும் இரவல் கொடுத்துவிட்டு
புலம்பித் திரிய வேண்டியதில்லை.
*
இன்றைக்கு எப்படியும் சூரியன் அந்தி  
நாலரை மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிடும்.
நோன்புப் பெருநாளைக்கு உடுப்பு வாங்குவதற்கு 
புடவை கடைத்தெருக்களில்
பொம்பளைகள் அலை மோதுவது போல
ஊர் முழுக்க அபாயா போட்ட மேகங்கள்
உலாத்தித் திரிகின்றன!
*
இன்றைய மழை சும்மா வராது.
உனக்கு ஏதாவது
செப்பு தூக்கிக்கொண்டுதான் வரும்!







 





Read More
avathani Media Network

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் விஷேட சொற்பொழிவு...

(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், இம்  மாதத்துக்கான சொற்பொழிவு  
நாளை 5ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு ‘சகவாழ்வும்  பொறுப்புக்களும் கடமைகளும்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
இவ்விஷேட சொற்பொழிவை, அகுரணை இஸ்லாமிய்யா கல்லூரி பணிப்பாளரும், வடதெனிய கதீஜதுல் குப்ரா பெண்கள் அறபுக்கல்லூரி நிர்வாக செயலாளருமான சகோதரர் ஸாஜஹான் உடையார் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766529128
Read More
avathani Media Network

ஒரு வாரத்தில் 10,000 பாஸ்போட்கள் விநியோகம்

வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கு அமைய கட்டண அதிகரிப்பு செய்யப்படவிருந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னரான வாரத்தில் 10,000 புதிய பாஸ்போர்ட்களை பொ துமக்கள் பெற்றுள்ளனர். நாளாந்தம் 2500 பாஸ்போர்ட்க்கள் வழங்கப்படுகின்றன.முண்டியடித்துக்கொண்டு கட்டண அதிகரிப்பிலிருந்து தப்புவதற்காக மக்கள் பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பிரதம கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.
பட்ஜட் அறிவிப்பில் புதிய பாஸ்போர்ட் கட்டணம் பற்றி அறிவிக்கப்பட்டது. வழமையான சேவை மூலம் வழங்கப்படும் பாஸ்போர்ட் கட்டணம் 2500 ரூபாவிலிருந்து 3000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.
ஒருநாள் சேவை மூலம் வழங்கப்படும் பாஸ்போர்ட்டுக்கு 10,000 ரூபா புதிய கட்டணமாகும். இதன் பழைய கட்டணம் 7500 ரூபா. 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான சகல நாடுகளுக்குமான பாஸ்போர்ட் வழமையான சேவையில் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய கட்டணம் ரூபா 1500.
Read More
avathani Media Network

மீராவோடை அல் ஹிதாய கணித,விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று சாதனை

இன்று நாடளாவிய ரீதியில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு  அனுமதி பெற்றுள்ளனர். பல சவால்களுக்கு மத்தியில் இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப் பிரிவிலிருந்து சுமார் 11 மாணவர்கள் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு  அனுமதி பெற்றுள்ளமை பாடசாலை வரலாற்றில் ஒரு மைற்கல்லாகும். சாதனை என்றே கொள்ளப்படுகிறது. அத்துடன், கணித வர்த்தகப் பிரிவுகளிலும் மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். இவ்வேளையில், பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பெற்றார்களுக்கும், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் குறிப்பாக கணித, விஞ்ஞானப் பிரிவுகளின் வளர்ச்சியிலும் தொடர்ந்து பொருளாதார ரீதியில் உதவி வரும் கட்டார் வாழ் அல் ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர்களுக்கும், கல்குடா கல்வி கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கும் மற்றும் உள்ளூர் வெளியூர் தனவந்தர்களுக்கும் ,மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம். 

Read More
avathani Media Network

மட்டு- ஊடகவியலாளர்களுக்கு தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்குமாறு கல்குடா மீடியா போரம் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டையை கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வழங்கியுள்ளது.

குறித்த இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை முதற்கட்டமாக கல்குடா மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் நான்கு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டையை வைத்துள்ள ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

ஊடக நிறுவனங்களில் பிராந்திய ஊடகவியலாளர்களாக,செய்தியாளர்களாக  கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டையை பெற விரும்பினால் கல்குடா மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ் 0778327822 அதன் செயலாளர் ஊடகவியலாளர் பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான் 0776033330 ஆகியோருக்கு தொடர்பு கொள்ள முடியும்.



Read More
avathani Media Network

சமூக நலன் பேணும் அமைப்பின் 6வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்-85 பேர் இரத்தத்தை தானமாக வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும்  (Movement For Social Wellness)எனும்  சமூக நலன் பேணும் அமைப்பின் 6 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 03-01-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் எம்.ஏ. இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இம் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமில் சமூக நலன் பேணும் அமைப்பின் உப தலைவர் டாக்டர் அஹமட் சியாம் உட்பட ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள் , சமூக நலன் பேணும் அமைப்பின் உறுப்பினர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் மற்றும் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் நலின் ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
இங்கு சுமார் 85 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.
இம் முகாமில் சமூக தொண்டர் சேவை பணிகளை காத்தான்குடி குபா இளைஞர் கழகம் வழங்கியிருந்தது.
குறித்த சமூக நலன் பேணும் அமைப்பு குறுகிய காலத்தில் சுகாதார ரீதியான சமூகப் பணிகளை செய்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

















Read More