Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 21, 2015

Unknown

ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுத்த நவ முஸ்லிம் மீது சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்குதல்! மட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறை பதிவு

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டியை ஒட்ட வேண்டாம் எனத் தடுத்த காத்தான்குடி, பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த அ. முகமட் உமர் என்பவரைத் தாக்கியதுடன், அவரது வீட்டினுள் புகுந்து பாவனைப் பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்திய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிரான தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் இன்று 21.07.2015 செவ்வாய்க்கிழமை இரவு 09:20க்கு பதிவாகியுள்ளது.

இந்தத் தேர்தல் வன்முறைச் சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நவ முஸ்லிம் சகோதரரான அன்டனி முகமட் உமர் என்பவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

நேற்று 20ம் திகதி திங்கட்கிழமை மாலை 07:45 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் முகமட் நவாஸ் என அழைக்கப்படும் பரீட் என்பவரும், றிஸ்வான் என்பவரும் நான் கடமையாற்றும் கடைக்கு ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டுவதற்கு வந்தார்கள்.

அவற்றை ஒட்ட வேண்டாம் என நான் கூறினேன்.  அதற்காக அவர்கள் எனக்கு அடித்தார்கள். நான் அவசர பொலிசாரின் 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினேன். உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவதாகச் சொன்னார்கள். ஆனால் வரவில்லை.

இதனால் நான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றேன். உமது முறைப்பாட்டைப் பாரம் எடுக்க முடியாது என்று அங்கிருந்த பொலீசார் கூறினார்கள். அங்கே என்னைத் தாக்கிய சமுர்த்தி உத்தியோகத்தரும் பொலீசாருடன் இருந்தார்.

பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் சென்று 09ம் இலக்க வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். இவ்வாறு நான் வைத்தியசாலையில் தங்கியிருந்தபோது, எனது வீட்டுக்குச் சென்ற இந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், அவரது நண்பரும் அங்கிருந்த தொலைக்காட்சி மற்றும் கண்ணாடி கபேட் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்துள்ளார்கள். எனது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த அடாவடித்தனத்தினால் அவர் பலத்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்.

நான் வைத்தியசாலையில் இருந்தபோது அங்கிருந்த பொலீசார் என்னிடம் வாக்கு மூலம் பெற்றனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய நான் மட்டக்களப்பிலுள்ள தேர்தல் திணைக்களத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டேன். அவர்கள் எனது முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். காத்தான்குடிப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு எனது முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறும் கூறினார்கள். இதற்கமைய எனது முறைப்பாடு ஊஐடீ2ஃ365ஃ223ஃ என்ற இலக்கத்தில் காத்தான்குடி பொலிசால் பதிவு செய்யப்பட்டது.

என்றாலும் சம்பந்தப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரையும், அவருடன் வந்தவரையும் இதுவரை பொலீசார் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வந்து 17 வருடங்களாகின்றன. இவ்வாறான கீழ்த்தரமான, காடைத்தனமான அரசியல் அடாவடித்தனங்களை ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் ஆதரவாளர்கள் கைவிட வேண்டும். ஊடகங்கள் எனக்கு நடந்த இந்த அநியாயத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.





Read More
Unknown

கிழக்கு ஊடக சங்கத்தின் ஊடக அறிக்கை: தகவலறியும் உரிமை தொடர்பான விழிப்பூட்டும் பிரசுரங்கள் மட்டக்களப்பிலும் விநியோகம்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கிழக்கு ஊடக சங்கம் முன்னெடுத்து வரும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் சட்டத்திற்கு முரணான தேர்தல் நடவடிக்கைகளை வெளிக்கொணரும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் என்பன தொடர்பாக நேற்றைய தினம் (20ம் திகதி) திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரிலும், மகாத்மா காந்தி பூங்காவிலுமாக பொதுமக்களுக்கு பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. அதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.











Read More
Unknown

மட்டு. ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் வளரும் அரச மரம்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் மேற்பகுதியில் அரச மரம் ஒன்று காக்கை எச்சத்தினால் விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது குறித்து மேற்படி பள்ளிவாசல் நிர்வாகிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



Read More
Unknown

சக வேட்பாளர்களின் மானம், மரியாதையில் கை வைத்து விமர்சிக்காதீர்கள்: காத்தான்குடியில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

ஒரு முஸ்லிமுடைய மானம், மரியாதையில் கைவைப்பது, அவரை இழிவுபடுத்துவது, அவதூறு கூறி அநியாயமாக விமர்சிப்பது போன்ற இழி செயல்களை நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதன் காரணமாகவே இன்று முற்பகல் எனது பேச்சாளர்களையும், ஆதரவாளர்களையும் நான் எனது அலுவலகத்திற்கு வரவழைத்து மிகவும் நாகரீகமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கடந்த 20ம் திகதி திங்கட்கிழமை மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் அவர் தாக்கிப் பேசினார்.

ஒரு கட்டத்தில் அவரது முன்னாள் அரசியல் விசுவாசியாகவும், இறையச்சமிக்க 'தஃவாதாரி' என காத்தான்குடியில் அவரால் பகிரங்கமாகப் போற்றப்பட்டவருமான இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கை மறைமுகமாக (மென்டல்) ஒரு பைத்தியம் என்றும் அவர் இழித்துரைத்தார்.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுடன் இத்தேர்தலில் கூட்டுச் சேர்ந்து தனக்கு மிகப்பெரும் சவாலாக இம்மாவட்டத் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானையும் அவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியதுடன், இத்தேர்தல் முடிவுகள் வெளியானதுடன் அவரையும், இவ்வூரிலுள்ள நல்லாட்சிக்காரர்களையும் இந்த ஊரை விட்டே ஓட வைக்க வேண்டும் எனவும் அவர் பகிரங்க எச்சரிப்புடன் கேட்டுக் கொண்டார்.

முஸ்லிமுடைய மானம், மரியாதை குறித்து முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நேற்றைய தினம் உரையாற்றிய அதே இடத்தில் நின்றுதான், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகர சபைக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவர் உள்ளுர் பத்திரிகை ஆசிரியர் ஒருவரை உலமாக்களையும் மேடையில் வைத்துக் கொண்டு மிகக் கேவலமாக இழிவுபடுத்திப் பேசியதையும், அந்த ஊடகவியலாளரை நேரடியாகத் தாக்குமாறும் ஆக்ரோஷமாகப் பேசியதை இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்த பலரும் இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பேசிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

அவரது பேச்சின் ஆரம்பத்தில், வேட்புமனுவைத் தாக்கல் செய்த அன்றைய தினமே ஐ.ம.சு. கூட்டமைப்பினது ஆசனமும், தனது வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்து, தனது கடந்த காலத் தேர்தல் வரலாறுகள் எவற்றிலும் இவ்வாறான ஒரு இலகுவான வெற்றியை இறைவன் ஒரு போதும் தந்ததே இல்லை என்றும் புளகாங்கிதமாகக் கூறினார்.

எனினும், அவரது பிந்திய உரையின்போது, 27,000 விருப்பு வாக்குகளைப் பெற்றும் கூட தன்னால் ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், அதனால் இந்தத் தேர்தலில் தனது வெற்றி இலக்கை அடைய 28,000 விருப்பு வாக்குகள் தேவைப்படும் என்றும், காத்தான்குடி முஸ்லிம்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்காளர்களின் வாக்குகளும் தனது வெற்றிக்குத் தேவை எனக் கூறியபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அவரது உரை குறித்து அவரது தீவிர ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் முகஞ்சுளித்துக் கொண்டனர்.

வேட்புமனுத் தாக்கல் தினத்தில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, பின்னர் இவ்வாறு 28,000 விருப்பு வாக்குகளின் தேவை பற்றியும், தமிழ் மக்களின் வாக்குகளையும் பெறுவதற்காகவே முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதந்தாங்கிய முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட முன்னாள் பயங்கரவாதி பிள்ளையான்) போன்றவர்களையும் தான் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளதாகவும் கூறியதானது, அங்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் பொதுமக்களை சஞ்சலத்திற்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

எதிரணியினரின் பிரச்சாரத்தின்படி வெற்றிலைக்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் என்பதை வெகுவாக மறுத்துப் பேசிய முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, அவ்வாறு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்றால் காத்தான்குடியில் இருப்பவர்கள் குருணாகலைக்குச் சென்றே வெற்றிலைக்கும், மகிந்த ராஜபக்ஷவின் விருப்பு இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் விளக்கம் கூறினார்.

அவரது இந்த விளக்கத்தைக் கேட்ட வர்த்தகர் ஒருவர், இங்கே நாம் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளின் மூலமாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியலிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உறவுக்காரர்களும் எம்.பி.யாகி விட வாய்ப்பு ஏற்படும்தானே? என எதிர்க்கேள்வி எழுப்பியது பலரையும் சிந்திக்கத் தூண்டியது.

தான் இத்தேர்தலில் தோல்வியடைந்து, தமிழர் ஒருவர் ஐ.ம.சு. கூட்டமைப்பின் சார்பில் எம்.பி.யானாலும்கூட, தன்னையும் எம்.பி. ஆக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுடன் தான் தெளிவான ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருப்பதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனதுரையில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார். எனினும் அவ்வாறான ஒப்பந்தம் எதனையும் அவர் சமூகமளித்தவர்களின் முன்னால் எடுத்துக் காட்டவில்லை. இதுவும் அவரது வழமையான தேர்தல் பிரச்சார புருடாவில் ஒன்றாக இருக்கும் என மக்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.


Read More
Unknown

கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம்: ACJU வேண்டுகோள்



இலங்கை மற்றும் பாகிஸ்தான்
அணிகளுக்கு இடையே தற்போது
நடைபெற்றுக் கொண்டிருக்கும்
கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்
ஏதாவது ஒரு நாடு வெற்றி பெறலாம்.

ஆனால் வெற்றியின் போதும் போட்டி
நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும்நமது நாட்டின் ஐக்கியத்திற்கும்
சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படாத
வகையில் சகலரும் நடந்து
கொள்ளவேண்டும்.

எமது தாய் நாடான இலங்கையில்
முஸ்லிம்களாகிய எமக்கு நீண்ட கால
வரலாறு உண்டு. வரலாறு நெடுகிலும்
நாட்டுக்காக பல பங்களிப்புகளை செய்து, நாட்டுப் பற்றுடனும், ஏனைய
சமூகங்களுடன் ஒற்றுமையாகவும்
சகவாழ்வுடனும் வாழ்ந்துக்
கொண்டிருக்கின்றோம். காலாகாலமாக
முஸ்லிம்களுக்கும் ஏனைய
சமூகங்களுக்கும் இடையே
காணப்பட்டுவரும் ஒற்றுமையையும்
சகவாழ்வையும் சீர்குலைக்கும்
முயற்சியில் பல தீய சக்திகள்
ஈடுபட்டுவரும் இந்நிலையில்
சிறுபான்மையாக வாழ்ந்து வரும் நாம்
மிகுந்த அவதானத்துடனும்
நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.

19.07.2015 ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே.
கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிலர் விளையாட்டு
மைதானத்தில் பிழையாக நடந்து கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்
நிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச விளையாட்டுகளின் மூலம்
நாடுகளுக்கிடையிலான உறவுகள்
பலப்படுகின்றன. விளையாட்டுகள்
என்பவை ஓய்வு நேரத்தை குதூகலமாகவும் மனதுக்கு இதமாகவும் கழிப்பதற்கான
வாய்ப்புகளைத் தருகின்றன. மேலும் அவை
சிறந்த உடற்பயிற்சியாக அமைகின்றன.

இந்த எல்லைகளை தாண்டி பரஸ்பர
வெறுப்பையும் இன முறுகல்களையும்
தோற்றுவிக்கும் ஊடகங்களாக அவற்றை நாம் மாற்றிக் கொள்வது
புத்திசாலித்தனமானதல்ல. மேலும்
இவற்றை அடிப்படையாகக் கொண்ட
சூதாட்டங்கள் மற்றும் நேரத்தை வீணாகக் கழித்தல் போன்ற ஷரீஅத் தடைசெய்த
விடயங்களை ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற உணர்வுபூர்வமான
நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது
உலமாக்கள் தமது குத்பாப்
பிரசங்கங்களையும் உரைகளையும்; இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில்
அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் மஸ்ஜித் நிர்வாகிகள் இந்த விடயத்தில்
கவனம் செலுத்த வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா..

(ஜுனைட்.எம்.பஹ்த்)

Read More
Unknown

பொது தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை.


பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோனினால் ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கை, நேற்றைய தினம் அனைத்து அரச திணைக்களங்கள், அமைச்சுக்கள் மற்றும் காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரச வாகனங்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகெப்டர்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு ஒழுங்கு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தேர்தலுக்காக அரச வாகனங்களைப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும்,
அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குதல், இடமாற்றம் வழங்குதல் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச வாகனங்களை உடனடியாக கையளிக்குமாறும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More
Unknown

"மஹிந்தவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் திட்டத்தினுடனேயே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டியிடுகின்றார்": அப்துர் ரஹ்மான்



(புவி.எம்.ஐ.றஹ்மதுழ்ழாஹ்,ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

"நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியை இரண்டு முறை வகித்த ஜனாதிபதியொருவர், மீண்டும் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்கு பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிசயம் நமது நாட்டிலேதான் நடைபெற்றிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மட்டிட முடியாத பதவிப் பேராசைக்கு இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவது ஒன்றே சிறந்த உதாரணமாகும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC-NFGG கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராக மரச் சின்னத்தில் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
மேற்படி SLMC-NFGG அரசியல் கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (19.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி குட்வின் சந்தியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த அறிமுகக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான்,
அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,




"முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது சகாக்களும் இந்த நாட்டைக் கொள்ளையடித்து, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்கப்படுத்தி சர்வாதிகாரமாக ஆட்சி செய்த கொடூரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நல்லாட்சி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொது அணியாக நாம் அனைவரும் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததன் மூலம் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த அவர் வீட்டில் ஓய்வு பெற்றுக் காலத்தைக் கழிக்க விரும்பாது, மீண்டும் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் வந்து பின் கதவு வழியாகப் பிரதமராகி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் இப்போது தேர்தலில் போட்டியிடுகின்றார். அவரைப் பீடித்திருக்கின்ற பதவி அதிகாரப் பேராசை எப்படிப்பட்டது என்பது இதிலிருந்து அனைவருக்கும் நன்கு தெளிவாகியுள்ளது.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னெடுத்து வந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காமையினால்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களைத் தோல்வியடையச் செய்யும் நோக்குடன் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொதுத் தேர்தலுக்கான மாபெரும் அரசியற் கூட்டணியொன்று 'நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி' என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டணியில் ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா உள்ளிட்ட பல்வேறு அரசியற்கட்சிகளும் இணைந்திருக்கின்றன. அதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரான நாமும் இணைந்துள்ளோம்.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிகள் ஏற்படுத்தப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெரிவித்து வந்த அரசியல் கட்சிகள் தமது பொது எதிரியைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி சேர்ந்து செயற்பட்டு வெற்றி கண்டன.


கடந்த வட மாகாண சபைத் தேர்தலின்போது நாம் த.தே.கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துச் செயற்பட்டு தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்தினோம். அதேபோல, ஊவா மாகாண சபைத் தேர்தலில் நாம் ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைத்துச் செயற்பட்டு சிங்கள – முஸ்லிம் உறவைப் பலப்படுத்தினோம்.
கருத்தியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளும், அரசியற் செயற்பாட்டளர்களும் தமது பொது இலக்கை அடைந்து கொள்வதற்காகவும் தேசிய நலனில் அக்கறை கொண்டும் தேர்தல் காலங்களில் இவ்வாறு கூட்டிணைவதென்பது வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வருகின்ற விடயமாகும்.
அந்த அடிப்படையில்தான் இந்தப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாவது நாடாளுமன்ற ஆசனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தரப்புக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்குடன் நாம் ஸ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் நாமும், ஸ்ரீ.ல.மு.கா.வும் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
நாமும், ஸ்ரீ.ல.மு.கா.வும் தத்தமது தனித்துவங்களைப் பேணி புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்வதற்கும் உடன்பட்ட நிலையில்தான் நாம் இந்தத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதற்கு களமிறங்கியுள்ளோம் என்பதை இருதரப்பு ஆதரவாளர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காமல் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கு இறுதி நேரம் வரை இந்த மாவட்டத்தில் செயற்பட்டவர்தான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா. இப்போது அவர் தான் மைத்திரி அணியில்தான் போட்டியிடுவாமதாக சொல்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.
மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட ஹிஸ்புல்லா தொடர்ரந்தும் மகிந்தவின் விசுவாசியாகவே செயற்பட்டார். மைத்திரியினால் இமைக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்துவதறகான சதித்திட்டத்திலும் கையெழுத்திட்டவர்தான் இவர். இப்போது மகிந்த ராஜபக்ஷவை அடுத்த நாடாளுமன்றத்தில் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காகத்தான் இந்தத் தேர்தலிலே அவரும் போட்டியிடுகின்றார்.
ஒரு உண்மையான முஸ்லிமுக்கு மானம், ரோஷம், சுயகௌரவம் என்பதெல்லாம் சிறிதளவாயினும் இருக்க வேண்டும். ஆனால் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு இதுவெல்லாம் துளியளவும் கிடையாது. அவரது அரசியலின் மூலதனமே பொய்யாகும்.
அண்மையில்கூட, கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று ஒரு பெரும் பொய்யை எமது மக்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொல்லி அரசியல் ஆதாயம் பெற முயன்றுள்ளார்.
உண்மையில் அவருக்கும், மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இப்போதும் மிக நெருக்கமான தொடர்புகள் இருப்பதை எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். அண்மையில் நாம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்கூட அவற்றை நான் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தேன்.
எனவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின்போது எமது மாவட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரச்சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம் சமூகத்தின் பெயரால் போலிகளும், பொய்யர்களும் நாடாளுமன்றத்திற்குச் செல்வதைத் தடுத்து, நல்லாட்சியொன்றை இந்த நாட்டிலும், மாவட்டத்திலும் ஏற்படுத்துவதற்கு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மண்ணில் நாங்கள் முன்வைத்த நல்லாட்சிச் சிந்தனையானது, இன்று தேமசியளவில் அனைத்து அரசியல் தரப்பினராலும் அதிகளவில் பேசப்படுகின்ற, அமுலாக்கம் செய்ய ஆர்வங்காட்டப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருப்பதைக் கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்.
அந்தப் பெருமையிலும் அன்று இந்த நல்லாட்சி அரசியல் சிந்தனைக்கு ஆதரவாக வாக்களித்து வளர்த்த இந்தக் காத்தான்குடி மக்களுக்கு முதன்மைப் பங்கிருப்பது வரலாறாகும் என்பதையும் இத்தருணத்தில் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.'' என தெரிவித்தார்.

Read More
Unknown

திருமலையில் தமிழ்க் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள் கிடைத்தால் முஸ்லிம்களுக்கு ஒரு ஆசனம்

“வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்திருப்பதே எமக்குப் பலம், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும். அவ்வாறு வாக்களித்தால் மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற முடியும்.

அவ்வாறு பெற்ற ஆசனம் ஒன்றை முஸ்லிம்களுக்கே நாம் வழங்குவோம்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை நியூ சில்வஸ்டர் ஹோட்ட லில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது, மத்திய அரசாங்கத்துடன் இணைவதால் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் கிடைக்கப் போவதில்லை பிராந்திய அரசாங்கத்தி லேயே தான் அவர்களுடைய எதிர்காலம் தங்கியுள்ளது. அவ்வாறான பிராந்திய அரசாங்கத்தினை நாம் அடையப் போகின்றோம். அதனை யாராலும் தடுக்க முடியாது.

வழமையாக புல்மோட்டையில் இருக் கும் முஸ்லிம்கள் அன்று முதல் எம்முடன் இருக்கிறார்கள். இன்று எமது கூட்டத்திற்கு கிண்ணியாவில் இருந்து பல முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்துள்ளார்கள்.

முஸ்லிம் மக்களை பிரதிநிதித்து வப்படுத்தும் முதன்மை கட்சியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த தலைவர் அஸ்ரப்பிற்கு பின் மாரியுள்ளது. ஏன் இக்கட்சி திருகோணமலையில் தனியாக போட்டியிட முடியவில்லை. பெரும்பான்மை கட்சியின் உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோது சட் டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர்கள் ஒழிந்துகொண்டார்கள்.

அழுத்தகம, கொழும்பு, பேருவளை, தம்புள்ள சம்பவங்கள் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். அதற்கும் அஸ்வர் போன்ற முஸ்லிம்களே இடையூறு செய்தார்கள். அம்மையார் நவநீதம்பிள்ளை அவர்களிடம் எமது பிரச்சினையை பேசும்போது முஸ்லிம்களின் பிரச்சினையை பற்றியும் பேசினேன் அப்போது அவர் கூறினார். முஸ்லிம்களை பற்றி பேச நீங்கள் ஒருவராவது இருக்கிaர்களே என்றார்.

எனவே வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்திருப்பதே எமக்கு பலம் அவ்வாறு திருகோண மலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களை பெற முடியும். அவ்வாறு பெற்ற ஆசனம் ஒன்றை முஸ்லிம்களுக்கே நாம் வழங்குவோம் என தெரிவித்தார்.

Read More
Unknown

வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதிகளில் அலுவலகம் அமைக்க அனுமதி

போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் அலுவலகமொன்றை அமைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது 15 முதல் 25 பேர் வரையில் மட்டுமே செல்ல வேண்டுமென்றும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். பகிரங்க இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் விடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் நேற்று அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் செயலகத்தில் சந்தித்து உரையாடிய போதே மேற்கண்டவற்றை கூறியுள்ளார். விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தும் சட்ட ரீதியாக இருக்க வேண்டும் அச்சிட்டவர் மற்றும் அச்சகம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படுத்தப்படக் கூடாது. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும் இடத்திலிருந்து சற்று தொலைவில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எக்காரணம் கொண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கட்சிப் பிரதிநிதிகள் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன் பிரசாரங்களுக்கு வழங்கப் பட்டுள்ள நேர காலம் போதாது என்று சுட்டிக்காட்டிய கட்சிப் பிரதிநிதிகள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை யினை அதிகரித்து தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
வேட்பாளர்கள் அல்லது அவரது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வாக்கு கேட்டுச் செல்லக்கூடாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தினார்.
கூட்டிணைந்து போட்டியிடும் சிறு அரசியல்’ கட்சிகள் தேர்தல்கள் ஆணை யாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் வேட்பாளரின் வீடு ஆகியவற்றுக்கு மேலதிகமாக தேர்தல் அலுவலகம் அமைக்க முடியுமென்றும் ஆணையாளர் தெரிவித்தார்.
அந்த அலுவலகங்களில் வேட்பாளரின் பெயர், விருப்பு இலக்கம், பாரியளவிலான கட் அவுட் வைப்பதற்கும் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கட்சிகளின் பிரதிநிதிகளை அனுமதிப்பதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமிருப் பதாகவும் அவர் கூறினார்.

Read More
Unknown

“ மஹிந்தவை பிரதமராக்காவிடின் அரசியல் சுனாமி வெடிக்கும் ”

“இலங்கையின் அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே ஆகும். இதனை மாற்றமுனைந்தால் நாட்டில் அரசியல் சுனாமி வெடிக்கும்” என எச்சரிக்கை விடுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையே பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாகும். இந்த அரசியலமைப்பு ஷரத்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மீறப்பட்டதாகவும் அம் முன்னணி தெரிவித்தது.
கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் பிரதமராக மாட்டார் என்றும் ஜனாதிபதி அப்பதவியை வழங்கமாட்டாரென்றும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு எவருக்குக் கிடைக்கின்றதோ அவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படும். 
இந்த அரசியலமைப்பின் பிரகாரமே நாட்டில் பிரதமர் இதுவரைக் காலமும் நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அரசியலமைப்பு மீறப்பட்டு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 
100 நாட்கள் ஆட்சிக் காலத்திற்கான வாக்குறுதி வழங்கப்பட்டதால் அன்று பெரும்பான்மையாகவிருந்த நாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் 100 நாள் கடத்தும் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

எனவே பெரும்பான்மைப் பலமுடைய நாம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தோம். இதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் எமது முன்னணி அமோகமாக வெற்றி பெறும். பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மக்களும் அதனையே விரும்புகின்றனர். இவற்றையெல்லாம் மீறி மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்காமல் தடுத்தால். நாட்டில் அரசியல் சுனாமி வெடிக்கும். அடுத்த பிரதமர் மஹிந்தவே ஆவார். இதில் மாற்றம் இருக்காது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதனை எதிர்க்க மாட்டார். என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

virakesary.lk
Read More
Unknown

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார கூட்டம் .தலைவர் ரனில் கலந்துகொள்கிறார்


பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்காக  ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்  ரணில் விக்கிரமசிங்ஹ  இன்று (21) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு

வருகை தரவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட  ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் சிவில் சமூக அமைப்பின் தலைவருமான எஸ். மாமாங்கராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும், ஆதரித்து இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம பிரச்சாரகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ கலந்து கொள்கிறார்.


இப்பிரச்சார நிகழ்வு இன்று  மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)



Read More
Unknown

‘போதைக்கு முற்றுப்புள்ளி’ எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு

‘போதைக்கு முற்றுப்புள்ளி’ எனும் கருப்பொருளில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் ஏற்பாடு செய்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 8.00 மணிக்கு நடை பெற்றது.
காலை 8.00 மணிக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதியின் ஊடாகச் சென்று பின்னர் பாடசாலையை வந்தடைந்தது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது மாணவர்கள் பல்வேறு சுலோகங்களும் ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ttnnews
Read More